Wednesday, February 27, 2019

நைஜீரியாவின் பிரதமர்தான் என் மிகப்பெரிய எதிரி

நான் ஒரு தமிழ்க் கவிஞன், என் எழுத்துக்கள் இணையம் முழுவதும் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் நண்பர்கள் அறிமுகம் ஆகும்போது இணையத்தில் உங்கள் கவிதைகளை எங்கே வாசிக்கலாம் என்று கேட்டால், என் பெயரை கூகிளில் இட்டுத் தேடுங்கள் என்று என்னால் சொல்ல முடியாது. காரணம் நைஜீரியாவின் பிரதமர் புகாரி.

வெகுகாலம் தொடர்பு விட்டுப்போன பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உறவுகள் என்று எவரும் புகாரி என்று என் பெயரை இட்டுக் கூகுளில் தேடி என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது. என்றால் இந்த நைஜீரியா புகாரி எனக்கு எத்தனைப் பெரிய எதிரி?


கடந்த ஞாயிறு 2019 பிப்ரவரி 24 அன்று தமிழர் தகவல் எனக்கு ஒரு விருதும் தங்கப்பதக்கமும் தந்து கௌரவித்தது. அதே வாரம் நைஜீரியா தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மீண்டும் பிரதமராய் ஆனால் நைஜீரியா புகாரி. Buhari என்று எவராவது என்னைத் தேடி கூகுள் தேடல் நிகழ்த்தினால் இந்த நைஜீரியா மனுசனின் சுட்டிகள்தான் படபடவென்று வந்து குவியும். என் செய்தி ஒன்றுமே கண்ணில் படாது. என்றால் இந்த நைஜீரியா புகாரி எனக்கு எத்தனைப் பெரிய எதிரி?

என் மின்னஞ்சல் பெட்டி நிறைய வாழ்த்துச் செய்திகள். திறந்து பார்த்தால் பெரும்பாலானவை நைஜீரியா பிரதமருக்கானதுதான். ஏனெனில் என் மின்னஞ்சல் முகவரி buhari@gmail.com. நைஜீரியாவின் பிரதமருக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் முகவரி இல்லை. நைஜீரியா பிரதமருக்கு மட்டுமல்ல, இன்னும் உலகெங்கிலும் உள்ள ஏராளமான புகாரிகளுக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் இல்லை. எனக்கு மட்டுமே கிடைத்த வரம் அது.

எப்படி என்றால் நான் இணையத்தில் தொடங்ககாமல் முதலாகவே கவிதைகள் எழுதிவருவதால் கருத்தாடல்களில் கலந்துகொள்வதால், கூகுளின் மின்னஞ்சல் சேவை தொடங்கியபோது எனக்கு என் பெயரிலேயே கிடைத்துவிட்டது.

கூகுள் தன் மின்னஞ்சல் சேவையை மக்களுக்கு வழங்கியபோது வெறுமனே அதைப் பெற்றுவிட முடியாது. ஏற்கனவே ஜிமெயில் வைத்திருப்பவர்கள்தான் அழைப்பு விடுக்கமுடியும். எழுத்துத்துறை நண்பர்கள் எனக்கு ஜீமெயில் தொடங்கியபோதே அழைப்பு விடுத்துவிட்டார்கள், ஆகவேதான் buhari@gmail.com எனக்குக் கிடைத்தது இல்லாவிட்டால் buhari2000, buhari3000, buhari123 என்று ஏதோ எண்கள் இட்டுத்தான் எனக்குக் கிடைத்திருக்கும்.

அந்த வகையில் நைஜீரியா பிரதமர் புகாரிக்கு நான் பெரும் எதிரியாகிவிடுகிறேன்.

ஆகவே நண்பர்களே, என்னைத் தேட கூகுள் வந்தால் வெறும் buhari என்று இட்டுத் தேடாதீர்கள் anbudan buhari என்று இட்டுத் தேடுங்கள், Kavingar Buhari என்று இட்டுத் தேடுங்கள், நிச்சயம் நான் வருவேன். என் ஆக்கங்கள் வரும். நன்றி

https://www.bbc.com/news/world-africa-47380663l

https://anbudanbuhari.blogspot.com

கவிஞர் புகாரி

No comments: