Monday, January 3, 2011

அந்த விழா தந்த திருப்புமுனை! by டாக்டர் ஹிமானா சையித்

சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலின் இரண்டாவது மாடியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பன்னோக்கு மண்டபம்! பள்ளியில் மஹ்ரிப்தொழுது முடித்து விட்டு அவசரமாக மண்டபத்துக்குச் சென்றேன்.கூட்டம் தொடங்கப்பட்டில்லை. முதல் வரிசையில் நான் சந்திக்கச் சென்ற முக்கிய மனிதர் இருந்தார்கள். என்னை அவர்கள் - அந்த நேரத்தில்-இடத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.ஓரு சில நிமிடங்கள் அன்புடன் உரையாடல். மாலை 6.15 மணிக்குத்தான்எனக்கு அவர்கள் அன்று சிங்கப்பூரில் உரை நிகழ்த்துகிறார்கள் என்ற செய்தி கிடைத்திருந்ததால், முக்கிய வேலைகளை ஒத்தி போட்டுவிட்டு ஓடோடிப் போனேன். சந்தித்ததில் பெரிய நிறைவு!
புகழனைத்தும் இறைவனுக்கே !
அந்த முக்கியப் பிரமுகர்..
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாவின் புதிய தலைவர் கண்ணியத்துக்குரிய மௌலானா ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி ஹளரத்அவர்கள். தேர்தல் முடிந்தவுடனேயே அவர்கள் உலமாக்கள் சபையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தகவல்தெரிந்திருந்தேன்.
'சிந்தனைசரம்' இதழில் அவர்கள் அளித்திருந்த பேட்டியையும் படித்திருந்தேன்.

அவர்கள் அப்போது சிங்கப்பூர் வந்திருந்ததுஅவர்கள் ஹஜ் வழிகாட்டியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த தனியார் ஹஜ் கமிட்டியின் சிங்கப்பூர் கிளை தொடக்க விழா சம்பந்தமா! ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தப்பட்டது. வழக்கம் போல் அழுத்தமான ஓர் உரையில் ஹஜ்ஜின் தத்துவார்த்தங்கள்-அதுபோழ்து சந்திக்க நேரும் பல நடை முறை சங்கடங்களும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும் அனைவருக்கும் புரியும் வண்ணம் விளக்கப் பட்டன.

1989 -ம் ஆண்டின் ஷ·பான் மாதம் பிறை 29 என நினைக்கிறேன்.மயிலாடுதுறையில்'மஸ்ஜிதே மஹ்மூதியா' புதிய பள்ளிவாசல் திறப்புவிழா.கிட்டத்தட்ட60 -70 ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட மிகப் பெரிய விழா  இலக்கியச் சித்தர் நீடூர் ஏ.எம்.சயீது அவர்கள் என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளாராக அழைத்திருந்தார்கள்.

நான் கதாசிரியர் ஆனது 1987 அக்டோபர் மாதம். ஆனால், இறையருளால், அவ்வளவு குறுகிய காலத்துக்குள்ளேயே பரவலான அறிமுகம் கிடைத்திருந்தது. சமுதாயத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது ஸாஹிப் அவர்களின் 'மணிச்சுடர்' நாளிதழ் என்னை சமுதாயத்துக்கு ஒரு சமுதாயக் களப்பணி ஊழியனாக அறிமுகம் செய்வித்திருந்தது. வாரம் இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதுவேன் என்பதால் ஏராளமான வாசக பலம்.

என்னுடைய உரையின் சாரம் சமுதாயத்துக்கு தாட்சண்யமில்லாமல் மார்க்கவிழுமியங்களை எடுத்துரைக்கும் ஆலிம்கள் தேவை என்பதாக இருந்தது. நான் அந்தத் தலைப்பைத் தேர்வு செய்ய சில காரணங்கள் இருந்தன. நேரிலும் - சில சமுதாயப் பெரியவர்கள் - நிர்வாகிகள் மூலம் கிடைத்திருந்த சில தகவல்களின் அடிப்படையில் அந்தத்தலைப்புத் தேர்வு!

நான் பல்லாயிரம் மக்கள் கலந்து கொள்ளும் அவ்வளவு பெரிய கூட்டத்தில்அதற்கு முன் உரைநிகழ்த்தியதில்லை. ஆக்ரோஷமான பேச்சு! இடையில் கொஞ்சம் குறுக்கிட்டு பேச்சின் காரத்தைக் குறைக்கலாமா? என்று கூட சயீது ஹாஜியார் அவர்கள் நினைத்தார்களாம். என் உரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கூட. மனதில் விளக்க முடியாத ஒரு பரவசம்; ஆனந்தம்!அகந்தை என்று கூடச் சொல்லலாம்.


எனக்குப் பிறகு பேச வந்தவர்கள் ஓ.எம்.ஏ.பாகவி அவர்கள்!அதற்கு முன் அவர்களை நான் நேரில் சந்தித்ததில்லை.அவர்களது உரைத் தொடக்கமே என் உரையைத் தொட்டதாயிற்று. அவர்கள் பேசப் பேச என்னுள் இருந்த
'கித்தாப்பு' சரியத் தொடங்கியது. அந்த நாள் - அந்த விழா -அவர்களின் அந்த உரை-என் களப்பணி வாழ்வில் ஒரு தெளிவையும், அடக்கத்தையும் திருப்பு முனையையும் தந்தது!

சமுதாயத்தில் ஆலிம்கள் எவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில் சமுதாயத்தில் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறர்¡கள்
என்பது பற்றி ஏற்கனவே 'முஸ்லிம் முரசு' இதழில் 'சங்கல்பம்' என் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன்.
என்றாலும் அன்று பத்து வரிகளில் ஹளரத் அவர்கள் கூறிய அறிவுரை அதன் பிறகு என்னை அப்பிரச்சினை பற்றி அதிகமாக உள்நோக்கிப் பார்க்க வைத்தது. அதன் பிறகு 'ஆலிம்களும் சமுதாயமும்' என்ற தலைப்பில்
மணிச்சுடரில் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். அதன் மூலம் மூத்த மார்க்க அறிஞர், ஜமாஅத்துல் உலமா மாத இதழின் ஆசிரியர் அபுல் ஹஸன் ஷாதலி ஹளரத் அவர்களின் பார்வையில் பட்டு, அவர்களது அன்பில் அவர்களது வாழ்நாள் முழுக்க இழையும் வாய்ப்பை அல்லாஹ் தந்தான்.

ஓ.எம்.ஏ. ஹளரத் அவர்களுடன் அன்று மயிலாடுதுறையில் ஏற்பட்ட அறிமுகம் பிறகு பல ஆலிம்களுடன் ஆரோக்கியமான தொடர்புகள் ஏற்பட வாய்ப்புக்களை உருவாக்கின. ஓ.எம்..ஏ.அவர்களுடன் தமிழகமெங்கும்
பல மேடைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்கள் அமைந்தன. அது ஒரு நீண்ட கதை! அன்று மயிலாடுதுறை விழாவில் அவர்கள் கேட்டார்கள்: "இன்று
மார்க்க மேடைகளுக்கு வந்து ஆக்ரோசமாக உரையாற்றும் உலகக் கல்விப் பட்டதாரிகளே!
உங்களுக்கு மார்க்கம் சொல்லித்தந்தவர்கள் யார்? நீங்களாகவா கற்றுக் கொண்டீர்கள்?
அதன் பின்னணியில் ஆலிம்கள் இல்லையா?ன்று ஆலிம்கள் நேரில் சொல்லி அறிந்திருப்பீர்கள் அல்லது ஆலிம்கள் எழுதியதைப் படித்து அறிந்திருப்பீர்கள் .. இல்லையா?"அதன் பிறகு நாங்கள் மேடைகளில் பல விழாக்களில் கலந்து கொண்டுள்ளோம். அவ்வப்போது என்னைப் போன்ற ஆலிம்கள்அல்லாத பேச்சாளர்கள் அன்று நான் மயிலாடுதுறையில் பேசிய பாணியிலேயே உணர்ச்  வசப்பட்டுப்பேசிய போதெல்லாம் ஹளரத் அவர்களது உரையில் அதற்கு ஏற்புடைய பதில் தந்து அவர்களையும் மென்மைப் படுத்தியதைக் கண்டிருக்கிறேன்.
ஓ.எம்.ஏ. பாகவி அவர்களிடம் உள்ள இன்னோர் உயர்ந்த -எனக்குப் பிடித்த அம்சம் அவர்கள் எந்தப் பேச்சாளர் பேசும்போதும் (அவர் ஓர் அறிமுகப் பேச்சாளராக இருந்தாலும் கூட)ஒரு மாணவனின் ஆர்வத்துடன்-கடமையுணர்வுடன் கொஞ்சமும் கர்வமில்லாமல் குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கமாகும். அது இன்றும் தொடர்கிறது; அன்று சிங்கப்பூரிலும்அதனைக் கண்டேன்! ஆலிம்கள் மீது அக்கறை கொண்ட  அவர்கள் ஆலிம்களின் பேரவையான 'ஜமாஅத்துல் உலமா'வுக்குத் தலைமைப் பொறுப்பை
ஏற்றிருப்பது உண்மையில் பொருத்தமானதே
.டாக்டர் ஹிமானா சையத்
( 'ஊற்றுக்கண்' எனது 36- வது நூல்.
அதில் சில கட்டுரைகள் என் வாழ்வில் சந்தித்த ஆலிம்கள்)

No comments: