Thursday, September 12, 2019

நான் எப்படி முஸ்லிம் லீக் கட்சியில் உறுப்பினரானேன்...


நான் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியருக்கு ஒரு வழக்கறிஞனாகத்தான் அறிமுகமானேன். அவர் திமுக சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் முஸ்லிம் லீக் தலைவராக இருக்கக் கூடாது என ஒரு வழக்கும், முஸ்லிம் லீக் தலைவர் என்பதால் திமுக சின்னத்தில் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஒரு வழக்கும்...

பத்தாயிரம் வழக்ககறிஞர்கள் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வெற்றிக்கெதிரான வழக்கை திறம்பட நடத்த ஒரு பத்து மூத்த வழக்கறிஞர்கள்தான் இருப்பார்கள்.. ஆனால் நண்பர் ஒருவரின் அறிமுகத்தின் மூலம் பேராசிரியர் இரு வழக்குகளையும் என்னிடம் ஒப்படைத்தார்.

மக்களவை உறூப்பிணர் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் வழக்கு என்பதால் அந்த மூத்த வழக்கறிஞர்கள் ஆரம்ப ஃபீஸ் தொகையாகவே பல இலட்சங்கள் வாங்குவார்கள்...



என்னிடம் தரப்பட்ட வழக்குகளை என் நெருங்கிய வழக்கறிஞர் நண்பருடன் இணைந்து நடத்த முடிவெடுத்தேன். ஏனெனில் அவர் சிவில் வழக்குகளை நடத்துவதில் மிகுந்த திறமைசாலி... பல இலட்சம் ஃபீஸ் தொகை வரும் அதை இருவருமே பங்கிட்டுக் கொள்ளலாம் என்பது என் எதிர்பார்ப்பு..

முதலில் வழக்கு தொடர்ந்திருந்தவர் வாங்கியிருந்த தடையாணைகளை உடைத்து விட்டு எங்களின் ஃபீஸை பெற்றுக் கொள்ளலாமென இருந்தேன். அதன்படி அனைத்து தடையாணைகளையும் உடைத்தோம்.. மிகுந்த எதிர்பார்ப்போடு அவரிடம் சென்று ஃபீஸ் குறித்து கேட்டேன்.. உடனடியாக ஒரு காசோலையை எழுதி என்னிடம் தந்தார். இடி விழுந்தது போலானது.. அதில் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் எழுதியிருந்தார்.. காசோலையை கொடுத்த பின்னர் அதை உடனே வங்கியில் செலுத்த வேண்டாமென்றும், ஒன்றாந் தேதிக்குப் பின் செலுத்துமாறும் சொன்னார்.. அப்போதுதான் அவர் கணக்கில் மக்களவை உறுப்பிணருக்கான சம்பளப் பணம் செலுத்துவார்களாம்... இன்னொரு இடி என் தலையில் இறங்கியது போல் இருந்தது..

நேராக என் வழக்கறிஞர் நண்பரிடம் சென்று மிக சோகமாக விவரத்தைக் கூறினேன். அவர் மிகுந்த ஆச்சரியப்பட்டார்... ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், மக்களவை உறுப்பிணர், ஒரு பத்தாயிரம் ரூபாய் தரக்கூட தன் சம்பளத்தை எதிர்பார்த்து நிற்கிறாரா...?? இப்படிப்பட்ட ஒரு அரசியல் தலைவருக்கு நாம்தான் பாதுகாப்பளிக்க வேண்டும். இனி அவரிடம் ஃபீஸ் வாங்க வேண்டாம்.. ஊதியமின்றி வழக்கை நடத்துவோம் என முடிவெடுத்தார். இருவரும் இணைந்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் அவ்வழக்குகளை வெற்றிகரமாக முடித்தோம்.

முஸ்லீம் அல்லாத நான் முஸ்லிம் லீகின் அங்கமாக மாறியது அந்த தூய்மையான தலைவரின் பண்புகளால்தான்..

லீகில் இணைந்து இந்த 15-ஆண்டுகளில் இது போன்ற நூற்றுக்கணக்கான அனுபவங்கள் அவருடன்... வரலாறுகளில் மட்டுமே வியந்தோதக் கூடிய தலைவர்களை படித்திருக்கிறேன். சம காலத்தில் ஒரு வரலாற்று நாயகனோடு பயணிப்பதில் மிகுந்த கர்வங் கொள்கிறேன்.
--வழக்கறிஞர் ஜீவா கிரிதரன்
சென்னை.

(இயக்க, கட்சித் தலைவர்கள் குறித்த கேள்வி என்பதால் இந்த பின்னோட்டம்..பதிவுக்கு சம்மந்தமில்லாததாக கருதினால் பொறுத்துக் கொள்ளுங்கள்...😊)
சகோதரர் சிறாஜுல் ஹஸன் அவர்களின் ஒரு பதிவுக்கு வழக்கறிஞர் பின்னூட்டம்

Colachel Azheem

No comments: