Sunday, February 13, 2011

மனிதம் மாய்வதற்கு மதம்தான் காரணமா?

மனிதம் மாய்வதற்கு மதம் காரணமல்ல மனித வக்கிரமே காரணம். மனித வக்கிரம் மடிந்தால்தான் மனிதம் தழைக்கும்.

மனித வக்கிரம் சாதி மதம் இனம் மொழி நிறம் நிலம் அரசியல் காசு காமம் என்று எல்லாவற்றையும் பயன்படுத்தி தன் வக்கிரத்தைக் காட்டும்.

இனங்களுக்குள் யுத்தமும் அழிவும் நடக்கிறது என்பதற்காக, மனித வக்கிரத்தை அழிக்காமல் இனங்களை அழித்தால், உலகில் மனித இனம் மொத்தமாக அழிந்துபோகுமல்லவா?

அன்னை தெரிசா, பாரதி, காந்தி போன்ற எண்ணற்றோர் மதம் சார்ந்தவர்கள்தாம். அவர்களால் உலகிற்குக் கேடு விளைந்ததா?

ஒரு மதத்தில் நல்லவரும் இருப்பர். வக்கிர மனிதரும் இருப்பர். மதம் அற்றவர்களிலும் நல்லவரும் இருப்பர் வக்கிர மனிதரும் இருப்பர்.

மதத்தில் உள்ள வக்கிரபுத்திக்காரர்களை பார்த்து மதத்தை அழிக்க நினைப்பதும் மதமற்றோரில் உள்ள வக்கிரபுத்திக் காரர்களைப் பார்த்து மதமற்றோரையெல்லாம் அழிக்க நினைப்பதும் அறிவீனம்.

மதங்கள் எல்லாம் இணையவேண்டும். மதங்கள் இணைகின்றன என்றால் அது ஒரு ஆண் பெண் உறவைப்போல. ஆண் ஆணாகவே இருப்பான். பெண் பெண்ணாகவே இருப்பாள். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பர். ஏற்பர். அதனால் இணைவர்.

அப்படியான இணைவு மதங்களுக்கு இடையே வேண்டும். அதற்குத் தடையானவர்கள் வக்கிர மனம் கொண்டவர்கள்.

மனிதர்கள் எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எதை வேண்டுமானாலும் நம்பிச் செல்லட்டும். எதற்கு வேண்டுமானாலும் தாசர்களாய் இருந்துவிட்டுப்போகட்டும். எதன்மீது வேண்டுமானாலும் பக்தி கொள்ளட்டம். அது எதுவுமே மனிதத்தை சாகடிக்காது. ஆனால் மனிதன் வக்கிரம் கொண்டால் அங்கே மனிதம் சாகும்.


ஒருவர் தெலுங்கு பேசட்டும், ஒருவர் தமிழ் பேசட்டும், ஒருவர் இந்தி பேசட்டும். அதனால் என்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

ஒருவர் வானத்தின்மீது பக்தியாய் இருக்கட்டும், ஒருவர் பூமியின்மீது பக்தியாய் இருக்கட்டும், ஒருவர் நெருப்பின்மீது பக்தியாய் இருக்கட்டும். அதனால் என்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

ஒருவர் இந்துவாய் இருக்கட்டும் ஒருவர் முஸ்லிமாய் இருக்கட்டும் ஒருவர் கிருத்துவராய் இருக்கட்டும். அதனாலென்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

மதங்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாய்த்தான் மண்ணில் இருக்கின்றன. அதற்குமுன் மனிதன் எப்படி வாழ்ந்தான். முழுக்க முழுக்க மனித நேயத்தோடா?

சிலர் மதங்களின்மீது அதீத வெறுப்பு கொண்டுள்ளனர். அதுவும் வெறிதான். மதவெறிக்கு எப்படி மனித வக்கிரம் காரணமாக இருக்கிறதோ அதே போல மத அழிப்பு என்ற வெறிக்கும் மனித வக்கிரமே காரணமாய் இருக்கின்றது. எந்தக் காலத்திலும் வெறியற்ற வாழ்வுதான் அமைதியான வாழ்வு.

வக்கிரம் கொண்ட மனிதன் எதையோ ஒன்றை கையில் எடுத்துக்கொள்கிறான். மதம், இனம், நிறம், பெண், பணம், பொருள், குடும்பம் என்ற எல்லாமும் அவனுக்கு ஆயுதங்கள்தாம். புதுப்புது ஆயுதம் தேடுவதும் புதுப்புது ஆயுதம் எடுப்பதும் மனித வக்கிரம்தான். மனித வக்கிரம் ஒழிய வேண்டும். அது ஒழியாமல் மனிதம் விமோசனம் அடையாது

மதவெறியன் என்பவன் யார்? மனிதர்களுள் ஒருவன் தானே? அரசியல் துரோகி என்பவன் யார்? மனிதர்களுள் ஒருவன் தானே? அந்த மத வெறியனிடமும் அரசியல் துரோகியிடமும் இருப்பது எது? வக்கிரம்தானே?

இன்று மதத்தைவிட அறிவியல்தான் உலக அழிவிற்குக் காரணமாய் இருக்கிறது. துப்பாக்கி தொடங்கி அணுகுண்டுவரை எத்தனை கண்டுபிடிப்புகள்? வேதியல் வெடி தொடங்கி கிருமிக் குண்டுவரை எத்தனை நாசங்கள்.

மதங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள். ஆனால் மதங்களால் முழு வெற்றியைக் காணமுடியவில்லை. அதுமட்டுமல்லாமல் எதிர் வினைகளையும் அது உருவாக்கிவிட்டது. அந்த எதிர் வினைகளுக்கான காரணம் மனித வக்கிரம்தான்.

இலங்கையில் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றார்களே அது ஏன்? மதம் காரணமா? கடவுள் காரணமா?

மதங்களே தோன்றாத மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் கொத்துக்கொத்தாகப் போரில் செத்தார்களே ஏன்?

முதல் உலகப்போர் ஏன் வந்தது? இரண்டாம் உலகப்போர் ஏன் வந்தது? சேர சோழ பாண்டியர்கள் அடித்துக்கொண்டார்களே ஏன்? வெள்ளைக்காரன் இந்தியாவைப் பிடித்தானே ஏன்?

அமெரிக்கா முதன் முதலில் ஜப்பானில் அனுகுண்டை தூக்கி ஏன் போட்டது? அலெக்சாண்டர் ஏன் உலகெங்கும் படையெடுத்து மக்களைக் கொன்று குவித்தான்? ஹிட்லர் ஏன் மக்களையும் கொன்று தானும் மாண்டான்?

மதங்கள் ஏன் தோன்றின? அது மனித வக்கிரத்தை மட்டுப்படுத்தவே தோன்றின. ஆனால் மனித வக்கிரம் மதத்தையே சாய்த்துப் போட்டுவிட்டது. அடுத்து சட்டம் ஒழுங்கு மனித வக்கிரத்தை அடக்க முயல்கிறது. ஆனால் வெற்றி பெற்றதா? வெற்றிபெற்றிருந்தால் உலகம் அமைதியாகி இருக்குமே!

உலக அழிவிற்கு மதங்கள்தான் காரணம் என்றால் அமெரிக்கா, இந்தியா என்று எந்த நாட்டிலாவது எந்த மதமும் கூடாது என்று சட்டம் போட்டார்களா? உலகில் எந்த மதமும் கூடாது என்று நாடுகள் பலவும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதா?

புத்தர் ஏசு காந்தி போன்றோரின் வழிகள் வேறாக இருக்கலாம் ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றுதான்.

மதங்கள் வேறாக இருக்கலாம் அவற்றின் நோக்கம் ஒன்றுதான். கடவுள் பயம்காட்டி மனிதனை நேர்வழிப்படுத்துவது. சொர்க்கம் நரகம் என்று கூறி மனித வக்கிரத்தைக் கொல்ல முயல்வது. ஆனால் மனித வக்கிரமோ அந்த மதத்தையே கையில் எடுத்துக்கொண்டு மனிதர்களைக் கொன்று குவிக்கிறது.

மனிதர்களின் வக்கிரத்தை அழிப்பதற்குப் பதிலாய் சிலர் மனிதர்களையே அழித்துவிடலாம் என்பதுபோல் பேசுகிறார்கள். குடும்பத்தில் உள்ள வக்கிர மனங்களை மாற்றுவதற்குப் பதில், குடும்பத்தையே அழித்துவிடலாம் என்று யோசனை கூறுகின்றனர். மதங்களில் உள்ள வக்கிர மனிதர்களைத் திருத்துவதற்குப் பதில் மதங்களையே அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆண் வக்கிரபுத்தி கொண்டிருந்தால் மனைவி பாடு திண்டாட்டம். பெண் வக்கிரபுத்தி கொண்டிருந்தால் கணவன்பாடு திண்டாட்டம். ஆகவே திருமணங்களையே அழித்துவிடுவதா? இப்படியே வேர் பார்த்து வேரறுக்க முயலாமல், மரம் பார்த்து கிளைகளையும் இலைகளையும் அழிப்பதா?

மத எதிர்ப்பு என்பது வெறியாகும்போது அது மதவெறியைவிட கொடுமையானதாய் ஆகலாம். ஒருவன் தனக்கு மதம் வேண்டாம் என்று விரும்பினால் அதில் தவறே இல்லை.

மதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மதத்தைக் கட்டிக்கொண்டு அழத் தேவையில்லை. மதச்சம்பிரதாயங்களில் மூட நம்பிக்கையைக் காண்போர் அதைக் கட்டித் தழுவிக் கிடக்கத் தேவையில்லை.

ஆனால் மத எதிர்ப்பில் வெறி கொண்டால் ஒருவன் வக்கிரம் கொள்கிறான். பிறகு மதவெறியனுக்கும் அவனுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை!

மதப்பற்றுடையவர்கள் மதவெறியர்கள் ஆகமாட்டார்கள். உலகில் பெரும்பாலானவர்கள் மதப்பற்றாளர்கள். அதில் அதிகப்படியாய் ஒரு விழுக்காடு வெறியர்கள் இருப்பார்கள். அந்த வெறியர்களிடம் இருக்கும் வக்கிரம்தான் அழிக்கப்படவேண்டிய ஒன்று.
Source : http://anbudanbuhari.blogspot.com/2011/02/blog-post_13.html

No comments: