Sunday, August 8, 2021

ஏழை வரி (ஜக்காத்) பற்றி பெண் சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மா சொன்னது இதுதான்

 

ஏழை வரி (ஜக்காத்) பற்றி பெண் சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மா சொன்னது இதுதான்

Sufi Saint-Poet Sayyid Asiya Ummal is in the league of Karaikal Ammaiyar and Andal. An excerpt from her writing on zakat (poor tax).

 


By இப்போது-

Sayyid Asiya Umma (1868 to 1948) is a woman Sufi Saint and poet from Kilakarai in Tamil Nadu.

தமிழின் பக்தி இலக்கிய மரபில் காரைக்கால் அம்மையார் (6ஆம் நூற்றாண்டு), ஆண்டாள் (7ஆம் நூற்றாண்டு) வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மா. இன்றைய ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1868இல் பிறந்தவர். 1948ஆம் ஆண்டு கீழக்கரையில் இறையடி சேர்ந்தவர். இவருடைய படைப்புகளில் முக்கியமானதுமெஞ்ஞான தீப ரத்தினம்.” கவிதையாகவும் உரைநடையாகவும் ஆசியா உம்மா தான் பெற்ற ஆன்மிக அறிவைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உரைநடை வடிவிலான பகுதிக்குதரீகுஸ் ஸாலிஹீன்என்று பெயர். அதில் ஜக்காத் (ஏழை வரி) பற்றி செய்யிது ஆசியா உம்மா சொல்லியிருப்பதை அப்படியே கீழே பதிவு செய்துள்ளோம். ஜக்காத்தை இறைவனுக்குச் சரணாகதி அடைவதுடன் ஒப்பிடுகிற அந்தக் கடைசி வரிகள் இந்த சூஃபி கவிஞரது பரந்துபட்ட மெய்ஞான அறிவுக்கு ஓர் அடையாளம்.

 

நூறு ரூபாய் நம் கைவசம் இருந்தால், இரண்டரை ரூபாய் ஜக்காத்துக் கொடுக்க வேண்டியது நமக்கேற்பட்ட கடன். ஜக்காத்து, ஸதகாவை கோபம், கடுகடுப்பு, கொடுகொடுப்பு, முணுமுணுப்புடனே கொடுக்கவே கூடாது. இப்படிக் கொடுத்தால் அதில் யாதொரு சவாபு பிரயோஜனமும் கிடையாது. அல்லாஹு தஆலா நமக்கு முதலைத் தந்து, ஏழைகளுடைய முதலையும் ஒன்றாகச் சேர்த்துத் தந்திருக்கிறான். ஆதலால் அவர்களுக்குக் கொடுக்கிற விதம் குளிர்ந்த முகமாகவும், இரக்கச் சிந்தனையுடன், உகப்புடனே கொடுக்க வேண்டியது. நமக்குத் தந்த முதல், ரிஸ்குகளில் எத்தனையெத்தனை ஹல்குகளுக்கோ (படைப்புகளுக்கு) அல்லாஹ் பங்கிடுகிறான். எத்தனை காக்கை குருவியோ, பூனை நாயோ, எறும்போ, மனுவோ இவற்றிற்குப் போகிறது. ஏக ரப்புல்ஆலமீன் ரிஸ்கு கொடுக்கும் விதங்களை நன்றாய்க் கவனித்து ஆழிய கருத்தாய் ஆராய்ந்துணர்!

 

எனது நஃப்ஸே! ரிஸ்குகள் என்பது நெல்லோ, புல்லோ, தானியங்களோ, பழவர்க்கங்களோ மற்றும் ஏதேது வஸ்துக்களோ ஒன்றும் நமக்குள்ளதல்ல. நமது கெட்டித்தனத்தைக் கொண்டும் விளைந்து வந்ததுமல்ல. இவை அல்லாஹு தஆலாவுடைய குத்ரத்தில் நின்றும் விளைந்து வந்தது என்று ஃபிக்ரென்ற நோட்டமிட்டுப் பார். இந்த ரிஸ்குகளை நமக்குத் தந்த அவனை உணர்ந்து, தெளிந்து, அவனுடைய வலுப்பத்தையும் குத்ரத்தையும் அறிந்து ஓர்மைப்படுத்தவென்று விஸ்வாசித்து அறிந்து கொள்ள வேண்டியது.

 

பின்பு ஜக்காத்துடைய அந்தரங்கம், நமக்குள்ளிருக்கும் நூரென்னும் ரூபஒளிவு நம் முன் நின்றாட ஆசை கொண்டு, ஒரே ஹிம்மத்துடன் நமது சடலத்தையும் கல்பையும் கண், நாவு, காது, பேச்சு, மூச்சு, ரூஹு இவைகளை எல்லாம் அல்லாஹு தஆலாவுக்கு ஒப்பந்தம் பண்ணிக் கொடுத்து விடுவது.

நன்றி http://ippodhu.com

No comments: