Monday, December 14, 2015

கவிதைச்சிறுமியவள்

Suhaina Mazhar
 added 7 new photos.
கவிதைச்சிறுமியவள்
"கவிதைன்னா என்னன்னு தெரியுமா? யாராச்சும் நாளைக்கு ஒரு கவிதை எழுதிட்டு வாங்க..."

சொன்னது 2nd STD E Section... பார்வதி டீச்சர்.

அந்த சிறுமி தன் தாய்மாமனிடம் ஓடிச் சென்று கொஞ்சி கெஞ்சி கவிதை கேட்டாள். மாமனோ ஊர்க்காரர்களால் செல்லமாக "இருமொழிப் புலவர்" என்று அழைக்கப்படுபவர்.

ஓதுவீராக என்று சொல்லி ஓத வைத்த ஜிப்ரீலை போல... "என் வார்த்தை முத்துக்களை பொறுக்கியெடுத்து நீ கோர்த்துக் கொள்" என்றார் அவர்.

எழுதுவதும் அடிப்பதும் திருத்துவதும்... திருத்தப்படுவதுமாக ஒரு அழகிய கவிதையொன்று ஒய்யாரமாக உருப்பெற்றது...

"‪#‎தமிழெங்கள்_இன்னுயிரை_தாங்கும்_மூச்சு‬" என்று ஆரம்பிக்கும் கவிதை அது. (பார்க்க படம் 2)

பென்சிலில் கிறுக்கப்பட்ட கவிதை சமர்ப்பிக்கப்பட்டது. யாருடையதென்ற கேள்விக்கு... மாமனின் கருத்து தன் விரல் வழியே வழிந்ததென்றாள் அச்சிறுமி.

அங்கீகாரம் நிர்தாட்சண்யமாக மறுக்கப்பட்டு... பொய் முத்திரை குத்தப்பட்டதில் துவண்டு போனாள் எட்டு வயது கூட நிரம்பாத அந்த கயல்விழி.

அதன்பின் ஒன்பது வயதில் அப்போதைய வாரமலரில் வெளிவந்த கவிதைகளின் தாக்கத்தில்... "குயிலே நீ யாருக்காக உன் அழகிய குரலில் பாடுகிறாயோ... மயிலே யாருக்காக உன் தோகைகளை விரித்தாயோ... (முழுக்கவிதை நினைவில்லை)" என்று தொடங்கி Rough Noteன் கடைசி பக்கத்தில் கிறுக்கி வைக்க... அம்மாவால் திட்டும் கொட்டும் வாங்கப்பட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டன.

மொழிப்பாடங்களின் அத்தனை செய்யுள்களும் அதன் சுவைக்காக படித்து படித்தே மனப்பாடம் ஆகிவிடும் அவளுக்கு... காதில் விழும் நயம் மிக்க பழைய சினிமா பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். ஆனால் எழுத துணியவில்லை... பயம்... அம்மாவுக்கும் ஆசிரியருக்கும் பயம்...

பத்து வயதில் அடுத்த முயற்சி... "‪#‎முற்றுப்புள்ளி_வைக்காத_வாக்கியத்துக்கு_முழு_அர்த்தம்_காண_முடியுமா‬" என்று ஒரு வசன கவிதை... (பார்க்க படம் 3).

12 வயது முதல் டைரி எழுதும் பழக்கம். அதில் எழுதியவை காதல் கவிதைகள் அல்ல என்றாலும் "முற்றுப்புள்ளி" கவிதை ஸ்டைலில் 'இனியவனே' என்று விளித்து எழுதப்பட்ட கவிதைகள்... அத்தனையும் மொத்தமாய் அம்மாவால் கிழித்தெறியப்பட்டன. இப்போதும் உள்ளது ஊனமான 1988ம் வருட டைரி.

13 வயதில் தன் டைரியில் தானே தன்னை ரசிப்பது போல ஒரு கவிதை எழுதி வைத்திருந்தாள். இதை யாரும் குறை சொல்ல முடியாது என்ற நம்பிக்கை. அவள் உறவு தோழி... அவளை விட எட்டு வயது பெரியவள் கவி ரசனையுள்ளவள் வீட்டுக்கு வந்த போது அந்த கவிதையை காட்ட... உடனே அடுத்த பக்கத்தில் எசகவிதை எழுதி தந்தாள் அவள். இவள் மீண்டும் அதற்கு பதில் கவிதை... எசகவிதை... இப்படியாக அழகழகாய் ஏழெட்டு கவிதைகள்...

அதை படித்து படித்து ரசித்துக் கொண்டிருந்த போது... ரெண்டு மாதங்கள் கூட இருக்காது... அம்மாவின் கண்ணில் பட்டு விட்டது. அம்மாவுக்கு பாவம் அந்த இன்னொரு கையெழுத்து யாருடையது என்று தெரியவில்லை... சந்தேகம் வலுத்து அவை யாவும் கிழித்தெறியப்பட்டன. அந்த டைரியும் ஊனமாய்... cry emoticon மனதில் மாபெரும் இடி விழுந்த தருணம் அது. யார் எழுதியது என்று அம்மாவிடம் விளக்கம் தந்த பின்னும் கிழித்தது எப்படி மீண்டும் ஒட்டும்...??? தப்பு செய்யாமலே தண்டிக்கப்பட்ட ஆத்திரத்தை வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைக்க வேண்டிய கட்டாயம். தன் கவி வாழ்க்கையில் பேரிழப்பு அவளுக்கு அது.

மனதில் தோன்றும் கவியுணர்வுகளுக்கு முழு உருவம் தரமுடியாமலே எண்ண ஏட்டில் எழுதிப் பார்த்து அழித்துவிட்டு உறங்கிய நாட்கள் ஏராளம்... அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளுக்கு வடிகாலாக மொட்டைமாடி தனிமையை நாடச் சொன்னது மனம். வான்நிலாவிடமும் தாரகைகளிடமும் கவிமொழியில் பேசுவது வாடிக்கையாகிப் போனது. சப்தரிஷி மண்டல அமைப்பு மனதில் பதிந்து போனது. அதில் ஒரு தங்க நட்சத்திரத்தை தன் தோழியாக்கிக் கொண்டாள். தினமும் அவள் வானில் எங்கே உலவுகிறாள் என்று கண்டுபிடித்துவிடுவாள். தோழியிடம் ஆசைதீர கதைப்பாள். அந்த தோழிக்கு 'நாடோடி தாரகை' என்று பொருள்படும்படி ஜிப்ஸி ஸ்டார் என்று பெயர் கூட வைத்துவிட்டாள்.

அம்மாவுக்கு புரிய கூடாது... கிழிக்கவும் கூடாதென்று தன் தோழியான அந்த ஜிப்சி ஸ்டாருக்கு ஆங்கிலத்தில் ‪#‎A_Sterling_Gypsy_Star‬ என்று தொடங்கி ஒரு கவிதை எழுதி வைத்தாள்... (பார்க்க படம் 4). பின்னாட்களில் இந்த தாரகைத் தோழியே அவள் மானசீக காதலனாக மாறிப் போனாள்.

அம்மாவுக்கு புரியவில்லையென்ற குதூகலத்தில் அடுத்தடுத்து ஆங்கில கவிதைகள் பிரசவமாயின. டைரியின் பக்கங்கள் நிரம்பின. வார்த்தைகளால் வசீகரிக்கப்பட்டு வரிகள் அவளுக்கு தலைவணங்கிய போது அவள் வயது 13 தான்... 14 வயதில் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழில்... அதிகமாக ஆங்கிலத்தில்...

பள்ளியில் ஓரிரு தோழிகள் தவிர அவள் எழுதுவது யாருக்குமே தெரியாது அப்ப வரை. அப்ப ஒரு ஆங்கில கவிதை போட்டி... ஒரு படத்தை பார்த்து கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் எழுத வேண்டும். இன்ஸ்டண்ட் போட்டி. அவளே முதல்பரிசு வென்றாள். ‪#‎Gods_Message_To_Mankind‬ என்ற தலைப்பிட்ட கவிதை அது. (பார்க்க படம் 5)

டீச்சரையே ஆச்சரியப்படுத்திய கவிதை அது. ஒரு மணி நேர அவகாசமெனினும் அரை மணியில் கிறுக்கி தந்ததால் கேள்விகள் எழுந்தன. "மிஸ் இவ நிறைய எழுதுவா" என்று தோழிகள் சொல்ல... அவள் டைரி புரட்டப்பட... தலைமையாசிரியரின் வியப்பு பலமடங்காக... மிச்சமிருந்த அவள் அத்தனை கவிதைகளும் மொத்தமாய் சில பிரதிகள் அச்சிடப்பட்டு ‪#‎புத்தகமாக‬ தொகுக்கப்பட்டு பள்ளியில் கௌரவிக்கப்பட்டது 1993ல் அவள் 15வது வயதில்...! (பார்க்க படம் 1)

ஏச்சுக்களையும் அடக்குமுறையையும் மட்டுமே பார்த்து வந்த மனதுக்கு... மெல்லிய சாரலாய் இதம் தந்ததந்த பாராட்டு... முதன்முறையாக...

அசெம்ப்ளியில் அவளுக்கு கிடைத்த பாராட்டே ஒரு கவிதையாக புனைந்து விட்டாள்... ‪#‎A_Memorable_Day‬ (பார்க்க படம் 6)

கட்டக்கட்ட கரைகளை உடைத்துப் போட்டதால்... கவியுணர்வுகள் கரையைத் தாண்டி பரவிப் பெருகின காட்டாற்று வெள்ளமாய்... அது பற்றி பிற்காலத்தில் அவள் எழுதியது '‪#‎எழுதி_ஓயவே_சில_நாட்கள்‬' என்று தொடங்கும் கவிதை... முகநூலிலும் வெளியிடப்பட்டது... (பார்க்க படம் 7)

அப்புறமும் தொடர்ந்தது அவள் கவிப்பயணம்... எப்போதுமே அதீத ரசனைகள் அவள் தனிச்சொத்து... எதார்த்தங்களின் சோகங்கள் நுழைய முடியாத அழகான கற்பனை உலகம் அவளுடையது... அவள் ரசனைகளுக்கு எல்லைகளே கிடையாது... குறிப்பாக காதல் ரசனைகள்...

மானசீக காதலனை எண்ணி எழுதிக் குவித்த போது பாட்டுடைத் தலைவனுக்கான ஏக்கம் அடிமனதில்... எண்ணங்களை எழுத்தாக்குவதற்கும் கூட லைசன்ஸ் தேவைப்பட்டது. எதிர்பார்த்த நிக்காஹ் என்ற லைசன்ஸ் 1995ல் கிடைத்ததும் வீரியத்துடன் வெளிப்பட்டன எழுத்துக்கள். 20-22 வருடங்களாக படிக்க ஆளில்லாவிட்டாலும் கூட எழுதி எழுதி குவித்திருக்கும் அழியாச் சித்திரங்கள் ஏராளம். ரசனைகளின் உச்சத்தில் வழிந்த ரகசியங்கள் அவை.

காதல் ரசனைகள் மிகுந்த நிஜக்காதலன் அமைந்தது அவள் பாக்கியம். தன் கண்ணிலும் கருத்திலும் நிறைந்தவனை மனதில் ஏந்தி உவகைபூத்த பூரிப்புடன் கவிதையோடு இணைந்து கவிதையாகவே வாழத் துவங்கினாள்... இன்னமும் அவ்விதமே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்... இன்ஷா அல்லாஹ் இனியும் வாழ்வாள்...

"எழுதி எழுதி ஓய்ந்த கைகள்
புழுதி மண்ணில் சாயும் வரைக்கும்
ரசித்திடும் வாழ்க்கையின் ரகசியத்தில்...
தோய்ந்திடும் மனமோ ரசனைகளில்..."

 Suhaina Mazhar






 

2 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி அண்ணன்...

mohamedali jinnah said...

மிக்க நன்றி சகோதரி SUMAZLA/சுமஜ்லா அவர்களுக்கு