Thursday, December 1, 2016

தருணங்களின் தலைவர்...! ( ---3--- )


Hilal Musthafa
எம். ஏ. லத்தீப் சாஹிபின் மாணவப் பருவம் தி.மு.க. சார்புடையதாக இருந்தது.பின்னைய நாள்களில் தி.மு.க. அமைச்சராக இருந்த அக் கட்சியின் இன்றைய மூத்த தலைவர் துரைமுருகன் இவரின் சட்டக் கல்லூரி மாணவத் தோழர். நீடூர் செய்யது அண்ணன் சகோதரர் முகமது அலி
சாஹிபும், லத்தீப் சாஹிபிற்குச் சட்டக் கல்லூரித் தோழர்தான்.
துரைமுருகனும், லத்தீபும் சந்திக்கும் போதெல்லாம் வாடா போடா என்று ஒருமையில் பேசிக் கொள்வார்கள். நட்பிலும் தோழர்கள். தி.மு.க. அபிமானத்திலும் கொஞ்சம் அணுக்கமானவர்கள்.
இதற்காக எவரும் லத்தீப் சாஹிபைக் குற்றம் பிடிக்க முடியாது.
முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் பலரும் , காயிதெ மில்லத் உட்பட, காஙகிரஸ்காரர்களாக இருந்து முஸ்லிம் லீகர்களாகப் பரிணாமங் கண்டவர்கள்தாம்.
காயிதெ மில்லத்தின் தம்பியும், தாய்ச்சபையின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளருமான K.T.M. அஹமது இப்றாஹிம் சாஹிப் மட்டும் ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் லீகர்.
காயிதெ மில்லத்தைப் பற்றி நகைக் சுவைக்காக் குறிப்பிடுவார். " இவர் பழைய காங்கிரஸ்காரர். நான் மட்டும்தான் எல்லாக் காலத்திலும் முஸ்லிம் லீகன்" என்று கே.டி.எம். குறிப்பிடுவார்.
மீண்டும் வாணியம்பாடி தொகுதியில் லத்தீப் சாஹிப் வெற்றி பெற்றார்
இந்தக் கால கட்டங்களில் எல்லாம் முஸ்லிம் லீகின் அனல் தெறிக்கும்
மேடைப் பேச்சாளராக வீரியம் பெற்று விட்டார். தமிழகமெங்கும் பட்டி தொட்டிகள் தோறும், பட்டிணங்கள் நகரங்கள் அனைத்தும் லத்தீப் சாஹிப் மேடை அணிவகுத்தன. தமிழகத்தைத் தாண்டியும் அண்டை மாநிலங்கள்
வெளிநாடுகள் பலவற்றுள்ளும் பலப்பல முறைகள் அவரின் மேடைகள் அதிசயங்கள் நிகழ்த்தின.
இறைவன் அவருக்கு மிகப் பெரிய அருள் வழங்கி இருந்தான், பல மொழி களைச் சரளமாகப் பேசும் ஆற்றல்தான் அது.
சுமார் ஒன்பது மொழிகளுக்கு மேல் பேசக் கற்றிருந்தார். ஒரு முறை அவரும் கவிஞர் தா.காசிமும் இஜட். ஜபருல்லாஹ்வும் நானும் மேல் விசாரத்திற்குப் பொதுக் கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தோம்.
வழியில் அவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம். சர்க்கரை
நோய்க்காரர். காரை சாலை ஓரமாக ஒதுக்குப் புறத்தில் நிறுத்தச் சொன்னார். கார் நின்றது. உபாதை கழித்து விட்டு வந்தார்.
காரில் ஏறும் போது சில நரிக்குறவச் சிறுவர்கள் காசுக்குக் கூடிவிட்டார்கள்.
லத்தீப் சாஹிப் அந்தச் சிறுவர்களுடன் அவர்கள் மொழியில் பேச ஆரம்பித்து விட்டார். அவர்களுக்குப் படு குஷி. சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டது.
மீண்டும் காரில் புறப்பட்டோம். கவிஞர் தா.காசிம் , கேட்டார் " இது எப்போது.? இந்த மொழியும் பேச ஆரம்பிச்சிட்டாங்களா "? என்று.
லத்தீப் புன்முறுவலுடன் சொன்னார். " அது ஒன்னுமில்ல கவிஞரே! என் வீட்டுப் பக்கம் (சென்னை ) இவர்கள் வசிக்கிறார்கள்.சில நேரம் அவர்களுடன் பழகிப் பேச ஆரம்பிச்சுட்டேன் " என்று.
இதன் பின் நரிக்குறவர் பற்றி ஆய்வு செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியில் துறை அறிஞர் பேராசிரியர் டாக்டர் திண்ணப்பனாரிடம் நரிக்குறவர் மொழி பற்றிக் கேட்டேன். அவர் சொன்னது இன்னும் ஆச்சர்யம் கலந்திருந்தது. அதைத் தனிப் பதிவில் போடுகிறேன்.
லத்தீப் சாஹிப் இறுதியாக் கற்ற மொழி அநேகமாக அதுவாகத்தான் இருக்க முடியும்.
மகத்தான பேச்சாளர். என் போன்றோர் அவர் பேச்சில் பிரமித்திருக்கிறோம்.
ஆனால் அவற்றால் சமூகம் பெற்றிருந்த ஆக்கப் பூர்வமான நன்மைகள் எத்தனை?
சதா சமுதாயப் பணிகள் ஆற்றியிருக்கிறார். பேச்சினால் புரிந்திருக்கிறாரா?
ஒரு கட்டத்தில் பேரணாம் பேட்டைத் தொகுதிக்குள் இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் தோல் தொழிலும் அது சம்பந்தமான தொழிலும் செய்து வந்தனர். வசதியும் பரவாயில்லை என்ற நிலைதான். தலித்துகள் தொண்டுத் தொழில் செய்து வந்த பாமர மக்கள் . இவர்களுக்கு மத்தியில் சமூக விரோதிகள் விஷத்தைக் தூவி விட்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிராகத் தலித் பெருமக்களைக் கலவரத்துக்குத் தூண்டி விட்டார்கள்.
முஸ்லிம்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வயல் வெளிகளில் தீ நர்த்தன மாடியது.
அந்தக் கலவரப் பகுதிக்கு உடனே நேரடியாகச் சென்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் லத்தீப் சாஹிப்தான். பேரணாம் பேட்டை அவர் தொகுதி இல்லை. ஆனாலும் அங்கே பாய்ந்து சென்றார்.
இரு பக்கத் தலைவர்களையும் அழைத்து சமாதனம் பேசிக் கொண்டிருந்தார். சமாதானக் கூட்டம் இரவு 8 - மணிக்குக் கூடியது.
பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனது. இரவு 12--மணிக்கு நல்ல விதமாகச் சமாதானதக் கூட்டம் முடிவு அடைந்தது.
அந்த நேரத்தில் முஸ்லிம்கள் சிலர் பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். வயல் வெளிகளில் தீப்பற்றி எரிவதாகக் கதறுகிறார்கள்.
செய்தி கேட்டு லத்தீப் சாஹிப் அந்தப் பகுதிக்கு விரைந்து செல்லத் துடிக்கிறார் . சமாதானக் கூட்டத்தார் இருபாலரும் நிலைமை உணர்ந்து
லத்தீப் சாஹிபைத் தடுக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் அருகில் நின்றிருந்த எவருடைய சைக்கிளையோ படீரென்று எடுத்துக் கொண்டு தானே ஓட்டிக் கொண்டே தனியாக விரைந்து விட்டார். அங்கிருந்தவர்கள் பயந்து விட்டார்கள். நள்ளிரவு 12--மணிக்கு மேல் சைக்கிளில் தனியே செல்கிறார்.
நின்றிருந்த சில போலிசாரும் இன்னும் சிலரும் நிலைமை அறிந்து புறப்பட்டனர். தூரத்தில் சிறு கூட்டம் வருவதைப் பார்த்து சமூக விரோதிகள் ஓடியே விட்டார்கள். மீதி வயல்கள் பாதுகாக்கப் பட்டன.
லத்தீப் சாஹிபிற்கு முன்னரும் பின்னரும், இன்றுவரை எந்த ஒரு சமுதாயத் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியதில்லை.

இதன் பின்னர் நாடாளு மன்றத் தேர்தலில் அப்துஸ் ஸமது சாஹிப் போட்டி இடுகிறார். எற்கனவே போட்டியிட்டுத் தோல்வியைக் கண்டிருந்தார்.
பேரணாம் பேட்டைத் தொகுதிக்குள் பிரச்சாரத்துக்குப் போக முடியவில்லை. ஆறு சட்ட மன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்றையப்
மாநிலப் பொருளாளர் தென்காசி ஏ. சாகுல் ஹமீது சாஹிப்( என் சிறிய தந்தையார் ).
பேரணாம் பேட்டைத் தொகுதிக்குள் இறுதியாக என்னையும் கவிஞர் இஜட். ஜபருல்லாஹ்வையும் பொறுப்பாளராக்கி அனுப்ப தலைமை முடிவு செய்து.
நாங்கள் புறப்பட்டுப் போய் விட்டோம்.
தொகுதிக்குள் லீகின் மீது முஸ்லிம்கள் கோபத்தில் இருந்தனர்.
நாங்கள் ஒரு முடிவு செய்தோம்.
எம்.எம். பீர் முஹம்மது அண்ணனைப் பிரச்சாரத்துக்கு அனுப்பக் கேட்டுக் கொண்டோம். தொகுதி முழுக்கவும் எம்.எம்.பீ அண்ணன், ஜபருல்லாஹ்,
நான் லத்தீப் சாஹிப் பணியை நினைவுறுத்திப் பிரச்சாரம் செய்தோம்..
ஒவ்வொரு ஜமாத்துகளிலும் நாங்கள் பேசினோம். அப்போது நாங்கள் நேரடியாகப் பெற்ற அனுபவத்தைத்தான் நான் மேலே பதிவிட்டுள்ளேன்.
வேலூர் நாடாளுமன்றத்தின் ஆறு தொகுதிகளிலும் பேரணாம்பேட்டைத்
தொகுதியில்தான் ஸமது சாஹிபிற்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
பேரணாம் பேட்டை காலைவாரி இருந்தால் மீண்டும் ஸமது சாஹிப் தோற்றுப் போய் இருப்பார்.
ராணிப்பேட்டையில் ஸமது சாஹிபிற்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில்
ஸமது சாஹிப் மேடையிலேயே இச் செய்தியைச் சொன்னார்.
லத்தீப் ஏற்கனவே பேரணாம்பேட்டையில் நடத்தி இருந்த அடித்தளத்தில்
எங்கள் பிரச்சாரமும் கலந்து, இந்தப் பெரும் வெற்றியை ஸமது சாஹிபிற்கு வாங்கித் தந்திருந்தது.
*** ( நாளை ) ***


Hilal Musthafa

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails