Sunday, June 19, 2016

அன்புத்தொல்லை

அப்துல் கையூம்

 நான் விடுமுறையில் ஊர் போக திட்டம் போட்டிருந்தால் என் தந்தையிடம் முன்கூட்டியே அறிவிப்பதை தவிர்த்து விடுவேன். டார்ச்சர் என்றால் டார்ச்சர் அப்படியொரு டார்ச்சர். நானும் எவ்வளவுதான் பொறுத்துப் பார்ப்பது..? இந்த மாதக் கடைசியில் ஊர் வருகிறேன் என்று நான் முதல் வாரத்திலேயே சொல்லி விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அவ்வளவுதான். நான் எப்பொழுது டிரைவிங் செய்கிறேனோ அந்த நேரம் பார்த்துதான் என் தந்தை போன் பண்ணுவார்.
“ஹலோ,..!  நான்தாம்பா பேசறேன். ஊர் வருகிறேன்னு சொன்னியே ..அது இந்த மாசம் 28-ஆம் தேதிதானே..?”
“ஆமாம். இந்த மாசம்தான். அதுதான் நான் அன்னிக்கே சொன்னேனே..?  மிஸ்ட் கால் கொடுத்தால் போதும் நானே பண்ணுவேனே..? ஏன் உங்க காசை வேஸ்ட் பண்ணிக்கிட்டு. இப்ப நான் டிரைவிங் பண்ணிக்கிட்டு இருக்கேன், அப்புறமா போன் பண்ணுறேன். நீங்க போனை வைங்க”
காரில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் கூட போயிருக்க மாட்டேன். மறுபடியும் போன் மணி ஒலிக்கும்.

“ஹலோ..! நான்தாம்பா பேசுறேன். காலண்டர்லே பார்த்தேன் 28-ஆம் தேதி புதன்கிழமை வருது. மெட்ராஸுக்கு எத்தனை மணிக்கு ப்ளைட் வந்து சேருது..?
“ஹலோ.. நீங்க போனை வைங்க. கொஞ்ச நேரத்துலே நானே போன் பண்ணி விவரம் சொல்றேன்”
இந்த அன்புத்தொல்லை அந்த மாதத்தின் இறுதிவரை இடைவிடாமல் தொடரும். அதே விசாரிப்புகள். என்னுடைய அதே பதில்கள்.
“ப்ளைட் எத்தனை மணிக்கு வருது?” “எந்த ஏர்லைன்ஸ்?” “அந்த ப்ளைட் சிலோன் போய்ட்டு வருதா இல்லை டைரக்டா மெட்ராஸ் வருதா? “யாரெல்லாம் வர்றிங்க..?” “லக்கேஜ் நிறைய இருக்கா?” “கார் பெரிய வண்டி அனுப்பவா அல்லது சின்ன வண்டி போதுமா..?” “என்னாலே அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ண முடியாது. டிரைவர் மாத்திரம் வந்தா போதுமா அல்லது வேறு யாரையாவது கூட ரிசீவ் பண்ண அனுப்பவா..?”
அதே கேள்வி. அதே பதில். எனக்கு அலுத்துப் போய்விடும். என் கோவத்தை என் மனைவியிடம் வந்து காட்டுவேன்.
“இனிமே ஊருக்கு போற தேதியை இரண்டு நாளுக்கு முன்னாடி நீ ஊருக்கு இன்ஃபார்ம் பண்ணுனா போதும். டார்ச்சர் தாங்க முடியலே. ஒரு நாளைக்கு அஞ்சு போன்கால் வாப்பாவிடமிருந்து வருது. ஆபிஸ்லே நிம்மதியா வேலை பார்க்க முடியலே. பயங்கர டார்ச்சர்.”
“பிள்ளைக் குட்டிங்களை பார்க்கணுங்கற ஆர்வம் அவுங்களுக்கு இருக்காதா? கொஞ்சம் பொறுமையா பதில் சொன்னாத்தான் என்ன..? நீங்க என்னா கொறைஞ்சா போயிடப் போறீங்க..?”
விடுமுறையில் ஊர் போகும் நாளும் வந்துவிடும். பேக்கிங் முடித்துவிட்டு ஏர்போர்ட்டுக்கு குடும்பத்துடன் தயாராகிக் கொண்டிருப்போம். தகப்பனாரிடமிருந்து போன் அங்கிருந்து சரமாரியாக வரும்.
“நேரமாச்சே..! ஏர்போர்ட்டுக்கு நீங்க எல்லோரும் கிளம்பிட்டீங்களா…? எல்லாரோட பாஸ்போர்ட்டையும் எடுத்துக்கிட்டியா..? டிக்கட்… அதையும் மறந்துட வேண்டாம். புள்ளைங்களோட கையை பத்திரமா புடிச்சுக்கோ. இங்கேயும் அங்கேயும் ஓடுவாங்க..?”
சென்னை போய்ச் சேர்ந்த பிறகும்  நாகூர் வரை நான் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக்கொண்டே போக வேண்டும். அதேபோன்று என் தந்தையும் ஊரில் இருக்கும் என் மற்ற தம்பி தங்கைகளுக்கு அப்டேட் செய்துக்கொண்டே இருப்பார்.
“திண்டிவனத்துலே.. ஆர்யாஸ் ஓட்டல்லே என்ன சாப்பிட்டீங்க..? என்று என் இன்னொரு தங்கை போன் பண்ணி விசாரிப்பாள். நாங்கள் அப்போதுதான் சாப்பிட்டு முடித்துவிட்டு கை அலம்பிக்கொண்டிருப்போம்.
“காரைக்கால்வரை வந்துட்டாங்களாம்” என்று அறிவிப்பை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வீட்டின் வாசலில், பின்புறம் கைகட்டிக் கொண்டு, குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருப்பார்.
இந்த வருடமும் விடுமுறையில் ஊர் செல்லும் நாள் நெருங்கி விட்டது. இன்னும் ஒருமாதம் இருக்கிறது. இப்போது என் தந்தை உயிருடன் இல்லை. நான் டிரைவிங் பண்ணும்போது, பழைய மாதிரி யாராவது எனக்கு போன் செய்து டார்ச்சர் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
 ஊருக்கு போவதை நினைத்தாலே சூன்யமாக இருக்கிறது. என் தந்தையிடமிருந்து வரும் அந்த போன் தொல்லை எவ்வளவு இனிமையானது. அதை நினைக்கையில் என் கண்கள்  குளமாகி விடுகின்றன.
இனி யாரும் எனக்கு போன் செய்து டிக்கெட், பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொண்டாயா..?  என்று ஞாபகப் படுத்தப்போவதில்லை.
அப்படி அவர் போன் செய்யும்போதெல்லாம் என் தந்தையின் மீது எவ்வளவு எரிந்து விழுந்திருப்பேன் என்று நினைக்கையில் என் நெஞ்சம் வெடிக்கிறது. இன்னும் எனக்கு சற்று வயது கூடிய பின்னர் நானும் இதுபோன்றுதான் என் பிள்ளைகளுக்கு போன் செய்து டார்ச்சர் கொடுப்பேனோ..? . தெரியாது.
இன்று தந்தையர் தினமாம்.
. உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா? கார் பங்களா வைத்திருப்பவர்களோ அல்லது ஆறு இலக்க ஊதியம் பெறுபவர்களோ அல்ல. தாய், தந்தையர்களின் பாச மழையில் நனையும் பிள்ளைகள் தான்

- அப்துல் கையூம்
SUNDAY, JUNE 19, 2016

No comments: