Monday, March 6, 2023

உகாண்டாவில் உணவுத் திருவிழா

 


உணவுத் திருவிழா

வெற்றி நிகழ்வு

உகாசேவா அமைப்பை

பற்றிப் பிடிக்கிறது  ....

பேரிறைவன் நல்கிய

பெரும் கிருபையை வரமாக பெற்று

பாகுபாடில்லாது பல்கிய

உழைப்பினை உரமாக தூவி

ஆர்ப்பரித்த ஒற்றுமையை

சரமாக தொடுத்து

உணவுக்குழு யாவரும்

ஒரே கரமாக அழகாக இணைந்து

வெற்றிகரமாக ஞாயிறன்று (08.12.2019) நிகழ்ந்தேறிய உணவுத் திருவிழா எம்மை உற்சாக வெள்ளத்தில் மகிழ்வோடு நீந்த வைக்கிறது ....

முனைப்போடு செய்கிற ஏற்பாடுகளின் பற்பல நிறைகளை கண்டறிந்து அவைகளை தக்க வைத்து சிற்சில குறைகளை ஆராய்ந்து அதற்குத் தக்கவாறு நிவர்த்தி செய்து பங்கேற்றோரின் பாராட்டுகளை உணவுக் குழுவினர் அள்ளுகிறார்கள்  ....

இலாகா வாரியாக வாகாக நின்று அனைத்து பொறுப்புகளையும் அவ்வனே ஏற்று செவ்வனே நிறைவேற்றி என்னை விடவும் அதிகமான பளுவான பணிகளை செய்து முடித்த எனது இனமான உணவுக்குழுவுக்கு கனமான சல்யூட் அடிக்கிறேன்  ....

உகாண்டா வர்த்தக நிறுவனங்களின் வாயில் கதவுகளை தட்டிய பின்னர் நன்கொடை தொகைகள் கணிசமாக எட்டிய செய்தி எமக்கு கிட்டிய பாக்கியம் என்றே கருதுகிறேன்  ....

கற்பனையை மிஞ்சிய டிக்கெட்டுகள் விற்பனையை நிகழ்த்திக் காட்டிய விற்பன்னர்களையும்

உணவு வகைகள் சமைப்பதற்கு மனமுவந்து நிதியளித்த உணவுக் குழுமத்தையும் மனமார பாராட்டுகிறேன்  ....

முத்தாய்ப்பாக நுழைவு வாசலிலும் உணவு பரிமாறும் கூடங்களிலும் நம்மவர்களின் கனிவான உபசரிப்பு உகாசேவா அமைப்புக்கே உரித்தான ஓர் அற்புதம் என்றால் அது மிகையாகாது  ....

எமது தலைவர் அங்குமிங்கும் சுழன்றாடி பதித்த ஒளிப்பதிவும் நம்மில் பலரும் உரையாடிய ஒலிப்பதிவும் எமது விழிகளையும் செவிகளையும் நனைய வைத்தது  ....

சமையல் புயல் அலி குழுவினர்

மற்றும் இதர அசைவ சைவ உணவு வகைகளை சமைக்க பொறுப்பேற்றோரின் கைவண்ணத்தில் தயாரான உணவுகளின் சுவைகள் யாவும் அவைகளில் அமர்ந்தோரை சுகமாக அசை போட வைத்தது  ....

நிச்சயமாக பங்கேற்க வேண்டும் என்கிற உணர்வு அலைகளை தேக்கி ஆயிரம் தலைகளை தாண்டிய மக்கள் வெள்ளத்தில் நிகழ்ந்த நூற்றுக்கணக்கான பொறுப்புகளை சுமந்த மாபெரும் உணவுத் திருவிழா நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ஒருங்கிணைப்பாளராய் பணியாற்றினேன் என்று சொல்வதை விடவும் அருமையாக வாழ்ந்தேன் என்று இயம்புவதை பெருமையாக கருதுகிறேன்  ....

நான் ஊட்டிய அன்பையும்

நீட்டிய அரவணைப்பையும்

தீட்டிய பாசத்தையும்

முகப்பத்தான மனசோடு ஏற்ற முத்தான உணவுக்குழுவுக்கு மகத்தான நன்றியினை சமர்பிக்கிறேன்  .....

கடந்தேறிய மூன்று மாதங்களாய்

ஆறு கலந்துரையாடல் கூட்டங்கள்

எண்ணற்ற அலைபேசி உரையாடல்கள்

ஆயிரத்தை தாண்டிய வாட்ஸப் பதிப்புகள்

ஏராளமான நேரடி சந்திப்புகள்

இவைகளை உள்ளடக்கி

கழிந்த வாரம் துவங்கிய அயராத பணிகளான பொருட்களும் உபகரணங்களும் கொள்முதல் போன்ற கலவைகள் உள்ளடங்கி சுறுசுறுப்பை சலவைகள் செய்து நிகழ்த்தப்பட்ட உணவுத் திருவிழா மகிழ்வெனும் பைகள் சுமந்து கைகள் அசைத்து எம்மிடமிருந்து விடைபெற்றது  ....

விழா நிகழ்வதற்கான இறுதிக் கட்ட பணிகளை நிறைவேற்றுகையில் வானம் பொழிந்த தொடர் மழை நம்மை அச்சத்தில் ஆழ்த்தினாலும் எமக்கு சிரமத்தை ஏற்படுத்தாது எங்களின் பிழை பொறுத்து வைபவம் நிறைவேற இறையிடம் துவாக்கள் செய்தோம்  ....

விழா சம்மந்தமாக நாம் பதித்த தகவல் பதிப்புகளுக்கு விருப்பங்களும் கருத்துரைகளும் இட்டு பாராட்டி வாழ்த்திய நட்பார்ந்த அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்  ....

எம்மை வெற்றிப் படிகளில் ஏற வைத்து வளர்ச்சிக் கனிகளை மடிகளில் கொட்டிய வல்லோன் இறைவனுக்கே புகழனைத்தும் உரித்தாகுக  ....

உகாசேவா மருத்துவமனையின் முன்னேற்றத்துக்காக கம்பாலாவில் நிகழ்ந்தேறிய விழாவுக்காக பல வாரங்கள் எமது தோள்களில் நாங்கள் சுமந்த பாரங்கள் இறங்கியமைக்கு ஆனந்தமடைகிறேன்  ....

அப்துல் கபூர்

09.12.2019  ....

படங்கள் கோர்ப்பு

உணர்வுமிகு உணவுக்குழு  ....

பேரிறைவன் சிந்திய அருளெனும் வெள்ளத்தில் நீந்திய உணவுத் திருவிழா சுவைத்த வெற்றிக் கனிகள் உணவுக்குழுவின் ஓங்கிய ஒற்றுமைக்கும் உன்னத உழைப்புக்கும் கிட்டிய மாபெரும் பரிசு என்றால் அது மிகையாகாது ....

எண்ணிக்கையில் ஆயிரம் தாண்டிய விருந்தினர்கள் குதூகலமாய் பங்கேற்றமை  வெற்றிக்கான ஆரம் தொடுத்து நான்கு மாதங்கள் நாம் சுமந்த பாரம் எமது தோள்களை விட்டிறங்கி தூரம் செல்கிறேன் என்று சைகை காட்டி புன்னகையோடு நகர்ந்தது ....

முப்பதுக்கும் மேற்பட்ட அசைவ சைவ இனிப்பு வகை உணவுகளை மும்பரமாய் பரிமாற பம்பராய் சுழன்றாடிய இருவரணி மூவரணி நால்வரணி ஐவரணி அறுவரணி எழுவரணி என ஆங்காகே பரந்து விரிந்து அவரவருக்குரிய அரும் பணிகளை நிறைவேற்றி நிகழ்வு செவ்வனே நிகழ்ந்தேற காரணர்களான உணவுக்குழு மற்றும் சிறப்புக் குழுவினருக்கு உளமார்ந்த நன்றியெனும் வண்ண ஆடைகளை தைத்து அணிவிக்கிறேன் ....

ஊரிலிருந்து வந்திருந்து சமைப்பு பணிகளுக்கு தலைமையேற்று நாவுகளை சுவைகளில் மிதக்க வைத்த சமையல் புயல் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்  ...

என் மீது அபார நம்பிக்கை வைத்து என்னை ஒருங்கிணைப்பாளராய்  நியமித்த செயற்குழுவுக்கும் ...

எனது குரலிலும் விரலிலும் விளைந்த அன்புக்கும் அரவணைப்புக்கும் கட்டுப்பட்டு உற்சாகமாய் இயங்கி தொழிலகங்களின் நன்கொடைகளை குவிக்கவும் டிக்கெட்டுகள் விற்கவும் உழன்றாடிய உணவுக்குழுவுக்கும் ராயல் சல்யூட்டினை மனமார சமர்பிக்கிறேன் ....

என்னை ஆரோக்கியமாய் செயலாற்ற சக்தியளித்து விழா சிரமமின்றி நிறைவேற நாம் கையேந்திய துவாக்களை பூர்த்தியாக்கிய கிருபையாளன் அல்லாஹ்க்கும் நேர்த்தியான  நன்றியினை உரித்தாக்கி மகிழ்கிறேன் .....

பதிமூன்று கலந்துரையாடல் கூட்டங்களோடு பயணித்து கண்ணிய நிறைகளையும் நுண்ணிய குறைகளையும் சுமந்த ஏழாவது உணவுத் திருவிழாவுக்கு நான் ஒருங்கிணைப்பாளாராய் வாழ்ந்தேன் என்பதே பொருத்தமாக அமையும் ....

நன்கொடையளித்த நிறுவனங்களுக்கும் விழாவுக்கு இடமளித்த நிர்வாகத்தாருக்கும் கலந்திட்ட விருந்தனர்களுக்கும் இதர ஏற்பாடர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் ....

நிகழ்வுக்குரிய வெற்றிக்கு காரணமான புகழ்வுக்குரிய இறைவன் அனுப்பிய லேசான  சாரல் மழை ஐந்தாறு நிமிடங்கள் நிகழ்ச்சியில் கலந்தாடி நம்மை வாழ்த்தி கலைந்தாடி நீர்த் துளிகள் கரைந்தாடி விடைபெற்றுச் சென்றது ....

பேரன்புடன்

அப்துல் கபூர்

04.12.2017 ....

விழா நிகழ்தேறிய நாள்

03.12.2017 ஞாயிறு மதியம் ...

நிகழ்ந்தேறிய இடம்

இந்தியன்அசோசியேஷன் வளாகம்

கம்பாலா உகாண்டா ...

படங்கள் கோர்ப்பு

நானும் அப்துல் கபூர்

நண்பர் அமீர் அலியும் ...


No comments: