ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).
பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.
நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, மேதைகளோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.
கொள்ளைக்காரனைக் கூட கொள்கை வீரனாக மாற்றிவிடும் வார்த்தையே இந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் போது கல் நெஞ்சங்களையும் இந்த ஸலாம் கரைத்துவிடும். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
உங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். நூல்:முஸ்லிம்
இந்த நபிமொழியின் முதல் வாசகத்தை சற்று விளக்கமாக பார்த்து விட்டு அடுத்த விஷயங்களில் நுழைவோம். உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன? உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் செல்லாக்காசுகளே!
உலகில் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட பல நல்ல காரியங்களை செய்வதைப் பார்க்கிறோம். இப்படிப் பட்டவர்களுக்கு சுவனம் கிடைக்குமா? என்றால், நிச்சயமாக இல்லை. சுவனம் செல்வதானால் இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.
இறை நம்பிக்கை இல்லையெனில் எந்த நற்செயலும் அது எவ்வளவு பெரிய மலையைப் போல் இருப்பினும் கானல் நீரே! இதைப்பற்றி அல்லாஹ்வும் இவ்வாறு கூறுகிறான்.
மேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)நான் வேலை செய்கிறேன், ஆனால் என்னுடைய பெயர், ஊழியர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போல் தான் ஸலாம் கூறாமலிருப்பதுமாகும். மனிதர்கள் தரும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கே தலை சுற்றுகிற அளவிற்கு நிபந்தனைகளைப் போடுவதை ஏற்றுக் கொள்கின்ற நாம் நிரந்தர சுவனத்தை, அளவிலா இன்பத்தை சம்பளமாக தரும் இறைவன், அவன் மட்டும் நிபந்தனைகள் போடக்கூடாதா? எல்லைகள் வகுக்க கூடாதா? அதை ஏற்கின்ற நாம் இதை மட்டும் ஏன் யோசிக்க மறுக்கின்றோம்.
அடுத்து நமக்கு உண்டாகும் சந்தேகம் இதுதான். ஸலாம் சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் பாசமோ, பிரியமோ, நேசமோ, சமாதானமோ உண்டாவதாக தெரியவில்லையே. சண்டைகளும், சங்கடங்களும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் ஸலாம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி நாம் சொல்வதில்லை. எப்படிச் சொல்ல வேண்டும்? வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா? போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா? இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும்?! நிம்மதி உண்டாகும்?!. எப்படி சண்டைகள் தீரும்?! இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா? அல்லாஹ்வை, ஆம் ஸலாம் என்பதும் அல்லாஹ்வின் பெயர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்றி ஒன்பது திருபெயர்கள் உள்ளன. அவற்றை (விளங்கி) மனனம் செய்பவர் சுவனம் சென்றுவிட்டார். நூல்: புகாரி
தொண்ணூற்றி ஒன்பது திருப்பெயர்களில் ஒன்றுதான் இந்த ஸலாம். அவைகளில் ஒன்று அஸ்ஸலாம் என்று கீழ்காணும் வசனம் தெரிவிக்கிறது.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன்; பெருமைக்கு உரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றை எல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.(அல்குர்ஆன் 59:23)
எனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக! என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக! இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் ஸலாத்தினை அதன் உண்மையான வடிவில், பொருளுணர்ந்து ஸலாம் கூறுபவர்களாக ஆக்கி அருள்வானாக!
- சாதாதுல்லாஹ்
நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்
நன்றி:இஸ்லாம்கல்வி.காம்
No comments:
Post a Comment