Friday, May 19, 2017

சிங்கப்பூர் பயணம்./ Mohamed Salahudeen

சிங்கப்பூர் பரப்பளவில் மிகச் சிறிய நாடுதான் ஆனால் உலகின் பல பெரிய நாடுகள் இந்த நாட்டிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமானத் திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது.
எங்கே மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கே மக்களின் செயலூக்கமும் திறனும் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது.
இங்கே மூன்று இன மக்கள், நான்கு பெரும் மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், பிணக்குகள் இல்லை.
மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் அரசு அக்கரையோடுச் செயல்படுகிறது.
மக்களிடமும் அந்த எண்ணம் இருக்கிறது.
நான் பயணித்தக் காரில் காரோட்டி வந்த சீனப் பெண்மணி சொன்ன வார்த்தை இது.
" we are united family la"
நாங்கள் ஒன்றுப்பட்டக் குடும்பம்.
கேட்பதற்குத்தான் எத்துணை மகிழ்ச்சியாய் இருக்கிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மக்களின் விகிதாச்சார அடிப்படையில் குடியிருப்புக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம்.
எல்லோருக்கும் தங்கள் மதங்களைப் பின்பற்ற சம உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
மதச் சடங்குகள் பிற மக்களுக்கோ அல்லது பொது அமைதிக்கோ குந்தகம் விளைவிக்கும் செயலுக்கு அனுமதி இல்லை.
இந்துப் பண்டிகைக் காலத்தில் லிட்டில் இந்தியா பகுதியும்,
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் ஆர்ச்சர்ட் சாலையும்,
சீனர்களின் கொண்டாட்டங்களில்
சைனா டவுன் பகுதியும்,
இஸ்லாமியர்களின் பண்டிகைக் காலத்தில்
கேலாங் வீதியும் களைக் கட்டுமாம்.
இப்போது நோன்புக் காலம் நெருங்குவதால்
கேலாங் வீதி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாட்டில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. மக்கள் எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதில்லை.
வரிசையைப் பின்பற்றுகின்றனர்.
மக்கள் வீதிகளில் குப்பைகளை வீசுவதில்லை. இதைப் பார்க்கும் நமக்கும்
அவர்களைப் போல் நாமும் செயல்படும் எண்ணம் இயல்பாக வந்துவிடுகிறது.
இங்கு வந்தச் சேர்ந்தவுடன் பரப்பரப்பான
வாழ்க்கையைக் கண்டு நாமும் பரப்பரப்பாகி விடுகிறோம்.
சோம்பேறிகளுக்கு இங்கு வேலையில்லை.
உழைக்கத் தயாராக இருப்பவர்களே இங்கு வாழ முடியும் என்ற எணணம் மேலோங்குகிறது.
இங்கே இலவசம் என்று எதுவுமில்லை.
எல்லாச் சேவைகளுக்கும் விலை இருக்கிறது,
கொடுக்கும் விலைக்குத் தரமான சேவைக்கு உத்தரவாதம் இருக்கிறது.
இங்கு திருட்டுச் செயல் எளிதாக இருக்கலாம் தப்பிப்பதுதான் மிகவும் கடினமாக இருக்கும்.
எல்லா நேரங்களிலும் இடங்களிலும் நாம் கண்காணிக்கப்படுகிறோம்.
இத்துணை வசதிகள் இருக்கிறதே மகிழ்ச்சியாக இருக்கிறோமா என்ற கேள்வியும் எழுகிறது.
மகிழ்ச்சி மனம் சார்ந்த ஒன்று ஆனால் இங்கே எல்லோருக்கும் முழுமையானப் பாதுகாப்பை உறுதிச்செய்யும் நோக்கில் அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்றே உணர்கிறேன்.

Mohamed Salahudeen





No comments: