Monday, February 16, 2015

வெளிநாட்டு வேலை


இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் வெளிவேலை வாய்ப்புகள்தான் ஓரளவு ஏழைகளுக்குக் கைகொடுத்திருக்கிறது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தோ, வெளிநாடுகள் சென்றோ வேலைகளைத் தேடிக்கொண்டு, தாமும் பிழைத்து, தம்மை நம்பியுள்ள குடும்பத்தையும் பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கானோர்.

ஒரு இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவசாயக் கூலி வேலை செய்வோர்தான் நம் பகுதியில் அதிகம். ஏர்உழுவது, மாட்டு வண்டிகளில் பாரம் ஏற்றிச் செல்வது, வயக்காட்டு களங்களில் சூடு அடிப்பது, நெல் தூற்றுவது, சிலவேளைகளில் நாற்று நடுவது, களைபிடுங்குவது, கதிர் அறுப்பது போன்ற கைவேலைகளில்தான் நம்மவரில் பெரும்பாலோர் ஈடுபட்டிருந்தனர். ஆடு, மாடு மேய்ப்பவர்களும் இருந்தனர்.

மிகச் சிலர் நெல் வியாபாரம், பெட்டிக் கடை, காய்கறி வியாபாரம் என்று சிறு, குறு வியாபாரிகளாக இருந்தனர். படிப்பு என்று எடுத்துக்கொண்டால் தொடக்கப் பள்ளி முடித்தவர்களே அதிகம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பெல்லாம் சிலருக்கு மட்டுமே வாய்த்த வரமாக இருந்தது. கல்லூரி பட்டப்படிப்பு பற்றிக் கேட்கவே வேண்டாம். கைவிட்டு எண்ணிவிடலாம். அரசாங்கப் பணியில் இருந்தவர்களோ அரிதிலும் அரிது.

பெரிய நிலக்கிழார் குடும்பங்கள், தோட்டந் துரவுகள் வைத்து பண்ணைத் தொழில் செய்த குடும்பங்கள், ஏலமலைத் தோட்ட முதலாளிகளின் குடும்பங்கள் மட்டுமே அந்தக் காலத்தில் சிலாக்கியமாக வாழ்ந்தார்கள். அக்குடும்ப ஆண்பிள்ளைகள் கொஞ்சம் படிக்கவும் செய்தார்கள். இந்த மேட்டுக்குடிகள் வைத்ததே ஊரில் சட்டம். சாலையோரத் திண்ணைகளில் அமர்ந்திருக்கும் சாமானியர் இவர்களைக் கண்டவுடன் எழுந்து நின்று மரியாதை செய்யும் சமூக நிலை.

குடும்பச் சண்டைகள், அடிதடி வழக்குகள், வரப்பு வாய்க்கால் தகராறுகள்... எனஎந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்சாரிகள் அணுகுவது இந்த நிலக்கிழார்களைத்தான். அவர்கள் அளிப்பதே தீர்ப்பு; அதற்கு இல்லை அப்பீல். நீதியோ அநீதியோ வாய்பொத்தி ஏற்பதைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. எதிர்த்துப் பேசும் திறனற்ற அப்பாவிகளே பெரும்பான்மை.


சுருங்கக்கூறின், கல்வித் தகுதியோ, பொருளாதார வளமோ, சமூக அந்தஸ்தோ, குடும்பப் பின்பலமோ ஏதுமின்றி வாயில்லாப் பூச்சிகளாக வாழ்ந்தனர் பெரும்பான்மை மக்கள். ஒன்று படிப்பு இருந்திருக்க வேண்டும்; அல்லது சொத்து சுகம், நிலபுலம் இருக்க வேண்டும்; அல்லது வெளியேறிச் சென்று தொழில்களைக் கற்று முன்னேற வழி தேடியிருக்க வேண்டும். முன்னேற்றத்திற்கான எந்த வழியும் இல்லாதபோது, அல்லது வழி இருந்தும் அதைப் பயன்படுத்தத் தெரியாதபோது என்ன செய்ய முடியும்?

இந்த நிலையில்தான், தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் வெளிநாட்டுக் கதவு – குறிப்பாக வளைகுடா நாடுகளின் கதவு– திறந்தது. மக்கள் படையெடுத்தனர். கிடைத்த–தெரிந்த வேலைகளில் அமர்ந்தனர். விசா ஏற்பாட்டிற்காகவும் பயணச் செலவிற்காகவும் காடு கழனி, காணி வயல் ஆகியவற்றை விற்றோ, அல்லது அடைமானம் வைத்துக் கடன் பெற்றோ விமானம் ஏறினார்கள். இவர்களில் அநேகருக்கு விமானப் பயணம் என்பது முதல் தடவை.

‘சில ஆண்டுகள்’ என்ற கனவில் புறப்பட்ட இவர்களால் இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாகியும் வேலையைக் கைகழுவிவிட்டு சொந்த மண்ணில் செட்டிலாக முடியவில்லை; கால்பதிக்க இயலவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை அட்டைபோல் ஒட்டிக்கொண்டுவிட்டது. இளமை மட்டுமன்றி முதுமையின் முற்பகுதியும் வெளியேதான் கழிகிறது. சிலர் வாரிசுகளை அனுப்பிவிட்டு, ஊரிலே பேரன், பேத்திகளைக் கவனித்துக்கொண்டு காலத்தைக் கழிக்கிறார்கள்.

ஒன்று மட்டும்உண்மை. இவர்கள் பிறந்த மண்ணைத் துறந்து வெளியே சென்றிருக்காவிட்டால் நாலு காசு பார்த்திருக்க முடியாது; வீடு வாசல் கண்டிருக்க முடியாது; தோட்டம் துரவுகள் வாங்கியிருக்க முடியாது. ஆம்!  மண் அல்லது காரைவீடுகளெல்லாம் பல லட்சம் மதிப்புள்ள மாடி வீடுகளாகி இருக்க முடியாது. பிள்ளைகளை எம்.பி.ஏ., பி.இ.; பி.காம்; எம்.காம் எனப் படிக்கவைத்துப் பட்டதாரிகளாக்கியிருக்கவோ பெண்குழந்தைகளை பி.ஏ; பி.எஸ்.ஸி; பி.காம் வரைக்குமோ குறைந்தபட்சம்10 அல்லது +2 வரைக்குமோகூடப் படிக்கவைத்திருக்கவோ முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இதையெல்லாம்விட, மகளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்திருக்க முடியாது. ஊர் வழக்கங்களில் பெண்பேசத் தொடங்கியதிலிருந்து, பெண் பார்த்தல், திருமணம், அதன் பின்சேர்க்கைகள், பெண்ணின் மகனுக்கு ‘சுன்னத்’ செய்தல், மகளுக்குக் காதுகுத்து, பெண்ணின் மகள் வயதுக்கு வந்துவிட்டால் செய்யப்படும் சடங்கு என குரங்குவால்போல், பெண்ணைப் பெற்றவர்களுக்குச் செலவுகள் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவற்றையெல்லாம் மனம் விரும்பியபடி, ஊர் மெச்சும்படி செய்து முடித்திருக்க முடியாது.

அவ்வாறே பையனின் படிப்பு, படிப்பிற்குப்பின் வேலை வாய்ப்பு, அதையடுத்து பெண்தேடும் படலம், கல்யாணம்… எனச் சுமைகளும் செலவுகளும் ஏராளம். “நாங்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்படிச் சமாளித்திருப்போம்? சொல்லுங்கள்” என்று இவர்கள் கேட்பதை அடியோடு மறுக்க முடியாது.

(எளிய திருமணம் ‘விரலுக்கேற்ற வீக்கம்’ என்பதுபோல் சிக்கனமான வாழ்க்கை முறை; சடங்குகளை ஒழித்தல்; தகுதிக்கேற்ற வரன்… என்பன போன்ற இயல்பான வாழ்க்கையே போதும் என்ற மனம் இருப்பின் வெளிநாடு போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று சொன்னாலும் கேட்பதற்குக் காதுகள்தான் இல்லை.)

இங்கே உலக வங்கியின் அறிக்கை ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்:

வேலை தேடியும் வேறு காரணங்களுக்காகவும் ஊர் விட்டு ஊர் செல்லும் தொழிலாளர்களின் வாழ்வில் வருவாய், நுகர்வு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் குறைந்துவருகின்றன. ஏற்றத்தாழ்வு என்பது வெறும் பணம் அடிப்படையில் மட்டுமல்லாது, சமூகரீதியாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

(இன்று யார் வீட்டில் ஃபிரிட்ஜ், ஏசி, இரு சக்கர வாகனம், நவீன சாதனங்கள் இல்லை? யாருடைய பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்காமல் இருக்கிறார்கள்? யாருடைய பெயரில் வங்கியில் இருப்பு இல்லாமல் இருக்கிறது? இதைத்தான் இங்கு அறிக்கை கோடிட்டுக்காட்டுகிறது போலும். அறிக்கை முடியவில்லை…)

காலங்காலமாக சமூக அடுக்கில் கீழ்நிலையில் அழுத்திவைக்கப்பட்டிருந்த சமூகத்தினர் தொடர் வேலை, நல்ல ஊதியத்துக்காக நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்ததால் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் இழிவிலிருந்தும்கூட விடுபட முடிந்திருக்கிறது. (இது அநேகமாக தலித் மற்றும் மலைசாதி மக்களைக் கருத்தில் கொண்ட தீர்மானம் என நினைக்கிறேன்.) சிறுபான்மையினருக்கு எல்லா அரசுகளும்(?) சட்டரீதியாக அளிக்கும் பாதுகாப்பு காரணமாக அவர்கள் முன்னேற முடிகிறது.

கிராமங்களில் ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்பட்டு, பொருளாதார வளர்ச்சியும் சமூக அந்தஸ்தும் இல்லாமலிருந்த மக்கள், வேலைக்காக நகரங்களுக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கும் இடம்பெயரும்போது, முன்பு பெற்றதைவிட அதிக ஊதியத்தையும் சுதந்திரத்தையும் பெற முடிகிறது. (தி இந்து)

எல்லாம் சரிதான். உள்ளூரைவிட்டு நகரங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ வேலைதேடிச் சென்றதால் பொருளாதார வளம் சற்றே பெருகியுள்ளது; வசதிகள் வந்துள்ளன; சமூக அந்தஸ்தும் கூடியுள்ளது… இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், ரியால்களுக்காக, திர்ஹம் தீனார்களுக்காக நம் இளைஞர்கள் கொடுத்த விலை ஈடு செய்ய இயலாதது என்பதையும் மறைக்க முடியவில்லை. ஆம்! படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு வெளிநாடு சென்றவர்கள் பலர். அந்தப் படிப்பு இருந்திருந்தால் உள்நாட்டிலேயே வேலை கிடைத்திருக்கலாம்! அல்லது பட்டத்தோடு வெளிநாடு சென்றிருந்தால், கூடுதல் சம்பளத்துடன் அந்தஸ்தான வேலை கிடைத்திருக்கக்கூடும். எதிர்காலத்திலும் அதை வைத்து ஏதேனும் வேலையில் உட்கார முடியும்.

திருமணம் முடித்த கையோடு– லீவு முடிந்தபின் – இளம் மனைவியைவிட்டுப் பிரிந்துசெல்லும் சோகம் இருக்கிறதே! வார்த்தையில் வடிக்க இயலாதது. வாடும் இரு உள்ளங்களைத் தேற்ற சொற்கள் கிடையாது. இதற்கு ஈடாக்க் கோடி கொடுத்தாலும் அது ஈடாகாது.

குழந்தை பிறந்துவிட்டாலோ மழலை மொழி கேட்க, பிஞ்சுக் கரங்களைத் தொட, ஆவலோடு தூக்கி நெஞ்சோடு அணைக்க, தந்தைக்கும் பிள்ளைக்குமான அந்த மானசீக இதயத் துடிப்பை அனுபவிக்க முடியாத அவலம் கொடியது. தாயை, தந்தையை, அண்ணனை, தம்பியை, அக்காளை, தங்கையை, தாத்தாவை, பாட்டியை அருகில் இருந்து பார்க்க, பேச, சந்திக்கவியலாத துரதிருஷ்டம்!

ஊரில் – உறவில் நடக்கும் நன்மை தீமைகளில் கலந்துகொள்ளவோ பங்கெடுக்கவோ முடியாமல் அந்தக் காட்சிகளை மனத்திரையில் அல்லது வீடியோவில் பார்த்துப் புழுங்கும் தருணங்கள் வருத்தமானவை. சில வேளைகளில், சொந்த மகள் அல்லது மகன் திருமணத்திலேயே கலந்துகொள்ள முடியாத மனவலி! அங்கே யாரிடம் சொல்லிஅழுவது! இலவு காத்த கிளியாக இளமை காத்துக்கிடக்கும் துயரம்!

சரி! அப்படியே எல்லா இழப்புகளையும் தாங்கிக்கொண்டு, சின்ன வயசு ஆசாபாசங்களைத் தியாகம் செய்து சம்பாதிக்கும் பணத்தை முறையாகக் கையாளும் நிதி ஆளுமை நம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் இருக்கிறதா என்றால், அதுவும் பூஜ்யம்தான்; அவர்கள் வரைமுறையின்றி டாம்பீகமாகச் செலவழிக்க வேண்டியது; சிறு தலைவலி என்றால்கூட, கார் பிடித்து டவுணுக்குப் போய் வைத்தியம் பார்க்க வேண்டியது; சிக்கனமோ சேமிப்போ இல்லாமல்– கணக்குப் பார்க்காமல்– செலவு செய்ய வேண்டியது; இறுதியில் ஓய்வெடுக்க வேண்டிய வயதில் பணத்திற்கு அல்லாட வேண்டியது! இது தேவைதானா?

ஏன் பணம் அனுப்பும்போதே, தேவை இவ்வளவு எனக் கணக்கிட்டு, பட்ஜெட் போட்டுக் குறிப்பிட்ட தொகையை மட்டும் அனுப்பக் கூடாதா? மீதியைச் சேமிக்கக் கூடாதா? பெண்களும் பணத்தின் அருமை புரிந்து, சிக்கனமாகச் செலவழிக்கக் கூடாதா? வீடே கட்டுகிறோம் என்றால், அளவான பட்ஜெட்டில் தேவைக்கேற்ற வகையில் கட்டி முடிக்கலாமே! பல லட்சங்களை வீட்டில் முடக்க வேண்டுமா? பெருநாள், திருமணம் போன்ற விசேஷங்களுக்கும் கணக்கோடு செலவு செய்தாலென்ன?

மார்க்கத்தில் இல்லாத பிறந்த நாள், திருமண நாள், நண்பர்களின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு, பெண்கள் நாள், புத்தாண்டு… போன்ற விரயங்கள் தேவைதானா? நம் முன்னோர்கள் யாரும் இந்நாட்களைக் கொண்டாடினார்களா? அப்படிக் கொண்டாடாததால் அவர்கள் மேன்மை இழந்துவிட்டார்களா?

சிக்கனமும் சேமிப்பும் இல்லாத குடும்பம் ஒரு கட்டத்தில் சிக்கலையும் சோதனைகளையும் சந்தித்தே தீரும் என்பதை யாரும் மறந்துவிடலாகாது. அனுமதிக்கப்பட்ட தேவைக்குமேல் செலவழிப்பதே விரயம். இந்த விரயம் அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

    “நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான், தன் இறைவனுக்கு நன்றி கொன்றவனாக இருக்கின்றான்” (17:27) என்று அல்லாஹ் கண்டிக்கின்றான்.

நல்லடியார்கள் யார்? அவர்களின் பண்புகள் என்ன என்று பட்டியலிடும்போது 12 உயர்பண்புகளை அல்லாஹ் வரிசைப்படுத்துகின்றான். அவற்றில் ஐந்தாவதாக அல்லாஹ் குறிப்பிடுவது நடுநிலையான நுகர்வு:

    அவர்கள் செலவு செய்தால், விரயம் செய்யமாட்டார்கள்; (கையை) இறுக்கவுமாட்டார்கள். அ(வர்களின் செலவான)து, அதற்கிடையே நடுநிலையானதாகவே இருக்கும். (25:67)

அவ்வாறே, சேமிப்பை வலியுறுத்தும்போது நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

    எந்த வீட்டாரிடம் பேரீச்சம்பழம்(சேமித்து) வைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் பசியோடு இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)

    ஆயிஷா! பேரீச்சம்பழம்(சேமித்துவைக்கப்பட்டு) இல்லாத வீட்டுக்கார்ர்கள் பட்டினி கிடப்பார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ் கொடுத்த அருட்கொடையை மதிக்காத செயலே விரயமாகும். சிக்கனம்அருட்கொடையை மதிக்கும் செயலாகும். இது நன்றியைக் காட்டும்; அது துரோகத்தைக் காட்டும்.

திட்டமிட்டு சேமித்து, சேமிப்பைஅனுமதிக்கப்பட்ட தொழிலில் முதலீடு செய்தால் இலாபத்திற்கு இலாபம்; இயலாமைக் காலத்தில் உதவிக்கு உதவி; உழைப்புக்கு மரியாதை. சிலர், சேமிப்பை வட்டிக்கு விட்டு ஹராமான வழியில் இலாபம் பார்க்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆயுளின் இறுதிக் கட்டத்தில் இந்தப் பாவத்தைச் சுமந்துகொண்டு கப்றுக்குப் போக வேண்டுமா யோசியுங்கள்!

ஹலாலான வழியில் முதலீடு செய்யவும் இலாபம் ஈட்டவும் எத்தனையோ வழிகள் உள்ளன. இல்லையா? நீங்களே ஒரு தொழிலைத் தொடங்கி, சேமிப்பை அதில் முதலீடு செய்யலாம். அப்படிச் செய்யும்போது, ஊரில் நமக்கும் ஒரு வேலை கிடைத்துவிடும்; பொழுது போகவில்லை என்ற புலம்பல் இருக்காது. இலாபமும் கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம்! வெளிநாடு சென்றோம்; சம்பாதித்தோம்; குடும்பத்தைத் தூக்கி நிறுத்தினோம். ஆனால், ஊருக்கும் சமூகத்திற்கும் என்ன செய்தோம்? உறவுகளில், சமூகத்தில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க வசதியின்றி, குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே! இளம்பெண்கள் கரையேற முடியாமல் தத்தளிக்கிறார்களே! முதியவர்கள் பலர் ஆதரவின்றி நொடிந்து ஒடிந்துபோயிருக்கிறார்களே!

விழுந்து கிடக்கும் இவர்களுக்குக் கை கொடுப்பதில் நமது பங்கு என்ன என்று யோசித்தீர்களா? உறவும் அறிமுகமும் உள்ள நாமே இவர்களுக்கு உதவாவிட்டால், வேறு யார் உதவப்போகிறார்கள்? தனிப்பட்ட முறையிலோ கூட்டுச் சேர்ந்தோ அவரவர் தம் ஊருக்குக் கருணை காட்ட முன்வர வேண்டும்! ஊரில் இருக்கும் பள்ளிவாசல், அரபி மதரசா, குர்ஆன் மதரசா(மக்தப்), அநாதை இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றுக்கு உதவி, சந்தா, நன்கொடை என்று ஏதேனும் செய்து, அடுத்த தலைமுறையின் இம்மை– மறுமை வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமல்லவா? இதுதான் மறுமையின் நெருக்கடியில் நமக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
நன்றி  Source : http://khanbaqavi.blogspot.in/

No comments: