Monday, May 29, 2017

இது என் சந்தோஷக் கவிதை./ Abu Haashima

இது என் சந்தோஷக் கவிதை.
*******
விசித்திரமானவர்கள் 
முசல்மான்கள் !
பொழுது விடிந்தால்
சாயா காப்பியிலிருந்து
பொழுது அடைந்தால் பேயம்பழம்வரை 
ஆகாரங்களால் 
வயிற்றை அடைத்தே வாழ்பவர்கள் 
நாங்கள் !
காலை பத்து மணிக்குள்
இடியாப்பமோ
ரொட்டியோ 
முறுகின முறுவலோ 
உள்ளே போகாவிட்டால் 
க்ஷீணம் வந்து விடும் எங்களுக்கு !
மதிய வேளை 
மணக்க மணக்க 
பொரிச்ச மீனும் 
கறிவச்ச மீனும் 
இருந்தால்தான் 
தொண்டையில் இறங்கும் சோறு !
ராத்திரிக்கு 
இருக்கவே இருக்கு 
பானு சிக்கன் புரோட்டாவும் 
மட.டன் சால்னாவும் !
ராத்திரி ஒரு நேரம் 
கொஞ்சம் குறைந்தாலும் 
வயிறு பொறுக்காது 
குப்புறப் படுத்தாலும் 
தூக்கம் வரவே வராது !
வக்கணையாய் 
மூணு நேரம் உண்டாலும்
ஏத்தங்காய் சிப்சும்
மயில்கடை சமோசாவும்
அக்காம்மா கொடுத்துவிட்ட 
ஆட்டுக்கால் கேக்கும் 
தின்று முடிச்சுதான் 
சாயங்காலம் 
சாயா குடிப்போம் !

செவ்வாய்
வெள்ளி 
சனித் தவிற 
மற்ற நாளெல்லாம் 
திங்கிற நாட்கள்.
அதாவது...
கல்யாண வீட்டின் 
கடைசிச் சட்டி 
காலியாகும்வரை 
கர்ம சிரத்தையாய் 
காத்திருந்து 
பிரியானி திங்கும் நாட்கள் !
மற்ற நாட்களையும் 
நாங்கள் மதிக்கத் தெரிந்தவர்கள்தான் !
ஃபாத்தியா 
காது குத்து 
மைலாஞ்சி 
சுன்னத் 
மறுவீடு 
பால்காய்ச்சு 
வலிமா
இன்னும் வரிசையா 
இப்படி விருந்து வைக்கிறீங்களேம்மா என்று 
அலுத்துக் கொள்ளும் நாட்கள் !
வாழ்க்கையில் 
மேடுபள்ளம் இருந்தாலும்
எங்கள் வயிறுகளில் மட்டும்
பள்ளம் விழ 
விடுவதேயில்லை நாங்கள் !
கம்பளம் காய்கறிக்கடைக்காரனும்
கனகமூலம் சந்தை கதிர்வேலனும்
சிரிச்சுகிட்டே சொல்வாங்களே ...
" பாய்..
தின்று கெட்டவன் துலுக்கன் " ன்னு.
அதுதாங்க எங்க குணம்.
திங்கவும் செய்வோம் 
திங்கக் கொடுக்கவும் செய்வோம்.
அப்படி இருந்த நாங்கதான் 
இப்போ 
இப்படி ஆயிட்டோம்!
விடிகாலை 
அஞ்சு மணியிலிருந்து 
சாயங்காலம் 
ஏழுமணிவரை 
பச்சத்தண்ணிக்கூட குடிக்காம 
பட்டினியா
வாழ்ந்துகிட்டிருக்கோம் !
கோழி பொரிக்கும் 
வாசனையை வைத்தே 
கோழியின் ருசியை சொல்ற 
எங்க நாக்கு 
மூக்கைத் தொளைக்கிற 
மட்டன் குருமா வாசனை 
வீசிய பிறகும் 
உமிழ் நீரைக்கூட சுரக்காமல்
உணர்வில்லாமக் கிடக்கே !
சாயா இல்லேன்னா 
சவம்போல இருந்தவங்க 
சுப்ஹ் தொழுது 
சுறுசுறுப்பா குர்ஆன் 
ஓதுறதைப் பார்த்தா 
இவங்களா இப்படின்னு 
ஆச்சரியம் வருதே !
சிகரெட்டை ஊதித் தள்ளியவங்க 
அதன் சிந்தனையே இல்லாமல் 
இறைவனை 
சிரம் பணிந்து கிடப்பதை 
எங்கேனும் கண்டதுண்டா ?u
எப்பவும் போல 
வர்ற பிறைதான்.
ஆனா 
இது ரமழான் பிறை !
இதைப் பார்க்கத்தான் 
எங்கள் மனசுக்குள் எத்தனை நிறை !
பண்டிகை நாளை ஆசையோடு எதிர்பார்த்திருக்கோம் !
வாப்பாவோ மகனோ 
வெளிநாட்டிலிருந்து வரும் நாளை 
எண்ணி எண்ணி எதிர் பார்த்திருக்கோம் !
கல்யாண மாப்பிள்ளையா 
ஆகப்போற நாளுக்கு 
ஆசைப்பட்டிருக்கோம் !
தாயாவோ 
தகப்பனாகவோ 
மாறப்போற நாளை எண்ணி 
மகிழ்ந்திருந்திருக்கோம் !
அட 
தேர்தல் முடிவைக்கூட 
எதிர்பார்த்து 
தூங்காமே முழிச்சிருக்கோம் !
ஆனா ...
ஒரு மாசம் 
பட்டினியா கிடக்கப்போற நாளை 
உற்சாகத்தோடு வரவேற்க 
உலகத்தில் 
எங்களைத் தவிற 
வேறு யாராவது 
ஆவலோடு காத்திருப்பாங்களா ?
அதுதாங்க முசல்மானின் 
ஈமான் !
இறைவனுக்காக ..
உடல் 
மனம்
சொல் 
செயல்
எல்லாம் 
சுத்தம் பேணும் 
சத்தியவான் 
இந்த முசல்மான் !
தன்னை எரித்து 
இன்பம் காணும் 
இறை நேசம் ! 
எரிவது சுகமா ?
எரிவதே சுகம் !
தன்னை 
தான் என்ற எண்ணத்தை 
தான் செய்த பாவத்தை 
தான் சேர்த்த செல்வத்தை 
எரித்து எரித்து 
சுத்தம் செய்பவன் 
முசல்மான் !
உண்ண உணவிருந்தும் 
உண்ணாதவன் !
குடிக்க நீரும் 
தொண்டை வரளும் தாகமும் 
இருந்தும் குடிக்காதவன் !
உமிழ்நீரைக்கூட 
உண்ணாதவன் !
கையருகே 
கரம்பிடித்த 
காதல் துணையிருந்தும் 
இச்சையை 
அச்சத்தால் 
இறையச்சத்தால் வெல்பவன் 
முசல்மான் !
ரமழான் என்ற 
வசந்தத்தை 
பூமிக்கு அனுப்பி விட்டு
ரய்யான் என்ற 
சொர்க்கத்தை 
நோன்பாளிகளுக்குத் 
திறந்து வைக்கின்றானே 
இணையற்ற இறைவன் ...
அவனையே 
நாங்கள் வணங்குகின்றோம்
அவனுக்காகவே 
நொன்பும் நோற்கின்றோம் !
இறைவா...
ரமழானின் அருள் போர்வையால்
எங்களைப் போர்த்து !
அதில் 
சொர்க்கத்தின் வாசனை 
கமழட்டும் !
@நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய ரமழான் வாழ்த்துக்கள் !

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails