Tuesday, June 23, 2015

அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன ? ஞானம் !

நாம் கேட்டுப் பெறவில்லை இந்த பிறப்பை, அது போலவே, நாம் விரும்பி பெறப்போவதுமில்லை இனி வரும் இறப்பை. ஆனாலும் பிறந்திருப்பதும், அதனால் இனி இறக்கப் போவதும் மெய்யான மெய்யே. அப்படியெனில், தன்னை வெளிப்படுத்தி தன் வல்லமை காண விரும்பிய ஆதி அவன்; விரித்ததில் விரிந்து பரந்த சிதறல்களே நம்மையும் சேர்த்த எல்லா உயிர்களின் பிறப்பும் இறப்பும் என்றடங்கிய தொடராய் நீட்சி பெறும் உலகின் எத்தனையோவான அத்தனை காட்சிகளும்.

ஆதியும் அந்தமுமாக இருக்கிற, ஆக்கமும் அழிவும் என்கிற இரண்டு சக்திகளையும் ஒன்று போலவே தன்னகத்தே கொண்டிருக்கும் அந்த மகா சக்தியே படைத்தவன் என்கிற நிலையில், ஆற்றலும், ஆக்கமும், இரக்கமும், வெற்றியும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் என்கிற நேரான பண்புகளில் மிகைத்திருக்கும் அதே வல்லமை பெற்றிருப்பவன், தான் படைத்த எல்லா படைப்புக்களிலும், மனிதப் படைப்புக்கள் மட்டுமே தோல்வி என்றாவதை ஏற்றுக் கொள்வானா, தன்னால் படைக்கப்பட்ட உச்சமான மெச்சத் தகுந்த ஒரு படைப்பே தீராத தண்டனைக்கு ஆட்படுவதை சகித்துக் கொள்வானா, மிகைத்த மனிதர்களின் தோல்வியால் தன் படைப்பின் நோக்கமே மகத்தான தோல்வி என்றாகிப் போவதையும்தான் ஒப்புக் கொள்வானா ?

உயிர் படைத்து, அத்தோடு அதற்கு ஒரு விதி இணைத்து, கூடவே தீய வழி காட்ட மட்டுமே ஒரு சாத்தானையும் அருகில் இருக்க அனுமதி கொடுத்து, விதிப்படியேதான் முதல் மூச்சிலிருந்து இறுதி மூச்சு வரை மனிதர்களின் வாழ்வும் மரணமும் என்ற சூத்திரத்தை அமைத்த அந்த சூத்திரதாரிக்கு தெரியாதா தவறு செய்தவன் என்று கருதப்படுபவன், தானாக இயங்க முடியாத கையறு நிலையில் இருந்து கொண்டிருந்த அந்த மனிதனா இல்லை தானேதான் அப்படி வடிவமைத்தவனா என்று. இறை சூட்சுமம் அல்லது இறை இரகசியம் என்பது மனிதர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது, அதன் உள்ளே ஊடுருவிச் செல்லும் திறன் உலகில் யாருக்குமே இருக்க முடியாது, என் முயற்ச்சியெல்லாம், சற்றே அதை தொட்டுக் காட்ட மட்டுமே.

படைப்பின் நோக்கமே தன்னையும் தன் வல்லமையையும் தானே உணர்ந்து கொள்ளவே என்றிருக்கையில், அதை ஆரம்பம் செய்ததில், உவப்புடன் ஊ...வென்று ஊதி வைத்த உயிர் படைப்பில், தன் நோக்கம் முழுமையாய் நிறைவடைந்து போவதில், அத்தனை சந்தோஷங்களையும் கொண்டே அதை முடித்து வைக்கவும் செய்வான், எண்ணங்களை எல்லாம் தனதாக்கிக் கொண்டிருக்கும், நம் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாலுக்கும் அப்பால் மிகைத்திருக்கும் எக்காலத்துக்குமான வெற்றியாளன் அவன்.

 இங்ஙணம், படைப்பின் வெற்றியாளன் என்கிற அவனுக்கு மட்டுமே உரிய பெருமை நிலையிலிருந்து ஒருபோதும் நழுவி விடவே முடியாத அவன் சிறப்புத் தன்மையினால் மட்டும், நாமெல்லாம் மீட்சி பெறக் கூடியவர்களே என்கிற உறுதியான நம்பிக்கையை உறுதியாக பெற்றுக் கொள்வதோடு, அந்த நம்பிக்கையை இன்னமும் வலுப்படுத்தும் நோக்கில், இனியும் தொடரும் வாழ்வில் நம் நிலையறிந்து அதற்கேற்ப நன்மைகளை வைராக்கியமாக தொடர்வதே இறைத்தன்மையை முழுமையாக அறிந்தவர்களின் முறையான செயலாக இருந்து கொண்டிருக்க முடியும்.

இப்படியாக, பிறப்பும் இறப்பும், வேதங்களும் நபிமார்களும், கேள்விகளும் பட்டோலையும், நன்மையும் தீமையும், சிராத்துல் முஸ்தகீன் பாலமும் அதன்வழி நடத்தலும், நரகமும் சொர்க்கமும், மலக்குகளும் ஜின்களும், எல்லாமும் அப்படி, அப்படியே நடப்பாக இருந்தாலும், உலக மொத்தமும் முடிந்து விட்ட அந்நாளில், மஹ்ஷரின் நிகழ்வுகளுக்கு ஏதோ ஒரு பின்னாளில், இறைவனால் போதிக்கப்பட்டு தூதர்களால் மனிதர்களுக்கு அறியப்படுத்தப்பட்டிருக்கும் அத்தனை விஷயங்களையும் அடிபிறழாமல் அப்படியே ஒப்புக் கொள்ளும் நேரம், அதையும் தாண்டி, மறை தந்தவன் அவன் வசமே மறைத்து வைத்திருக்கும் அந்த ஒரு புதுச் செய்தி, உயிர்களுக்கான அதியற்புத நற்செய்தி அவனுக்கு மட்டுமே தெரிந்திருக்கிற ஒன்றாகவே இருந்து கொண்டிருக்கிறது என்னும் மிக ஆழமான நம்பிக்கையில் எழுந்ததே மேற்படி எண்ணங்கள்.

அதுவன்றி, அடிப்படைகளை தகர்த்திடும் நோக்கமோ, அதற்கான அவசியமோ ஏற்பட்டு விடவில்லை. அல்லாமலும், எனக்கே எனக்கான, கருணை நிரம்பிய, எந்நேரமும் இரக்கமே மேலாதிக்கம் கொண்டிருக்கிற, என்றைக்குமே இனிமையாகவே இருக்கிற ஒரு இறைவனை, நாளையில் நான் தரிசிக்க நினைக்கும் எண்ணத்தில், எந்த குறுக்கீடுகளும் வர முடியாதுதான், வரவும் கூடாதுதான் !

(அன்றைக்கு தொடங்கி இன்றைக்கு வரை, என் மனதில் அப்பிப் கிடந்த அத்தனையான அஞ்ஞான பேதமைகளையும் அகற்றி, மெஞ்ஞான சிந்தனைகளால் எனை நிறைத்து வைத்த, எந்நாளும் என் மரியாதைக்குரிய குருவாக நான் கருதிக் கொண்டிருக்கும், வாவு பிள்ளை ராஜாவின்  மூத்த சகோதரர் முஹம்மது மைதீன் சாஹிப் அவர்களுக்கு இந்த பதிவை உவப்புடனும் நன்றியுடனும் சமர்ப்பணம் செய்வதில் நான் மன நிறைவடைகிறேன்)


Raheemullah Mohamed Vavar

No comments: