Monday, February 2, 2015

சுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு!

நான் படித்தது என்னவோ 12 ஆம் வகுப்பு வரை தான். 12(ப்ளஸ் டூ) பாஸ் பண்ணியவுடன் பாஸ் போர்ட் எடுத்து சேல்ஸ் மேன் வேலைக்காக சவுதி வந்து விட்டேன். இங்கு வந்து 7 அல்லது எட்டு வருடங்கள் சேல்ஸ் மேனாகவே பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. எங்கள் கம்பெனியில் அலுவலக வேலை அனைத்தும் எகிப்தியர்கள் கையில் இருந்தது. எகிப்தியர்கள் பொதுவாகவே தங்களை அறிவில் சிறந்தவர்கள் என்று எப்போதும் எண்ணிக் கொள்வர். (நம் ஊர் பார்பனர்களைப் போல) நம் ஊர் பார்பனர்களும் எகிப்திலிருந்து நம் நாட்டுக்கு புலம் பெயர்ந்ததாகத்தான் ஆய்வுகளும் சொல்கிறது. பேசும் ஸ்டைல், அலுவலக வேலைகளை மாத்திரமே குறி வைப்பது, நிறைய படிப்பது, நிறம், முக அமைப்பு என்று ஏறத்தாழ நம் ஊர் பார்பனர்களை பார்பது போலவே இருக்கும். மோசே காலத்தில் எகிப்தியர்கள் மாட்டை கடவுளாக வணங்கி வந்தனர் என்று குர்ஆனும் கூறுகிறது. நம் நாட்டு பார்பனர்களுக்கும் மாட்டை தெய்வமாக பூஜிக்கும் வழக்கம் இன்றும் உள்ளதை நாம் காண்கிறோம். பழைய பதிவர் டோண்டு ராகவன் கூட தாங்கள் யூதர்களின் ஒரு பிரிவு என்று சொல்லி பதிவுகளே எழுதியுள்ளார்.
எனது பாஸ் ஏதும் ஒரு வேலையை அலுவலகத்தில் வேலை செய்யும் எகிப்தியர்களிடம் கொடுத்தால் அவரிடம் வாக்கு வாதம் செய்வது, தேவையில்லாமல் வேலையை தள்ளி போடுவது என்று சில பிரச்னைகள் அவ்வப்போது வரும். எனது பாஸூக்கும் இந்த எகிப்தியர்களைக் கண்டாலே பிடிக்காது. இவர்களை அனுப்பி விட்டு சூடான் அல்லது இந்திய ஆட்களை அலுவலகத்தில் வைத்தால் என்ன? என்று யோசித்துள்ளார்.

ஒரு நாள் என்னிடம் 'நஜீர்..... நீ அலுவலகத்தில் வேலை செய்கிறாயா?' என்று கேட்டார்.

'எனக்கு அலுவலக வேலை தெரியாதே'

'ஆங்கிலமும் அரபியும் தான் ஓரளவு உனக்கு தெரியுமே'

'அலுவலக வேலை பார்பதற்கு இது மட்டும் போதாதே. கணக்குப் பதிவு தெரிந்திருக்க வேண்டும். கணிணி அறிவும் இருக்க வேண்டும்'

'அதைப் பற்றி நீ கவலைப் படாதே! உனக்கு வேலை செய்ய பிரியமா?'

'ஓ.... செய்கிறேன். ஆனால் தவறுகள் ஏதும் நடந்து விட்டால் என்னை குற்றம் பிடிக்கக் கூடாது'

'உன்னால் முடியும். அதுவும் எனக்கு தெரியும். உனது நண்பர்களிடம் சென்று ஒரு மாதம் கணிணியைக் கற்றுக் கொண்டு வா. அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.'

பாஸ் உத்தரவிட்டதால் எனது ஊர் நண்பர்களிடம் சென்று பணம் கட்டி அடிப்படை கணிணியை எவ்வாறு கையாள்வது என்று கற்றுக் கொண்டேன். வேர்ட், எக்ஸெல், இண்டர் நெட் என்று ஒவ்வொன்றாக இரண்டு மாதத்தில் கற்றுக் கொண்டு விட்டேன்.

அதன் பிறகு அலுவலகத்தில் வேலை செய்த இரண்டு எகிப்தியரில் ஒருவர் தனது நாட்டுக்கு விடுப்பில் சென்றார். அந்த இடத்தில் என்னைக் கொண்டு உட்கார வைத்தார் பாஸ். மற்றொரு எகிப்தியரிடம் 'நஜீருக்கு அனைத்து வேலைகளையும் சொல்லிக் கொடு' என்று சொல்லி விட்டு பாஸ் சென்று விட்டார். இங்கு தான் பிரச்னை ஆரம்பமானது.

'நீ.... ஆபீஸ் வேலை பார்க்கப் போறியா?' கவுண்டமணி செந்திலைப் பார்ப்பது போன்ற எகிப்தியனின் ஒரு ஏளனப் பார்வை. 'ஆபீஸ் வேலை என்ன வென்று உனக்குத் தெரியுமா?' அதே கிண்டல்... :-(

'அதெல்லாம் எனக்கு தெரியாது. பாஸ் சொன்னார். நான் வந்துள்ளேன்.'

இப்படி சிறு சிறு உரசல்கள். பிரச்னைகள். இப்படியே நான்கு மாதம் ஓடியது. எனது கம்பெனியின் முக்கிய வியாபாரம் மர சாமான்கள் சம்பந்தப்பட்டது. பெட்ரூம், கிட்சன், டைனிங் டேபிள், வீட்டு அலங்கார பொருட்கள் என்று பலவற்றையும் விற்கிறோம். நான்கு பெரிய ஷோரூம்கள். அதன் வரவு செலவு கணக்குகளை கணிணியில் ஏற்றி அக்கவுண்டஸூம் பார்க்க வேண்டும். இதனை அந்த எகிப்தியன் கற்றுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்.

இதை தெரிந்து கொண்ட எனது பாஸ் இன்வென்ட்ரி, அக்கவுண்டஸ் இரண்டையும் கற்றுக் கொள்ள ஒரு கம்பெனிக்கே என்னை அனுப்பினார். அதோடு எங்கள் ஊர் அக்கவுண்டன்ட் பஷீர் என்ற நண்பரிடம் வியாழன் வெள்ளிக் கிழமைகளில் சென்று கணக்குப் பதிவின் அடிப்படைகளையும் கற்றுக் கொண்டேன். விடுமுறை நாட்களில் சகோதரர் பஷீரை ரொம்பவும் தொந்தரவு பண்ணியுள்ளேன். சளிக்காமல் சிரித்துக் கொண்டே அவரும் எனக்கு பாடங்களை எடுப்பார். இந்த நாட்களில் நான் ரொம்பவும் சிரமப்பட்டுள்ளேன். இப்படியாக இரண்டு மாதம் கழிந்து ஒரு நாள் பாஸ் அலுவலகத்துக்கு வந்து அந்த எகிப்தியரிடம்...

'இனி நஜீர் கணிணியில் அமரட்டும். நஜீரின் வேலையை சரியாக செய்கிறாரா என்று கண்காணிப்பது உனது வேலை' என்றார்.

எகிப்தியனுக்கோ மிகுந்த கோபம். 'ஏன் என்னை மாற்றுகிறாய்?' என்று பாஸிடம் கேட்டார்.

'உனக்கு இதை விட சிறந்த வேறு வேலை இருக்கிறது. இனி நஜீர் உனது வேலையை பார்க்கட்டும்'

அன்றிலிருந்து கணிணியில் வேலை ஆரம்பமானது. எனது அலுவலக வேலையும் அன்று தொடங்கி இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் பல பிரச்னைகள். சண்டைகள். 'தமிழன்டா நான்.....' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அனைத்து பிரச்னைகளையும் சமாளித்தேன்.

சம்பளம் போடுவதும் எனது வேலைகளை சரி பார்பதுவுமே அந்த எகிப்தியரின் வேலையாக மாறிப் போனது. என்னை முன்னிருத்தி எகிப்தியனை பின்னுக்கு தள்ளியதால் வேறு கம்பெனிக்கு வேலை தேடி அந்த எகிப்தியன் சென்று விட்டார். ஊருக்கு சென்ற எகிப்தியரும் திரும்பி வரவில்லை. மூன்று பேர் வேலை செய்த அலுவலகத்தில் இன்று நான் ஒருவனே! மூன்று பேர் வேலைகளையும் பார்த்துக் கொண்டு ஃபேஸ் புக்கிலும் கம்பெனி செலவில் கடலை போட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். :-)

எப்படியோ அலுவலகத்தில் 10, 15 வருடங்கள் ஓடி விட்டது. என்னைப் போல பலருக்கு சவுதி ஒரு டிரெய்னிங் சென்டர் என்றால் மிகையாகாது. இன்னும் இறைவன் எத்தனை காலம் கொண்டு செல்கிறானோ பார்போம். பிரச்னைகள் இன்றி வாழ்வு முன்பு போல் அமைதியாக இஸ்லாம் காட்டித் தந்த வழியில் இனியும் பயணிக்க நீங்களும் பிரார்தனை செய்யுங்கள் நண்பர்களே!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails