Saturday, May 21, 2016

தோல்விகளைவிட ஏமாற்றங்கள் வலியது வலி உடையது;

Yasar Arafat
தோல்விகளைவிட ஏமாற்றங்கள் வலியது வலி உடையது; ஆற்றாமைகளுக்கும் கோபங்களுக்கும் இன்னும் வித்தியாசத்தை இனம் காணாமலே இருந்துவிடுகிறீர்கள் இறந்தும் விடுகிறீர்கள்; உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்குமான மெல்லிய கோடுகளை தொட்டுப்பார்க்காமலே பயணத்தை முடித்துவிடுகிறீர்கள் முடிவெடுத்துவிடுகிறீர்கள்; வருத்தத்திற்கும் சோகத்திற்கும் உண்டான எல்லையை வரையறுக்காமலே விலகிவிடுகிறீர்கள் விலக்கிவைத்துவிடுகிறீர்கள்; சந்தேகத்திற்கும் சங்கடத்திற்கும் உண்டான மூச்சுக்காற்றை எறிந்துவிடுகிறீர்கள் எரித்துவிடுகிறீர்கள்;

நீங்கள் பரிவோடு அன்போடு பட்டாம்பூச்சிகளை பிடிப்பதெல்லாம் பட்டாம்பூச்சிகளுக்கு அவசியமில்லை, பட்டாம் பூச்சி இறந்துவிடுகிறது என்பதுதான் நிதர்சனம்; கோபுரத்தில் சதா வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களுக்கு குடிசை வீட்டினைக்கண்டு அங்கே இருந்துப்பார்க்க வேண்டுமென்ற ஆசை எதார்த்தம்; ஆனால் குடிசையில் வாழுபவர்கள் படும் துன்பத்தோடு இருந்துப்பார்க்க வேண்டுமென்ற ஆசை எப்போதும் கோபுர வாழ் மக்களுக்கு உண்டாகுவதில்லை; சொகுசாக கட்டப்பட்ட குடிசைககின் மீதே கோபுரத்தின் ஆசை வீற்றிருக்கிறது;
சுயநல கயிற்றின் மீதுதான் எல்லா பொது நலமும் கட்டப்பட்டிருக்கிறது; எந்த உறவும் அதற்கு விதிவிலக்கல்ல; விளங்கிக்கொள்ளவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; அந்த ஒன்று எதுவென்பதை நீங்கள் உங்களுக்குள்ளே தேடிப்பார்ப்பதுதான்; எறும்புகளின் வரிசையையும் சிங்கத்தின் வீரத்தையும் தேனீக்களின் சுறு சுறுப்பையும் சிலாகிக்கும் நீங்கள் அவற்றுக்கு உண்டாகும் கடினங்களையும் கவலைகளையும் கண்டுக்கொள்வதில்லை; உங்களுக்கு வேண்டிவை யென நீங்களே தீர்மானித்துக்கொள்கிறீர்கள்;
வெளிப்படையான இரகசியங்களும், மறைமுகமான உண்மைகளும் செத்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு கிரகத்தில் நீங்கள் இருந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்; தோல்விகளைவிட ஏமாற்றங்கள் வலியது வலி உடையது; ஆற்றாமைகளுக்கும் கோபங்களுக்கும் இன்னும் வித்தியாசத்தை இனம் காணாமலே இருந்துவிடுகிறீர்கள் இறந்தும் விடுகிறீர்கள்!
‪#‎Tafara‬ Rasay


No comments: