Monday, March 20, 2023

பிரம்மாண்ட இசைச்சேவை

 பிரம்மாண்ட இசைச்சேவை

=======================

NagoorRumi



இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளரிடமிருந்து எனக்கொரு அலைபேசி அழைப்பு வந்தது. ஏற்கனவே ரஹ்மான் என்னிடம் நேரடியாக இரண்டு மூன்று முறை பேசியுள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யவேண்டிய ஒரு விஷயம் பற்றி. அது நடக்கும்போது சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ். 


விஷயம் என்னவென்று கேட்டேன். நேரு ஸ்டேடியத்தில் ரஹ்மானுடைய ஒரு இசை நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும், அதற்கு எனக்கு எத்தனை பாஸ் வேண்டுமென்றும் (ரஹ்மான் கேட்கசொன்னதாகக்) கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நான் இரண்டு அல்லது மூன்று என்று சொல்லி வைத்தேன். மூன்று பேருக்கான பாஸ் வாட்சப்பில் மறுநாள் அனுப்பிவைக்கப்பட்டது! அம்மூன்றும் விவிஐபி பாஸ்கள். 


பாஸ்களில் ப்ரான்ஸ், சில்வர், கோல்ட், டைமண்ட், ப்ளாட்டினம், விவிஐபி என ஆறு வகை உள்ளதாகவும் அதில் விவிஐபிதான் பணம் ரொம்ப அதிகமென்றும் என் பேரன் சொன்னான். எவ்வளவு என்று கேட்டேன். ’நெட்’டில் ’செக்’ பண்ணி அவன் ஏற்கனவே வைத்திருந்ததால் சட்டென்று பதில் சொன்னான்: 25,000/- ரூபாய்! 


மேடைக்கு எதிரே இருந்த இரண்டு மூன்று வரிசைகள்தான் விவிஐபி சீட்கள்! அப்படியானால் எனக்காக அவர் 75,000/- ரூபாய்க்கான சீட்களை வழங்கியிருந்தார்! அல்ஹம்துலில்லாஹ். இவ்வளவு செலவு செய்து நானாக ஒரு இசைநிகழ்ச்சிக்குப் போயிருப்பேனா என்றால் நிச்சயமாக மாட்டேன்! 


எனக்குத் துணையாக என் பேரனும், என் பழைய மாணவரும் இந்நாள் பேராசிரியருமான ப்ரவீன் குமாரும் வந்தார்கள். நாங்கள் மூவரும் போனோம். என் மருமகன் நிசார் வருவதாக இருந்தது. அவருக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை.  


ரஹ்மான் எட்டு மணிக்குத்தான் வந்தார்.அதுவரை ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் ஆறரைக்கே போய்விட்டோம். எட்டு மணிக்குத்தான் நிகழ்ச்சி ஆரம்பித்தது. பசி வேறு கிள்ளியது. நல்லவேளை பாட்டில் தண்ணீர் ஒரு நண்பர் கொடுத்தார். தப்பித்தேன். 


சினிமாப்பாடல்கள் எதுவும் கிடையாது. விளம்பரத்திலேயே அதை ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார். எல்லாமே சூஃபிப்பாடல்கள்தான். எல்லாமே பெருமானாரைப்பற்றியும், நாகூர் பாதுஷா நாயகம், க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி, நிஜாமுத்தீன் அவ்லியா, மும்பை ஹாஜி அலீ, சாய்பாபா இப்படி முஸ்லிம் இறைநேசர்களைப் பற்றிய பாடல்கள்தான். 


(சாய்பாபாவும் முஸ்லிம்தான். பக்தர்கள் அவரை மதம் மாற்றிவிட்டார்கள்! என்னுடைய ’தாஜுத்தீன் பாபா’ என்ற நூலில் இதுபற்றிய விபரம் கொஞ்சம் கொடுத்துள்ளேன்). நாகூர் பெரிய எஜமானைப்பற்றிய பாடல் எடுபடவில்லை (எனக்கு). 


ரஹ்மான் அல்லாமல், ஒரு பத்து பேராவது பாடினார்கள். துவக்கத்தில் ஸ்வேதா, ஷைலஜா, கதீஜா ஆகியோர் பாடினார்கள். ஒரே உடை தரித்த ஏழு ஆண்கள் அவ்வப்போது பாடினார்கள். ஜாவித் அலீயும் பாடினார். பாலஸ்தீனிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பாடகி புர்காவுடன் வந்து மூன்று பாடல்கள் பாடினார். அட்டகாசமான குரல். 


ட்ரம்ஸ் மணியின் பங்கு இதில் முக்கியமானதாக இருந்தது. அவர் ஒரு மேதையாகத்தான் இருக்கவேண்டும். அப்படி வாசித்தார்.

 

ஒரு பத்தாயிரம் பேராவது வந்திருப்பார்கள். பத்தரை மணி வரை இசை மழை. பிரம்மாண்ட லைட்டிங் செட்டப்பின் அழகு சொல்லி மாளாது. எல்லாமே அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் கம்ப்யூட்டரைஸ்ட் பிம்பங்கள். எனக்கு வலது பக்கமாக ஹாஜா எங்கள்  ஹாஜா என்ற புகழ்பெற்ற பாடலை எழுதிய சகோதரர் கவிஞர் மஹ்சூக் ரஹ்மான் தனது குடும்பத்துடன். நாங்கள் ஒன்றாகத்தான் வாசலிலிலிருந்தே உள்ளே சென்றோம். எதிரே லேட்டாக வந்து விஜய்சேதுபதி கொஞ்சநேரம் அமர்ந்திருந்தார். பின் திடீரென்று காணாமல் போனார். 


வடநாட்டுக்காரர்களும் அதிகமாக வந்திருந்தார்கள் என்றாலும் ஒவ்வொரு பாடலுக்கும் எல்லாரும் கைதட்டிக் கொண்டாடிக்கொண்டே இருந்தார்கள். ரஹ்மானின் நிகழ்ச்சிக்காக இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஓடும் என்ற தகவல் வேறு அசத்தியது!


நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவெனில் யாருக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பதுதான். சினிமாத்துறையில் யார் கண்ணிலும் படாமல் இருட்டில், 40, 50 அடி உயரத்தில் ராட்சச விளக்குகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் லைட்மேன்களுக்காகத்தான் இந்நிகழ்ச்சி. 


சமீபத்தில் நாற்பதடி உயரத்தில் இருந்து ஒருவர் விழுந்து இறந்திருந்தார். ஆனால் அவர்களுக்கென்று சங்கமோ, சரித்திரமோ, சந்தோஷமோ இருப்பதாகத் தெரியவில்லை. சஞ்சலங்களும், சங்கடங்களும் மட்டுமே போலும். 


இதில் கிடைக்கும் பணத்தை அவர்களுக்காகக் கொடுக்கவே இந்நிகழ்ச்சியை ரஹ்மான் ஏற்பாடு செய்துள்ளார். அவர் நீடூழி வாழவேண்டும்.

NagoorRumi

  இசைக்காகவும்,

 இல்லாதவர்களுக்காகவும்.






 20.03.23

No comments: