Saturday, January 1, 2011

மனம் மகிழுங்கள் - 29 : குறிக்கோள் கொள்

மனம் மகிழுங்கள்!
29 - குறிக்கோள் கொள்
- நூருத்தீன்
யாராலும் ‘சும்மா’ இருக்க முடியாது! அனைவருக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறதோ?

ஆனால் அதுதான் உண்மை!

“அதெப்படி? தவமா தவமிருந்து பெத்து வெச்சுருக்கேனே நான் ஒன்ணு... என்னத்துக்காச்சும் உருப்படி உண்டா? வந்து பாருங்க. தூங்கறது.. எழுந்திருக்கிறது.. கொட்டிக்கிறது... இதத் தவிர ஏதாச்சும் செய்யுமா?”

அந்தக் கேள்வியிலேயே பதில் அடங்கியிருக்கிறது. தாயோ, தகப்பனோ, அவர்கள் புலம்போ புலம்பு என்று புலம்பும் அந்த மகனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது! அவன் தூங்கும்போதே மறுநாள் இரவு வருவதற்கு முன் ஏதாவது ஒரு நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே படுக்கச் செல்கிறான். எழும்போதே வந்து விழும் திட்டுக்களை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு ஏதாவது கொட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறான்.

அப்படியென்றால் “தெண்டம்” என்று எவருமே கிடையாதா?

இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது ‘குறிக்கோள்’, ‘திட்டமிடாத செயல்பாடு’ இரண்டிற்கும் உண்டான வித்தியாசத்தையே! மற்றபடி குறிக்கோள் நல்ல செயலுக்கா, கெட்ட செயலுக்கா என்பது வேறு விஷயம்.

குறிக்கோளே நம்மை நகர்த்துகிறது. போராளி இயக்கங்களைக் கவனித்திருக்கிறீர்களா? வாழ்வு அநிச்சயம் என்ற பொழுதிலும் ஆயுதமேந்திக் களத்தில் இறங்கி விட்டால் அவர்களின் நோக்கம் மட்டுமே அவர்களது கண் திரையில் அப்பிக் கொள்கிறது. சுமக்கும் இடையூறுகள், நேரும் இழப்புகள் எதுவும் அவர்களது சிந்தையைத் திருப்புவதில்லை.

அரசியல்வாதிகள்? அவர்களை விட்டுத் தள்ளுங்கள்; அவர்களுக்கு ஏகப்பட்ட குறிக்கோள்கள். சின்ன அளவில் பார்ப்போம். ஜேப்படித் திருடனுக்கும்கூட ‘நல்ல கூட்டமான பஸ்ஸாகப் பார்த்து ஏறி ஆட்டையப் போடணும்’ என்று ஒரு குறிக்கோள் அமைகிறது.

அரசு அலுவலர்களை மையமாகக் கொண்டு பல பரிகாசங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் உண்டு. என்ன சொல்ல? அந்தளவு உன்னதம் அரசாங்க நிர்வாகமும் அதன் பணியாளர்களும்! ஆனால் விந்தையான புள்ளி விபரம் ஒன்று உண்டு. பணியிலிருந்து குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற்றவுடன்தான் அவர்களில நிறையப் பேருக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறதாம். எப்படி?

வேலை புரிகிறார்களோ, இல்லையோ ஒரு குறிப்பிட்ட இயங்கு விசையில் தினசரி இயங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒரு முடிவுக் கோட்டைக் காட்டி உட்கார வைத்ததும் மனதில் ஓர் அதிர்வு ஏற்பட்டுத் திடீரென்று ஒரு நாள் நெஞ்சில் ‘அட்டாக்’! அல்லது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு, வாழ்க்கைக்கு “டாடா பைபை!”

காரணம், ‘அன்றாடச் செயல்பாடுகளில் வரையறுக்கப்பட்ட ஒரு குறிக்கோளுடன்’ வாழ்ந்து பழகி விடுகிறார்களா, ஓய்வு வந்துசேர்ந்ததும் வாழ்க்கையின் குறிக்கோளே முடிந்து போனதாய் நினைத்து திணறிப் போகிறார்கள்.

துறுதுறுவென்று ஏதாவது வேலை செய்பவர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களது குறிக்கோள் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்; ஏதும் முடியாவிட்டால் பக்கத்துவீட்டு எலக்ட்ரிக் பில்லையாவது எடுத்துச் சென்று கட்டித் தரவேண்டும்.

அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், பலர் பழுத்த பழங்கள்! காரணம் அவர்களது மூளை எப்போதுமே சுறுசுறுப்பாய் இருப்பதுதான். ‘யாரைக் கவிழ்க்கலாம், ஆட்சியை எப்படிப் பிடிக்கலாம், பிடித்துவிட்ட நாற்காலியை எப்படித் தக்க வைக்கலாம்’ என எந்நேரமும் சிந்தனை; குறிக்கோள். அதனால் அவர்களது மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் எண்பதுகள் தாண்டியும் அவர்களால் களத்தில் இயங்கிக் கொண்டே இருக்க முடிகிறது.
மனிதனுடைய இயல்பு குறிக்கோள். அது இல்லாமல் அவனால் வாழ இயலாது. அதாவது எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் ஓர் அஃறிணைப் பொருளைப் போல் மனிதனால் நெடுநாள் வாழ முடியாது. அந்தக் குறிக்கோள், அதன் வேகம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பவன் மெத்தனமாய் இருப்பவனைப் பார்த்து “தெண்டம்“ என்று திட்டுகிறான். ஆனால் மெத்தனமாய் இருப்பவனது பிரச்சனை குறிக்கோளின்மை இல்லை. பிரச்சனை அவனது செயல்பாடு அல்லது அவனது குறிக்கோளின் உன்னதமற்ற தன்மை! இங்கு வித்தியாசம் என்பது ப்ளைட்டில் பறக்கும் அம்பானிக்கும் மாட்டை ஆற்றிற்கு ஓட்டிக் கொண்டு செல்லும் மாடுமேய்ப்பவனுக்கும் இடையில் உள்ளது.

முக்கியமாய் நாம் உணர வேண்டியது யாதெனில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் முக்கியம்; அது கெட்ட சமாச்சாரத்திற்கானதாய் இருக்கக் கூடாது.

அவ்வளவே! மற்றபடி அது என்ன என்பதில் பிரச்சனை இல்லை!

சிலருக்கு வாழ்க்கையில் ஒன்றைச் செய்ய வேண்டும என்ற குறிக்கோள் இருக்கும். ஆனால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். காரணம்? தம் மனதில் இருக்கும் அந்தக் குறிக்கோள் தமக்குச் சரியானது தானா என்ற சந்தேகம். அதனால் அதில் முனைப்பில்லாமல் காலம் நகரும்.

ஒருவர் ப்ளஸ் டூ முடித்துப் பொருளாதாரத் தேவையால் நிர்பந்தமாய் வேலை ஒன்றில் சேர்ந்து விட்டார். மனதளவில் அவருக்கு மேற்கொண்டு படிக்க ஆசை. இதர நிர்பந்தங்கள் அவரது குறிக்கோளைத் தள்ளிப்போடுகின்றன. சில காலம் கழித்து அவரது பொருளாதார நிலைமை சீரடைகிறது. ஆனால் காலங்கடந்து விட்டதே; வயது அதிகமாகி விட்டதே; இப்பொழுது நம்மால் முடியுமா என்று அவருக்குத் தயக்கம். இப்படியே முப்பது ஆண்டுகள் ஓடி இப்பொழுது அவரிடம் குறிக்கோள் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் போதிய அவகாசம் இல்லை.

இவ்விதம் தள்ளிப் போடாமல் அவர் அப்பொழுதே கல்வியைத் தொடர முயன்றிருந்தால், அப்படியே படிப்பு மண்டையில் ஏறாமல் போயிருந்தாலும்கூட, “அட! முயன்று பார்த்தோம்; இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று புரிந்து விட்டது. அடுத்து வேறு குறிக்கோளைத் தேடுவோம்” என்று அவரது மனம் மாறியிருக்கும்.

‘நம்முடைய முயற்சி தவறென்றால் உற்றார் என்ன சொல்வார்கள்’;

‘எனது குறிக்கோள் தவறாகிப்போய் என் முயற்சி தோல்வியுற்றால் நான் வருத்தமடைந்து நொந்து போவேனே’ என்ற எண்ணத்திலேயே குறிக்கோளைத் தள்ளிப் போடுவதோ அதை முயலாமல் இருப்பதோ முறையன்று! அது மனதில் அயர்ச்சியை உண்டாக்கி மகிழ்வைத் தடுக்கிறது.

அப்படியல்லாமல் மனதிலுள்ள குறிக்கோளை முயன்று பார்க்க வேண்டும். ஒருக்கால் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அதுவும் ஒரு பாடமே. எப்படி?

உங்களுக்குச் சரிவராத அல்லது ஒத்துவராத ஒரு விஷயத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்றாகிறது! அடுத்தமுறை அதைச் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விடுகிறது.

மற்றவர்கள் தோல்வியை நினைத்து மனம் சோர்ந்து உட்கார்ந்து விடும்போது, வெற்றியாளர்கள் என்று உலகில் புகழப்படும் மக்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமோ?

‘தோல்வி வெற்றியின் முதல்படி’ என்று சொல்லிக் கொண்டு ‘அடுத்து என்ன செய்யக்கூடாது’ என்ற தெளிவுடன் ஆகவேண்டிய அடுத்த வேலையைப் பார்க்க ஆயத்தமாகி விடுகிறார்கள்.

னம் மகிழ, தொடருவோம்...
Source  http://www.inneram.com/2010123112794/manam29

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails