Thursday, December 8, 2016

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம்

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம் என்கிற கதையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பற்பல கதைகள் ஆதாரமின்றியும், ஆதாரங்கள் போல காட்டியும் உலா வந்தவண்ணமிருக்கின்றன.
இன்னொரு பக்கம்,உண்மையா பொய்யா என்பதை ஆராயாமல் 'கைப்பேசியில் கிடைப்பது கட்டாயம் ஃபார்வர்டு செய்வதற்கே'என்ற அடிப்படையில் ஒரு கூட்டம் உடனடியாக முன்னெடுத்து அனுப்பிப் பரப்பிக் கொண்டேயிருக்கிறது. இவர்கள் தாம் Forward Community ஆக ஆசைப்படுபவர்கள்.
நகைச்சுவை என்ற பெயரில் நகைச்சு வை என்று வலுக்கட்டாயப்படுத்தும் வாதச் சிரிப்புகளுக்குக் கூட வாய்கோணிச் சிரித்துத் தொலைத்துவிடலாம், இந்த யூக அடிப்படையிலான கதைகளுக்கேனும் யாராவது கடிவாளம் போட வேண்டியிருக்கிறது.

நம்மில் தான் எத்தனை ஆர்தர் கானன் டாயில்கள், ஷிட்னி செல்டன்கள், ஜேம்ஸ் ஹாட்லி ஷேஸ்கள் ராஜேஷ்குமார்கள், பட்டுக்கோட்டை பிரபாகர்கள், சுபாக்கள் என்று எண்ணும்போது வியப்பாகவும், அவர்களின் அடுக்கடுக்குக் கற்பனை யூகங்களைப் படிக்கும் போது களைப்பாகவும், கடுப்பாகவும் வியர்ப்பாகவும் இருக்கிறது. பீதி பரப்பும் பாமர பீ.ட்டீ.சாமிகளும் உண்டு.
வதந்தி கடை விரிப்புக்கு வாட்ஸ்அப், பரபரப்புச் செய்திக்கு ஃபேஸ்புக் என்றா(க்)கி விட்ட இந்தப் பொழுதிலும் செவிமடுக்கும் இதயங்களுக்குச் சொல்வதற்குக் கொஞ்சம் இருக்கிறது. காதுள்ளீர் கேட்கக் கடவீர்:
1). நீங்கள் உருவாக்கும்/ பகிரும் செய்திக்கு உரிய ஆதாரங்கள் உள்ளனவா என்று உறுதி செய்தி கொள்ளுங்கள். (இல்லாவிட்டால் இன்று கேள்வியை உரியோர் கேட்காவிட்டாலும், என்றேனும் இறைவன் கேட்பான் என்பதை மனதில் கொள்ளுங்கள்).
2). ஒருவேளை, 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்பது உங்கள் பதிலாக இருந்து அரசியலுக்காக, ஆதாய நோக்கில் செய்கிறீர்கள் என்றால்,கொஞ்சம் யோசியுங்கள்: உங்களுடைய மிகையருந்துதல் (ஓவர்டோஸ்) உங்களை, உங்களைச் சார்ந்தோரைக் குறித்த சித்திரத்தை வரைந்து 'இவிய்ங்க இப்படித்தாம்பா' 'திருந்தமாட்டாய்ங்க இவிங்கெல்லாம்' என்று பிறர் இதயச் சுவர்களில் எழுதிவிடாதிருக்கும்படியேனும் பார்த்துக் கொள்ளுங்கள்.
செலவிடுகிற பொன்னான பொழுதுகளுக்கு ஆதாயம் அல்லது சேதாரம் யாது எவ்வகை என்று ஆய்ந்து தெளியுங்கள்.
என்னதான் அரசியல் என்றாலும், அவதூறாகவோ, சுயபிம்பச் சிதைப்பாகவோ உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்திவிட அனுமதிக்காதீர்கள்.
3). பேசினால் நல்லதையே பேசுங்கள்; அல்லது வாய்மூடி மெளனம் காத்திடுங்கள் என்று முஹம்மதுநபி சொன்னதை நினைவு கூர்ந்திடுங்கள்.
- இ.ஹ
Fakhrudeen Ibnu Hamdun

No comments: