Thursday, March 23, 2023

பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்தது முற்றிலும் உண்மை

 




கல்வித் தந்தை என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்தது முற்றிலும் உண்மை. இவர்கள் இருவருக்குமிடையே நிலவிய ஆழமான நட்பை எடுத்துச் சொல்ல மூன்று தியரிகளை பலரும் எடுத்துக்காட்டாகச் சொல்வதுண்டு


#முதல்_தியரி

===============


//“சிரித்து வாழ வேண்டும்” படத்தில் முஸ்லிம் வேடத்தில் எம்.ஜி.ஆர். பாடும் "ஒன்றே சொல்வான்; நன்றே செய்வான்; அவனே அப்துல் ரஹ்மானாம்" என்ற பாடல் தன் ஆத்ம நண்பர் பி.எஸ்.அப்துல் ரகுமானுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட பாடலிது என்பார்கள்.//


தன் நண்பர்  'அப்துல் ரஹ்மான்' பெயரை இப்பாடலில் சேர்க்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கிணங்க பாடலாசிரியர் புலமைப் பித்தன் இவ்வரிகளை பாடலில் இடம்பெற வைத்தார் என்ற கூற்றை பற்பல திரையுலக பிரபலங்கள் உட்பட சொல்வதை நாம் கேள்வியுற்று இருக்கிறோம்.

 

“உண்மையிலேயே இது கீழக்கரை நாயகர் கல்வித் தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களை மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டதா?” என்று கேட்டால் 'இல்லை' என்றுதான் சொல்வேன். 


என்னுடைய இக்கூற்றுக்கு கலைமாமணி கே.ரவீந்தர் எழுதிய "பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்' என்ற நூலே சாட்சி. யாரிந்த ரவீந்தர்? நாகூரை பூர்வீகமாகக் கொண்ட இவரது இயற்பெயர் A.R. செய்யது காஜா மெய்தீன் என்பதாகும். 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்'  என்றால் திரையுலகில் எல்லோருக்கும் தெரியும். இவரது எழுத்து எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதற்கு இதோ இந்த இருவருடைய வழிமொழிதல் சான்று பகரும்.  


//"நண்பர் ரவீந்திரன் அவர்கள் நான் சொல்கிற காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடு தொடர்பு கொண்டு பழகியவர். நாடகம் எழுதுவதற்காக, திரையுலகில் எழுதுவதற்காக அவரோடு தொடர்பு கொண்டவர்; பழகியவர். அதனால் புரட்சித் தலைவரோடு மிக நெருக்கமான தொடர்பு கொள்கிற வாய்ப்பைப் பெற்றவர். அதன் மூலம் பல செய்திகளை அவர் அறிந்திருக்கிறார்; உணர்ந்திருக்கிறார்." 

- ஆர்.எம்.வீரப்பன்


//"மக்கள் திலகம் என்னும் மாமனிதரைப் பற்றி எழுத தகுதியானவர் அவருடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் திரு கே.ரவீந்தர்"//

- வி.என்.ஜானகி அம்மையார்


கலைமாமணி கே.ரவீந்தர் அவர்களுடைய எழுத்தின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்துவதற்கு எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையாரை விடவும், எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்த ஆர்.எம்.வீ. அவர்களை விடவும் வேறென்ன நற்சான்றிதழ் வேண்டும்?


எம்.ஜி.ஆரின் வாழ்க்கை நிகழ்வுகளை 'பொம்மை' பத்திரிக்கையில் தொடராக எழுதுவதற்கு நாகிரெட்டி பொருத்தமான நபரைத் தேடியபோது ஜானகி அம்மையார் பரிந்துரைத்த நம்பிக்கையான நபர்தான் கலைமாமணி கே.ரவீந்தர். 


கலைமாமணி கே.ரவீந்தர் தன் நூலில் எழுதியிருக்கும் வாக்குமூலத்தை அவருடைய வார்த்தைகளிலேயே இதோ தந்திருக்கிறேன். (செம்மல் என்று அவர் குறிப்பிடுவது எம்.ஜி.ஆரைத்தான் என்பதை அறிக)


//பங்களாதேஷ் அமைத்த முஜீபுர் ரஹ்மானின் பெயர் நாடெல்லாம் பரவிய நேரம். அவரது வரலாற்றைப் படித்த செம்மல் அதே கேரக்டர் வைத்த ஒரு கதை கேட்டார். அதற்கு ‘மக்கள் என் பக்கம்’ என்று பெயரும் வைக்கச் சொன்னார். அப்போது ‘ஜன்ஜீர்’ என்ற படம் வந்தது. அதையும் பார்த்தார். அதை உரிமம் வாங்கி உதயம் புரடக்‌ஷன்ஸ் எடுக்க முயன்றனர். அப்படத்தில் முஸ்லீம் வேடம் தாங்கிய நடிகர் பிரான் ரோல் செம்மலைக் கவர்ந்தது. அதை மட்டும் செய்தால் மக்களுக்கு பிடிக்காது என்றார்.  இன்ஸ்பெக்டர் நாயகனாகவும் அவனுக்கு நண்பனாக அந்த முஸ்லீம் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க இசைந்தார். தமிழில் ‘சிரித்து வாழ வேண்டும்’ என்று பெயரிடப்பட்டது, 

(ஆதார நூல் : "பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்" - பக்கம் 124 - விஜயா பப்ளிகேஷன்ஸ்)


எனவே, “மேரா நாம் அப்துல் ரஹ்மான்” என்ற பாடல் பி.எஸ்.அப்துல் ரஹ்மானை மனதில் வைத்து எழுதப்பட்டதல்ல. மாறாக பங்களாதேஷ் நிறுவனர் முஜிபுர் ரஹ்மானை மனதில் வைத்து எழுதப்பட்டது என்பதை நாம் அறிகிறோம். 


எம்.ஜி.ஆரைப் பற்றி பலரும் பல நூல்கள் எழுதியுள்ளனர். 35 ஆண்டுகளுக்கு மேலாக கூடவே இருந்து நெருங்கிப் பழகிய ரவீந்தர் அவர்களுடைய எழுத்துக்களை நாம் சந்தேகிக்கத் தேவையில்லை. அவர் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும்


#இரண்டாம்_தியரி

===================


இரண்டாம் தியரி எம்.ஜி.ஆர் வழக்கமாக அனீந்திருக்கும் தொப்பியைப் பற்றியது. 


//ஒருமுறை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுடைய இல்லத்திற்கு எம்.ஜி,ஆர் வருகை புரிந்தபோது அவரது குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவர் அவருக்கு தொப்பி அணிவித்தாராம். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போகவே, முன்நெற்றியில் ஏறிக் கொண்டிருக்கும் தன் வழுக்கையை மறைப்பதற்கு, இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டார்.//  


இதை பலரும் சொல்ல நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆராய்ந்து பார்த்தால், எம்.ஜி.ஆர். தொப்பியின் ரகசியம் இதுவல்ல. அது வேறு விதமாக இருக்கிறது. 


எம்.ஜி.ஆருக்கும், தமிழ்வாணானுக்கும் இந்த கறுப்பு கண்ணாடி, தொப்பி - இவையிரண்டும்தான் டிரேட் மார்க். 


எம்.ஜி.ஆருக்கு விதவிதமான தொப்பி அணிவதில் சிறுவயதிலிருந்தே விருப்பம்.  நடிகரானபின் தான் இளமையோடும் அழகோடும் காட்சி தருவதற்காகவும்,  கதாபாத்திரத்தை வேறுபடுத்திக் காட்டவும் வகை வகையான தொப்பி  அணிந்து நடித்திருக்கிறார். ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, 'தனிப்பிறவி', 'ரிக்‌ஷாக்காரன்', 'அன்பே வா', 'பெற்றால்தான் பிள்ளையா' 'உலகம் சுற்றும் வாலிபன்' உட்பட ஏராளமான திரைப்படங்களில் விதவிதமான தொப்பிகள் அணிந்து நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் உருவத்திற்கு தொப்பி அம்சமாக அமைந்திருந்தது.. 


1966-ஆம் ஆண்டு வெளியான 'காவல்காரன்' படத்தில் பெரும்பாலான காட்சிகள் எம்.ஜி.ஆர். குண்டடி பட்ட பிறகு எடுக்கப்பட்டதாகும். முகம் சோர்ந்தும், தேகம் சற்று தளர்ந்தும், குரல்வளம் மாறிப் போயிருந்த நேரமது.   “நினைத்தேன் வந்தாய் நுாறு வயது” பாடல்காட்சியின் போது வித்தியாசமாக காட்சியளிக்க வேண்டி வெள்ளைத் தொப்பி அணிந்து சில காட்சிகளில் ஆடினார். பாடல்காட்சி முடிந்ததும் அங்கிருந்தவர்கள்  எம்.ஜி.ஆரிடம், “அண்ணே, இந்த தொப்பியில் நீங்க 10 வயசு குறைவா தெரியறீங்க” எனப் புகழ்ந்து தள்ள, தன் இமேஜ் மீது எப்போதும் அக்கறை எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆருக்கு அப்போதே தொப்பி நிரந்தரமாக அணிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. 


திரைப்படங்களில் மட்டுமே  தொப்பி பயன்படுத்திவந்த எம்.ஜி.ஆர். 'அடிமைப்பெண்' திரைப்படத்திற்குப் பிறகு பொதுவாழ்வு நிகழ்ச்சிகளிலும் அணியத் தொடங்கினார். 'அடிமைப்பெண்' படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது பாலைவனத்தில் நடந்த படப்பிடிப்பின்போது ஒருவர் முதன்முதலாக புஸ்குல்லா எனப்படும் வெள்ளை நிற FUR தொப்பியை கொண்டுவந்து பரிசளித்தார். இதனை பரிசளித்தது அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் மோஹன்லால் சுகாதியா என்கிறார்கள். ஜெய்ப்பூரின் கடும் வெயிலையும், பலத்த காற்றையும் இந்த தொப்பியினால்தான் எம்.ஜி.ஆரால் சமாளிக்க முடிந்தது. 


தமிழகம் திரும்பி வந்த பிறகு எம்.ஜி.ஆருக்கு அப்துல் ரசாக் என்ற தொப்பி தயாரிக்கும் அன்பருடைய அறிமுகம் கிடைத்தது. குளிர் பிரதேசங்களில் வளரும் வெள்ளை செம்மறி ஆட்டின் முடியை பதப்படுத்தி, அதை பலகட்டங்களில் மேம்படுத்தி, இதனுள் 3 அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து, காற்றோட்டத்திற்கு வசதியாக வெளியே தெரியாத சிறு சிறு ஓட்டைகள் வைத்து தைக்கப்பட்ட இவ்வகை தொப்பியினால் வியர்வை போன்ற சங்கடங்கள் ஏற்படாத வண்ணம் ரசாக் பாய் தயாரித்துக் கொடுத்தார். டஜன் கணக்கில் அதிக எடை இல்லாத இவ்வகை 'புஸ்குல்லா' எம்.ஜி.ஆர். எப்போதுமே கையிருப்பாக வைத்திருந்தார். 


அதன் பிறகு எம்.ஜி.ஆரை பொதுவெளியில் இந்த தொப்பியில்லாமல் யாரும் பார்க்கவே முடியவில்லை. 


#மூன்றாம்_தியரி

================


//பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியதாகவும், அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்.//


இதுவும் உறுதி படுத்தாத  செய்தி. சினிமா நடிகர் பாண்டு அவரது கற்பனைக்கேற்ப வரைந்து கொடுத்த சின்னம்தான் இந்த இரட்டை இலை சின்னம். நடிகர் பாண்டுவை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவருடைய சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ். பாண்டு வெறும் நடிகர் மாத்திரமல்ல. நடிகர் சிவக்குமார் போன்று சிறந்த ஓவியரும் கூட. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஓவியத்துறையில் பி.எச்.டி. ஆய்வுப் பட்டம் பெற்ற முதல் நபர் என்பார்கள். 


இரட்டை இலைச் சின்னம், அதிமுக கொடி மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சின்னம் ஆகியவற்றை வடிவமைத்து தந்தது இவர்தான். 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு பாண்டுவை ஒரு ரூமுக்குள் உட்காரவைத்து  இரவோடு இரவாக வடிவமைத்து வரையப்பட்டு வாங்கியது  இரட்டை இலை சின்னமும் அதிமுக கொடியும். 


இதற்கு பரிகாரமாக அதிமுக கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும், ஏற்பாடு செய்திருந்த வெற்றிவிழா கூட்டத்தில் மேடையில் பாண்டுவை  அறிமுகப்படுத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியும் ரூ 10,000/- ரொக்கப் பரிசும் அளித்து எம்.ஜி.ஆர். அவரை கெளரவப் படுத்தினார். 


மேற்கண்ட இந்த மூன்று தியரிகள்தான் காலங்காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. இவை யாவும் அவர்களது இருவருடைய நட்பின் ஆழத்தை மிகைப்படுத்துவதற்காக சற்று கற்பனையும் கலந்த கதை என்பது என் எண்ணம். இருவருக்குமிடையே நிலவிய நட்பை குறைத்து மதிப்பிடுவதற்காக நான் இதைச் சொல்லவில்லை. உறுதிப்படுத்தாத ஒரு செய்தி, திரும்பத் திரும்ப சொல்லப்பட்டால் அதுவே பிற்காலத்தில் உண்மை என நம்பப்பட்டுவிடும் என்பது கோயபல்ஸ் தியரி. இவை யாவும் உண்மை என்று நம்பி நானே இதனை பகிர்ந்தும் இருக்கிறேன். இது உண்மை அல்ல என்று நாம் அறிய வரும்போது அதை எடுத்துச் சொல்வது என் கடமையும் கூட. முன்பே சொன்னதுபோல இது எந்த விதத்திலும் இவர்கள் இருவருக்குமிடையே இருந்த நட்பை குறைத்து மதிப்பிட எழுதப்பட்டதல்ல. 


பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுடன் சிறுபிராயம் முதலே எனக்கு அறிமுகம் இருந்தது. எனக்கு நெருங்கிய வட்டாரத்தில் எல்லோருக்கும் இது தெரியும்.   “சேனானா” (செ.அ.) என்று அன்புடன் அழைக்கப்பட்ட பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் நிறுவிய “கிரஸெண்ட் ரெசிடென்ஷியல் ஸ்கூல்” முதல் பேட்ச் மாணவர்கள் 19 பேர்களில் நானும் ஒருவன். ஒருசமயம் கால்பந்தாட்டம் விளையாடும்போது எனது ஒரு கண்ணில் பலமாக அடிபட்டு கண்திரை (Retinal Detachment) முழுவதுமாக கிழிந்து பார்வை பறிபோய்விட்டது. எக்மோர் கண் ஆஸ்பத்திரியில் அந்தக் காலத்தில் மிகச்சிறந்த கண்மருத்துவர்களாக புகழ்பெற்றிருந்த டாக்டர் ஆபிரகாம் மற்றும் டாக்டர் C.P.குப்தா இவர்கள் அறுவை சிகிச்சை செய்து என்னை முழுவதுமாக குணப்படுத்தி பார்வையை மீட்டுத் தந்தார்கள். (லேசர் அறுவைசிகிச்சை நவீனமாக அறிமுகமான நேரம்). அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனை படுக்கையில் நான் கண்விழித்து பார்த்தபோது, ஆறுதல் கூற என்னருகே இரண்டு ஆளுமைகள் வெகுநேரம் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கல்வித்தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள். மற்றொருவர் கீழக்கரை பிரமுகர் யாசீன் காக்கா அவர்கள். தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவர்கள் கருதினார்கள்.


ஆ.மு. அஹ்மது யாசீன் காக்கா சினிமாத் துறையில் செல்வாக்கு பெற்ற  மனிதராகத் திகழ்ந்த நேரமது. சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆர்., பாலாஜி போன்றவர்களின் படங்களுக்கு பணமுதலீடு தந்து உதவியவர். ஒருமுறை எனக்கு தமிழ்மொழியில் இருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு “நீ தமிழ் இலக்கியம் எடுத்துப்படி.  நீ நல்லா வருவே,,!” என்று ஆலோசனை நல்கியவர்” யாசீன் காக்கா.


கல்வித்தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் நிறுவிய சீதக்காதி டிரஸ்டுக்கு சொந்தமாக அப்போது பல நிறுவனங்கள் இருந்தன. பாரி இண்டஸ்ட்ரீஸ், ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஒமேகா கேபிள்ஸ், பினாங்கில் UMPTC, இப்படி எத்தனையோ நிறுவனங்கள். ஒமேகா கேபிள்ஸ் நிர்வாகியாகவும் பங்குதாராராகவும் யாசீன் காக்கா செயல்பட்டார்கள்


இன்னொருமுறை “Which City is called Pink City?” என்று பொதுஅறிவு கேள்வி கேட்டுவிட்டு “ஜெய்ப்பூர்” என்று நான் சரியாக பதில் சொன்னதற்கு, அப்துல் வஹ்ஹாப் அவர்கள் எழுதிய “தித்திக்கும் திருமறை” என்ற நூலை செ.அ. அவர்கள் கையொப்பமிட்டு எனக்கு பரிசளித்தார்கள் அந்த மாமனிதரின் கையால் வாங்கிய நினைவுப் பரிசை இன்றும் போற்றி பாதுகாத்து வருகிறேன்.


கீழக்கரை முஸ்லீம் வணிகர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் சினிமா தொடர்பு உள்ளவர்களாக இருந்தார்கள். பிறகுதான் அது “ஹராம்” (இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று)  என்று கூறி ஒவ்வொருவராக சினிமாத்துறையிலிருந்து விலக ஆரம்பித்தனர். பிற்காலத்தில் முழுவதுமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.


வரலாறு கூறும் செம்பி நாடு மற்றும் சேதுச் சீமையை நினைவுறுத்தும் வகையில் “செம்பி பிலிம்ஸ்”, “சேது பிலிம்ஸ்”, என்று தங்கள் நிறுவனங்களுக்கு பெயர் சூட்டியிருந்தார்கள்.  பிறந்த மண்ணை போற்ற வேண்டும் என்பதற்கு அவர்கள் சிறந்த உதாரணம். சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.


வளநாடு சினி ரிலீஸ், கிரஸெண்ட் மூவீஸ், வச்சிர நாடு பிலிம்ஸ், கிரவுன் அட்வைடைஸிங்  இவைகளும் திரைப்படத் துறையில் வெற்றிக்களம் கண்டன. விநியோகத்திற்காக வாங்கும் படங்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி நடித்த படங்களாகவே இருக்கும். எம்.ஜி.ஆர்.,  சிவாஜி, படங்களைத் தவிர வேறு நடிகர்கள் நடித்த படங்களை வாங்க மாட்டார்கள். கையைக் கடித்துவிடும் என்பதால். 1970 – 1980 கால கட்டங்களில் தமிழகத்தில் வெளிவந்த ஏராளமான படங்கள் இவர்களின் தொடர்பு இல்லாமல் ‘ரிலீஸ்’ ஆனதில்லை.


திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் இவர்களின் விநியோகஸ்த நிறுவனங்கள் பரவலாக இருந்தன. திருச்சி பாலக்கரையில் உள்ள “வளநாடு சினி ரிலீஸ்” அலுவலத்திற்கும் மதுரையிலிருந்த “சேது பிலிம்ஸ்” அலுவலகத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். மேற்கூறிய பல சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களின் பங்குதாரராக யாசீன் காக்காவும் இருந்தார்கள்.


பெரிய நடிகர்கள் இல்லாதபோதும், “யாருக்காக அழுதான்” படமெடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் படத்தயாரிப்புக்கும் வினியோகத்திற்கும் பணஉதவி புரிந்தவர் யாசீன் காக்கா.  பெருத்த நட்டம் அதில் ஏற்பட்டபோதும் அதைப்பற்றி சிறிதும் கவலையுறாது “வியாபாரத்தில் இதுவெல்லாம் சகஜம்” என்று கூறி தொடர்ந்து தன் பணியில் கவனம் செலுத்தியவர்.


நடிகர் கே.பாலாஜியின் “சுஜாதா சினி ஆர்ட்ஸ்” படங்களுக்கு பைனான்ஸ் செய்தது யாவுமே யாசீன் காக்காதான். அடிக்கடி எங்கள் பள்ளிக்கு அவர் வருவார். அவர் விநியோகம் செய்த திலிப் குமார் நடித்த “கோபி” இந்திப்படம், மற்றும் “எங்கிருந்தோ வந்தாள்”  போன்ற படங்களை PREVIEW THEATRE-ல் படம் வெளியாவதற்கு முன்னரே  பார்க்கின்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.


எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி  புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிக நெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதி திரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.


எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக திகழ்ந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம்.   அதேபோன்று தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். ஒருவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில் இன்னொருவர் .எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.


ஒருமுறை கங்கை அமரனின் கச்சேரி ஏற்பாடு செய்யப்படிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது மக்கள் திலகம் வந்திருந்தார். வந்த சிறிது நேரத்திலேயே புறப்படவிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து “கச்சேரி கேட்டுட்டு போங்களேன்” என்று கங்கை அமரன் சொல்ல,  “எவ்வளவு நேரம் கச்சேரி நடக்கும்?” என கேட்டிருக்கிறார். கங்கை அமரன் கையில் கைக்கடிகாரம் எதுவும் கட்டியிராததை கவனித்துவிட்டு, கங்கை அமரனின் கைகளை தாங்கிப் பிடித்த எம்.ஜி.ஆர். தனது வலது கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த “ஒமேகா” வாட்சை பரிசாக அளித்திருக்கிறார். ஒரு பேட்டியில் இன்னமும் பத்திரமாக அந்த கைக்கடிகாரத்தைப் பாதுகாக்கிறேன் என்று பெருமையாக கங்கை அமரன் கூறினார்.. கங்கை அமரனின் இந்தக் கச்சேரி நடைபெற்றது பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகன் திருமணத்தின்போதுதான். 



#அப்துல்கையூம்

No comments: