Sunday, August 8, 2021

ஒசக்கம்மா

 

ஒசக்கம்மா

பக்தி இலக்கிய மரபில் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் வரிசையில் தமிழுக்குக் கிடைத்த பெரும் வரம் செய்யிது ஆசியா உம்மா.

 

By பீர் முகமது 

அவங்க எப்பவுமேஹல்வத்தில இருப்பாங்களாம் என்று சொன்னார் ஷர்மிளா. “ஹல்வத்என்றால் என்ன என்று கேட்டேன். “தனிமையில் இருப்பதை, இறைநினைவோடு இருப்பதை அப்படிச் சொல்வோம்என்றார். அவங்க ஓதுவதும் தொழுவதுமாக இருப்பாங்க என்று சொன்னார் அகமது மரியம். கடல் மணல்ல உச்சிவெயில் சூட்டில தலய வச்சு ஸுஜூதுல (மண்டியிட்டு நிலத்தில் முகம் பதித்து இறைவனைத் தொழும் நிலை) நிறையநேரம் இருப்பாங்களாம். இத சேர்மன் யூசுஃப் சாஹிப்பே பார்த்திருக்காங்க என்றார் .சு.மு..பஷீர் அகமது. சதாசர்வ காலமும் இறைவனை நினைத்து உருகி உருகிப் பாடியிருக்கிறார் பஷீர் அகமதுவின் பாட்டியும் இறைநேசச் செல்வியுமான செய்யிது ஆசியா உம்மா. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1865ஆம் ஆண்டில் பிறந்து 1948இல் மறைந்திருக்கிறார் சூஃபி ஞானியான இவர். இவர் எழுதியுள்ள செய்யுள்களும் உரைநடையும்மெஞ்ஞான தீப ரத்தினம்என்ற பெயரில் நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. செய்யிது ஆசியா உம்மாவின் மகன் .சு.மு.அப்துல் காதிர் சாஹிப் மரைக்காயரின் மனைவி .சு.மு.ரஹ்மத்பீவி உம்மா இந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். வள்ளல் சீதக்காதியின் வழிவந்த ஹபீப் அரசரின் பரம்பரையைச் சேர்ந்தவர் செய்யிது ஆசியா உம்மா. இந்தத் தகவலை இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தின் ஆசிரியரான எம்.ஆர்.எம்.அப்துர்ரஹீம் உறுதிப்படுத்தியுள்ளார். வீட்டின் மேல் மாடியில் பெரும்பாலும் தவம் செய்வதும் பாடல்களை எழுதுவதுமாக இருந்ததால் இவருக்குமேல்வீட்டு உம்மாஎன்றும்ஒசக்கம்மாஎன்றும் ஊரில் பெயர் இருந்தது.

 

இவருடைய சில பாடல்கள் வழியாக இவரைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

 

உற்றோர் இனத்தோர் உகந்த நபி உம்மத்தோர்க்குக்

 

கண்ணோனே ஜெயம் தந்தேஎமை ஹலாசாக்குவாய்!

 

அல்லும் பகலும் என்ஆவி கெஞ்சுதே ஆண்டவா

 

சொல்லைக் கபூல்செய்தே துலங்கவே ஹலாசாக்குவாய்.

 

(ஃகலாஸு பைத்து)

 

பொருள்: ஹலாசாக்குவாய் என்றால் விடுதலை அளிப்பாயாக, நிவாரணம் அளிப்பாயாக, ஆறுதல் அளிப்பாயாக, மீட்சி அளிப்பாயாக என்று பல அர்த்தங்களைக் கொண்ட சொல் என்கிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் எம்.எம்.உவைஸ். எங்களுக்கு வெற்றியைக் கொடுப்பாய் இறைவா என்று இரவு பகலாய் இறைவனை மன்றாடும் பாடல் இது. எங்களுடைய சொற்களை, பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாய் (கபூல் செய்வாய்) என்ற விண்ணப்பத்துடன் பாடலை முடிக்கிறார் செய்யிது ஆசியா உம்மா.

 

அல்ஹம்து லில்லாஹி என்றே ஆதியே நித்தம் புகழ்ந்தேன்

 

சொல்செயல் குற்றங்களெல்லாம் தூராக்கியருள்வாய் ரஹீமே!

 

அல்லாஹ்வே யென்னிருள்நீக்கி அன்புடன் உன்னருள் நோக்கி

 

நல்லார் உகப்பை யுண்டாக்கி நலம்தா ரஹ்மான் ரஹீமே.

 

(முனாஜாத்து வல்லபம்)

 

பொருள்: யாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கும் இறைவனே எல்லாப் புகழும் உனக்கே என்று உன்னைத் தினமும் நான் புகழ்கிறேன். சொல்லாலும் செயலாலும் செய்த குற்றங்களை மன்னித்து அவற்றை எங்களிடமிருந்து அகற்றியருள்வாயாக ஆண்டவனே. என்னிலுள்ள இருளை நீக்கி அருளைக் கொடுத்து நல்லவர்களின் அன்பைப் பெற்று ஆரோக்கியமும் பெற்று சிறந்து வாழ உதவுவாய் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனே.

 

ஆதியே அழிவில் லானே அகத்தினுள் தெளிவா னோனே

 

ஜோதியே துணையில் லானே தோன்றவே துலங்கு வோனே

 

வேதியா டுள்ளம் தன்னை விளங்கியே விரிக்கின் றோனே

 

நீதியாக்கிடுவாய் எம்மை நித்தமும் கா ஆண்டோனே!

 

(ஆண்டவனின் முனாஜாத்து)

 

பொருள்: பிரபஞ்சத்தின் தொடக்கமானவனே. மனதுக்குள் தெளிவாகத் தெரிபவனே. ஒளியானவனே. துணையில்லாதவனே. நினைத்தாலே காட்சி தருகிறவனே. அறிவால் உள்ளத்தை விரிவு செய்கிறவனே. நியாயமாக நடக்கிறவர்களாய் எங்களை ஆக்குவாயாக. தினந்தோறும் எங்களைக் காத்தருள்வாயாக.

 

மூக்கினில் மூச்சுவாசம் முகத்தின்விழி பார்வையுமாய்

 

நாக்கினில் சத்தம் சுவையும் நாதனரு ளானந்தமே!

 

மேலான யோகனிலை மெஞ்ஞான தீபத்துடன்

 

நாலாம் படியேற நாதனரு ளானந்தமே!

 

(அருளானந்தக் கண்ணி)

 

பொருள்: மூக்கிற்கு மூச்சு விடுகிற ஆற்றலையும் நுகருகிற சக்தியையும் முகத்தில் பார்வையைத் தருகிற விழிகளையும் நாக்கிற்கு சப்தத்தை உருவாக்கும் சக்தியையும் சுவைக்கிற குணத்தையும் தந்த அருள் நிறைந்த ஆண்டவனே. உன்னுடைய திருப்பொருத்தத்தைப் பெறுகிற தகுதி கொண்ட ஆன்மிக ஒளியுடன் உன்னை வந்தடைகிற திறனைக் கொடுப்பாயாக இறைவனே. 

 

கர்ப்பப்பைக்குள் கண் சிரசு கைகால் வாய் மூச்சு சப்தம்

 

அற்புதமாய் இன்ஸானாய் அமைத்தவறி வானந்தமே!

 

இன்ஸானுக்குள்ளே இறை ஈரேழு லோக மெல்லாம்

 

இன்ஸான் தானாக இலங்குதறி வானந்தமே!

 

(அறிவானந்தக் கண்ணி)

 

பொருள்: கர்ப்பப்பைக்குள் கண், தலை, கை,கால், வாய், மூச்சு, சப்தம் ஆகியவற்றை அற்புதமாய் வடிவமைத்து மனிதர்களைத் தோற்றுவிக்கும் இறைவனே. மனிதர்களுக்குள்ளேயே உறைந்து அந்த உடலுக்குள்ளேயே பதினேழு உலகங்களைப் படைத்துக் காட்டிய பரம்பொருளே. உன்னை வணங்குகிறேன். இன்ஸான் என்றால் மனிதர் என்று பொருள். மனிதப் படைப்பு எத்தனை பெரிய அற்புதம் என்பதை வியந்து பாடும் பாடல் இது.

 

மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் நூற்றுக்கணக்கான பாடல்களையும் உரைநடையையும் எழுதியிருக்கிறார் செய்யிது ஆசியா உம்மா.”வாப்பா, எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான். அவன் கைவிட மாட்டான். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உலகத்தையெல்லாம் காப்பாத்த வந்தாங்க. ஐந்து வேளையும் கடமையான தொழுகையை விடாமல் தொழுதுவிடுஎன்று .சு.மு..பஷீர் அகமதுவிடம் சொல்லியிருக்கிறார். அரபுத் தமிழில்தான் தனது எழுத்துக்களைப் படைத்திருக்கிறார் ஆசியா உம்மா. அப்துல் ஹன்னான் என்கிற புலவரிடம் தனது கவிதைகளைப் படிக்கவும் செப்பனிடவும் தந்திருக்கிறார் இந்த சூஃபி ஞானி. வீட்டுக்கு வெளியே வரும்போது தனது ஆன்மிக குருநாதர் ஹல்வத் நாயகத்தைச் சந்திப்பார்கள். கீழக்கரைக் கடற்கரையில் தனது தென்னந்தோப்புக்குச் சென்றால் பத்து நாட்கள் வரைக்கும் அங்கேயே தியானத்தில் மூழ்கிவிடும் பழக்கம் இருந்தது. இவர் வசித்த இல்லம் கீழக்கரை ஓடைக்கரைப் பள்ளிக்கு அருகில் இருந்திருக்கிறது. இப்போது இல்லை. அதற்கு அருகிலேயே ஹபீப் அரசர் அடக்கஸ்தலத்துக்குப் பக்கத்திலேயே செய்யிது ஆசியா உம்மா இப்போதும் துயில்கொண்டிருக்கிறார். இவருடைய பாடல்களை அரபுத் தமிழிலிருந்து தமிழ் எழுத்து வடிவத்துக்குக் கொண்டு வந்தவர் புலவர் அகமது பஷீர். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர். எதைப் பற்றியும் ஒரு பாடலை உடனே கட்டுகிற அளவுக்கு மொழி வல்லமை செய்யிது ஆசியா உம்மாவுக்கு இருந்தது என்கிறார் அவர் வழி வந்த அகமது மரியம். அகமது மரியமும் எப்போதுமே திக்ரு (இறை நினைவு) செய்து கொண்டிருக்கிறார். ஓதுவதும் தொழுவதுமாக இருப்பது என்பது ஒசக்கம்மாவின் நினைவைப் போற்றுவதாகும்.

 http://ippodhu.com/%e0%ae%92%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/

செய்யிது ஆசியா உம்மா எழுதியதை இங்கே படியுங்கள்

No comments: