Monday, March 13, 2023

வாழ்க்கை ஒரு பக்கம் அள்ளி கொடுத்தாலும், இன்னொரு பக்கம் கிள்ளித்தான் கொடுக்கிறது..!

 வாழ்க்கை ஒரு பக்கம் அள்ளி கொடுத்தாலும், இன்னொரு பக்கம் கிள்ளித்தான் கொடுக்கிறது..!


வாழ்விடம் என்பது மனிதனுக்கு அத்தியாவசியமான ஒன்று என்றாலும்,  பல பேர் அதை அனாவசியம் செய்கிறார்களோ..? என்று எண்ணும் அளவிற்கே, அவர்களின் மாட மாளிகைகள் அமைந்து விடுகின்றன.


சென்னைக்கு சென்ற பின்பு தான், மக்கள் ரோட்டில் வசிப்பார்கள் என்ற விசயமே தெரிய வந்தது. சிறு குடிசைகள், நடைபாதை கூடாரமென்ற அவர்களின் வாழ்க்கை முறையே வேற…


துபாயில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களை சந்திப்பதென்பது அபூர்வம் தான்.. பல நேரங்களில் மிஸ்கின்களுக்கு கொடுக்கும் உணவிற்கு ஆள் கிடைக்காமல் அலைந்துள்ளோம்..!  அங்கே அரபிகளின் வீடுகள், ஆடம்பரத்தின் உச்ச கட்டம்.


அபுதாபி EMIRATES PALACE ப்ராஜக்டில் வேலை செய்யும் போது, GCC மன்னர்களுக்கான SUITE உள்ள டாய்லெட் அளவையும், அலங்கரிப்பையும் பார்த்தே தலை சுற்றி போயுள்ளேன்.


என்றாலும் சமீபத்தில் கும்பகோணம் அருகில் ஒரு சாலை பயணத்தில் பார்த்த ஒரு நகரும் வீடு, என்னை உலுக்கியது…நகரும் வீடுகளின் கேரவன் வீடுகளை பார்த்துள்ளேன்..நடிகை நடிகர்கள், மற்றும் பெரும் பணக்காரர்கள் உபயோகப் படுத்தும் சொகுசு வீடுகள் அது…


ஆனால் இது அப்படி அல்ல, ராஜஸ்தானிலிருந்து பொருட்கள் விற்க தன் மனைவி மகள்களுடன் இந்த வண்டியில் கிளம்பி…இந்தியா முழுதும் பயணித்து, கடைக்கோடி தமிழகம் வந்து, தங்கள் பொருட்களை விற்று, பயணங்களில் பொருட்களைத் தயாரித்தும்,  சமைத்துண்டு வாழும் இந்த வாழ்க்கை முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது…


அதை பார்த்த நிமிடங்கள் மிக குறைவே என்றாலும், பட்டாம் பூச்சிகளாய் சிரித்து மகிழ்ந்து, தங்கள் மாளிகையில் வலம் வந்த பெருமிதமும், முக மலர்ச்சியும் காணக் கிடைக்காதது..!


கிடைத்த நொடிகளில் இதைக் கிளிக்கியதுடன், பச்சைக்கிளிகள் தோளோடு பாடலில் வரும் இந்த வரிகளை என்னை அறியாமல் முணு முணுத்தேன்..!



”சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே  சொர்க்கம்   இருக்கு

அட சின்ன  சின்ன  அன்பில்  தானே   ஜீவன்  இன்னும் இருக்கு

பட்டாம்பூச்சி   கூட்டத்துக்கு பட்டா  எதுக்கு

அட பாசம்  மட்டும் போதும்  கண்ணே காசு  பணம்  என்னத்துக்கு..?”

கீழைராஜா 


No comments: