Sunday, May 14, 2017

ஒரு விநோதத் தாய் விந்தைத் தனயன்…!

ஒரு விநோதத் தாய்
விந்தைத் தனயன்…!
1963ஆம் ஆண்டு காலகட்டமாக இருக்கலாம், உரிமைக்குரல் வார இதழ் காயிதெ மில்லத்தை நிறுவநராகவும் என் தந்தை அ.க. ரிபாயி சாஹிபை ஆசிரியராகவும் கொண்டு உதயமானது. இதுதான் முஸ்லீம் லீக் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் வார இதழ்.
நிறுவநருக்கும் எந்தப் பணமும் வாராது, ஆசிரியருக்கும் எந்தச் சம்பளமும் கிடையாது.
எங்கள் தந்தையார் சென்னையிலும் நாங்களெல்லாம் தென்காசியிலும்(நெல்லை) வாழ்ந்துவந்தோம்.
ஒரு முறை எங்கள் தந்தையார் ஒரு வாரம் தென்காசியில் வந்து தங்கினார்.
சென்னைக்கு மீண்டும் செல்கிறார். எனக்கும், என் சகோதரர்களுக்கும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

அன்றைக்கு ஒரு ரூபாய் மிகப் பெரிய தொகை. இதற்கு முன்னால் இப்படி ஒரு தொகை எங்களுக்குத் தந்ததும் இல்லை.
ஒரு ரூபாய்க்கு 4 சினிமா தரை டிக்கெட்டும், 4 முறுக்கும் வாங்கிக்கொள்ளலாம்.
மதியம் தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் மெயிலில் என் தந்தையார் சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.
எங்கள் ஊரில் அந்த நேரத்தில் மொத்தம் பரதன், பாக்கியலட்சுமி என்று இரண்டு தியேட்டர்கள்தாம் உண்டு.
நான் பாக்கியலட்சுமித் தியேட்டருக்கு வீட்டுக்குச் சொல்லாமல் போய்விட்டேன்.
ஒரு தரை டிக்கெட், ஒரு முறுக்கு.
9.30 மணிக்குப் படம் முடிந்தது. வெளியே கூட்டம் வருகிறது. எனக்குக் கை, கால் எல்லாம் ஆட ஆரம்பித்து விட்டன.
என் வீட்டுக்கு வந்து முற்றத்துக் கதவை லேசாகத் திறந்தேன். வீட்டில் என் தாயாரும், வேலைக்காரக் கிழவியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
வேலைக்கார அம்மா, "சின்ன புள்ளையை இன்னும் காணோமே, ராத்திரி ஆயிடிச்சே", என்கிறார்.
"பன்னி மாடன் வரட்டும், அவங்க வாப்பா இன்னைக்கு ரூபா கொடுத்தாங்கயில்ல அதான் சினிமாக்குப் போய் இருப்பான் , வரட்டும் தோலை உறிக்கிறேன்", என்ற என் தாயாரின் அதட்டல் மொழி என் காதில் விழுகிறது.
அவ்வளவுதான் திறந்த கதவை மெதுவாக மூடிவிட்டு மீண்டும் தெருவில் இறங்கினேன். அடிக்குப் பயந்து நடந்தேன். மீண்டும் பாக்கியலட்சுமி தியேட்டர். மீண்டும் ஒரு தரை டிக்கெட், ஒரு முறுக்கு.
படம் கொஞ்சம் ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்கள் தெருவில் உள்ளவர்கள் தியேட்டருக்குள் வந்து தேடுகிறார்கள். நான் அவர்களைப் பார்த்து விட்டேன். அவர்கள் கண்ணில் படாமல் தரைத்தளத்தில் உருண்டு உருண்டு தப்பி விட்டேன்.
12.30-1 மணிக்கு படம் முடிகிறது. மீண்டும் பயம். வீட்டுக்கு போகாமல், தென்காசி ரயில் நிலையத்திற்கு போகிறேன்.
ரயில்வே நிலையம் போகும் வழியில் டீ ஸ்டால்கள் விடிய விடிய திறந்து இருக்கும்.
அநேகமாக எல்லோருமே எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்தவர்கள்தாம். அதில் ஒரு டீக்கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு விரைந்து வந்து என் கையைப் பிடிக்கிறார். அவர் எனக்கு உறவுக்கு காரரும் கூட. பால், பன், பழம் எல்லாம் தந்து சாப்பிடச் சொன்னார்.
"ஏன்பா யார் கிட்டயும் சொல்லாம ஓடி வந்துட்ட ?" என்றார்.
"அம்மா அடிச்சாங்களா? "
"இல்லை. இல்லை. இப்பதான் அடிப்பாங்கன்னு பயந்துகிட்டு இங்க வந்துட்டேன் " என்றேன்.
அவர் கடையில் இருந்த ஒருவரை கடையைப் பார்க்கச் சொல்லிவிட்டு என்னை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
எங்கள் தெருவுக்குள் நுழைந்தோம், தெரு முழுக்க உறவுக்காரர்கள்தாம். எல்லார் வீடுகளிலும் விளக்கு எரிகிறது. எல்லார் வீட்டு வாசலிலும் ஆள்கள் இருக்கிறார்கள்.
எனது பெரிய வாப்பா பார்த்து விட்டார்கள். என்னை கூப்பிட்டார்கள்.
நடந்ததை கேட்டார்கள்.
“போடா பயித்தியக் காரப் பயலே அம்மா அடிப்பாளா? வீட்டுக்குள்ளப் போடா அவ கதறி அழுதுகிட்டு இருக்கா” என்றார்கள்.
அம்மா ஏன் அழுகிறார்கள்? எனக்கு ஆச்சரியம்.
என் அம்மா அழுது நான் பார்த்ததில்லை.
வீட்டுக்குள் நுழைந்தேன் என் அம்மா என்னை கட்டி அணைத்துக் கொண்டார்கள்.
நான் எதிர்பார்க்காததெல்லாம் நடக்கிறது. இன்னும் எனக்கு ஆச்சர்யம்.
என் அம்மா சிவந்த கண்களைத் துடைத்துக் கொண்டே வா வந்து சாப்பிடு என்று என்னை கூப்பிடுகிறார்கள்.
" வேண்டாம்மா, ஹக்கீம் மச்சான் கடைல பாலும் பண்ணும் பழமும் தந்தாங்க. சாப்பிட்டுட்டேன்", என்றேன்.
யாரும் எதுவும் சொல்லவில்லை. என்னை படுக்கச் சொன்னார்கள். தூங்கிவிட்டேன்.
அப்பாடா தோலை உறிக்கல என்ற நிம்மதியில் நன்றாகத் தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலையில், காலை உணவுக்குப் பின் என்னைப் பிடித்து என் அம்மா தோலை மட்டும் உறிக்காமல் விளாசித் தள்ளி விட்டார்கள். நேற்று இரவு விழாத அடி வட்டியும் முதலுமாகக் காலையில் விழுந்தது.
வேலைக்காரக் கிழவியம்மா என்னைப் பிடித்து அணைத்துக்கொண்டு தடுத்து நிறுத்தினார்கள். தப்பித்தேன்.
முதல் நாள் இரவு நடந்தது...
11 மணி ஆகியும் வீட்டுக்கு வரவில்லை என்ற உடனே எங்க அம்மாக்குப் பயம் வந்து விட்டது. எங்கள் தெருப் பையன்கள் இரவு இருட்டிய உடன் , "டீயான் " விளையாட ஆரம்பித்து விடுவோம். சிலர் மறைந்து கொள்ளுவோம் ஒருவன் கண்டுபிடிக்க வேண்டும். மறைந்து கொண்டவர்கள் டீயான் என்று கத்துவோம். தேடுபவன் தேடலைத் தொடரவேண்டும். இதுதான் டீயான் விளையாட்டு.
நான் இதுவரை டீயானில் மாட்டியதே இல்லை . என் வயதுப் பையன்கள் வர பயப்படும் இடத்தில் சென்று ஒளிந்து கொள்வேன்.
எங்கள் தெருப் பள்ளிவாசல் மையத்தாங் குழி (அடக்கஸ்தலம்) ,
அருகில் உள்ள பாழடைந்த பிள்ளையார்கோயில் தோட்ட மர கிளைகள் , சுடலைமாடன் கோயில் பீடத்தின் பின்பக்கம் மறைந்து கொள்வேன். இங்கெல்லாம் பாம்புகள் அதிகம் இருக்கும். பேய்ப் பயம் நிறைந்து இருக்கும்
இரண்டு தெரு தள்ளி ஆழமான வட்டக் கிணறு இருக்கும். படிக்கட்டு வழியே போய்க் கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொள்வேன். எவரும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது. இது எனக்கு ஒரு பெருமிதம்.
அன்று இரவு டீயான் விளையாட நான் வரவில்லை என்று தெரிந்து விட்டது.
என் அம்மாவுக்குப் பயம் வந்து அழுகை வர ஆரம்பித்து விட்டது.
தெருவில் உள்ளவர்கள் 12 மணிக்கெல்லாம் தேடஆரம்பித்து விட்டார்கள்.
பள்ளிவாசல் மையத்தான் குழி , பிள்ளையார் கோயில் தோட்ட மரங்கள், சுடலைமாடன் கோயில் இருட்டு பக்கம், கிணற்றுக்குள், என்று எங்கும் தேட ஆரம்பித்து விட்டார்கள். முடியவாகக் கிணற்றுக்குள் விழுந்து செத்து இருக்கலாம் என்று எண்ணி விட்டார்கள். மற்றோரு பிரிவினர் இரண்டு தியேட்டர்களை அலச ஆரம்பித்து விட்டார்கள். ரயில்வே ஸ்டேஷனிலும் தேட ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த நிலையில்தான் நான் மாட்டி இருக்கிறேன்.
சில ஆண்டுகள் சென்றன. சென்னை, பின்னர் தென்காசி, வாவா நகரம், அடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் . என் பயணம் தொடர ஆரம்பித்து விட்டது.
ஏனோ தெரியவில்லை நான் ஒருவன் மட்டும் சிறு வயதில் இருந்து குடும்பத்தில் ஒட்டாமல் இருந்து இருக்கிறேன்.
சிதம்பரத்தில் இருந்து சொந்த கிராமமான வாவா நகரத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை எப்போதாவது வருவேன். வந்த உடன் என் அம்மா மடியில் கொஞ்ச நேரம் தலைவைத்துப் படுத்துக் கொள்வேன்.
என் தலையை வருடிக்கொடுத்துக் கொண்டே என்னுடன் பேசிக்கொண்டு இருப்பார்கள். அன்று இரவே என் தாயார் வற்புறுத்தியும் கேளாமல் புறப்பட்டுப் போய் விடுவேன். மீண்டும் அடுத்த ஆண்டுதான்.
ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி இருப்பேன்.
மொட்டை அடித்து இருப்பேன், தாடியுடன் வருவேன், இன்னொருமுறை மீசை மட்டும் இருக்கும் மொட்டை அடித்து இருப்பேன்.
தினத்தந்தி பத்திரிகையில் அடையாளம் தெரியாத பிரேதம் ரயிலில் அடிப்பட்டுக் கிடக்கிறது, மரத்தில் தூக்கிட்டு ஒரு இளைஞனின் அடையாளம் தெரியாத பிரேதம் கிடக்கிறது, லாரியில் அடிபட்டு ஒரு இளைஞனின் அடையாளம் தெரியாத பிணம் கிடக்கிறது. இப்படி செய்திகள் வரும்.
அந்த பிரேதத்திற்குச் சொல்லப் படும் சில உருவத் தோற்றங்கள், ஏதாவது வடிவில் நானாக இருக்கும் என்றே என் அம்மா தீர்மானித்து விடுவார்கள்.
அவ்வளவுதான் . மூன்று நாளைக்கு வயிற்றால் போக ஆரம்பித்து விடும். என் வயது ஒத்த பையன்களுக்குச் சாப்பாடு போட ஆரம்பித்து விடுவார்கள். என் தந்தையாருக்கு இது வேடிக்கையாக இருக்கும்.
எனக்கு இவை கேள்விப்படும் பொழுது நகைச்சுவை சேதியாகத் தெரியும் . இப்படிக் கழிந்தன ஒரு விநோதத் தாயின் விந்தைத் தனயனின் கடந்த காலங்கள்.
என்னுடைய 57 -58 வது வயதில் ஒருநாள் இரவு, என்னுடைய அம்மாவின் நினைப்பு எனக்கு வந்து விட்டது. அந்த முழு இரவும் என் அன்னையார் எனக்காக இதுவரை வடித்த கண்ணீர்களை நான் அவர்கள் நினைவில் அன்று கொட்டித்தீர்த்தேன். யாருக்கும் தெரியாமல் அமைதியாக.
அன்றிலிருந்து இன்று வரை என் தாயாருக்காகவும் என் தந்தையாருக்காகவும் தினம் தினம் பிராத்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

Hilal Musthafa

No comments: