Friday, December 4, 2015

மழையல்ல பிழை

மழை வரும்
மருந்தாகச் சில நேரம்
மாணிக்கப் பரல்களாகச் சில நேரம்
மந்திரத் திறப்பாகச் சில நேரம்
மயக்க மொழிப் பொழிவாகச் சில நேரம்

ஒவ்வொரு முறையும்
ஒவ்வோர் அதிசயம்

அள்ளித்தரும்
அன்னை மழையின் மாண்பைச்
சொல்லி மாளாதுதான்

ஆனால்
வான மொத்தத்தின்
ஞானப் பெருநெருப்பையும்
அப்படியே நீராய் மாற்றி
நிலமிறங்கும் பெருமழையே
நீ எவரின் மூளைக்குள்
எவ்வகை நாற்றை நட வந்தாய்?

*

தமிழனுக்கு எப்படியும்
’தண்ணி’யில்தான் சாவு

இதில் தப்பினாலும்
தப்பவே முடியாது
அரசுத் ’தண்ணி’யில்

சொட்டுத் தண்ணீரின்றி
பட்டினிச் சாவு - இல்லையேல்
கொட்டு மழை தாளாமல்
கொத்தோடு சாவு

அய்யகோ
இதுவே இந்நூற்றாண்டின்
ஏகோபித்த அவமானம்

*
கிராமம் விட்டு
வாழத்தானே வந்தாய்
நகரத்தை ஏன்
நரகமாக்கச் சம்மதித்தாய்

ஏரிகளில் உன் புறநகர்கள்
குளங்களில் உன் அடுக்குமாடிகள்
நீர்வழிப் பாதைகளில் உன் கடைத்தெருக்கள்

நீர் வாழ்ந்த இடமெலாம்
நீ வாழப் போனால்
நீ வாழும் இடத்தில் நீர்தானே வாழும்
நீ எப்படி வாழ்வாய்?

*
சாலை இல்லை
சந்து இல்லை
ரயில் இல்லை
பேருந்து இல்லை
விமானமும் இல்லை

உப்பில்லை
சக்கரையில்லை
உணவில்லை
மருந்தில்லை
இல்லை இல்லை இல்லை

அடடா
உண்டு என்றால்
அது மழை மட்டும்தான்
இல்லை என்றால்...

*
மேகங்கள்
மொட்டுகளாய்க் கூடி
தொட்டுத் தொட்டு மலர்ந்து
சொட்டுந் தேனாய்க்
கொட்டுவதுதானே வாடிக்கை

இதென்ன
ராட்சச முட்டைகளாய் உருண்டு
முட்டிமோதி உடைந்து
டைனசர் குட்டிகளாய்க்
கொட்டுகின்றது மழை இன்று

*
சுனாமியையே சுட்டுவிரலால்
எட்டித் தட்டிவிட்டு
சுற்றி முகாமிட்டு
விடாப்பிடியாய்ப்
பிடித்துக் கவ்வும் மழை
மழையல்ல பிழைதான்

*
சிறுதுளிக் கண்ணீரோடு
நடைபாதைகளே வீடாய் கிடந்தோர்
பெருமழை வெள்ளக் காட்டில்
உயிர் கவிழ்ந்த காகித ஓடங்களாய்

*
மதச் சகிப்பின்மை என்ற பெயரில்
உப்பிப் பெருத்த அரசியல் வயிறுகள்
வெடித்து நாற காத்திருந்த தருணத்தில்

ஓர் இந்து முஸ்லிம் பள்ளியிலும்
ஒரு முஸ்லிம் கிருத்துவ ஆலயத்திலும்
ஒரு கிருத்து இந்துக் கோவிலிலும்
கட்டிப் பிடித்து உயிர் காக்கும்
நல்லிணக்கத்தை
பெருமழையே நீதான் காட்டவந்தாய்

மக்கள் தொகையில்
99.99 விழுக்காடாய் வாழும்
மதச்சகிப்பாளர்களே
மழைவிட்டதும் ஓடிச்சென்றுவிடாதீர்கள்

ஒன்றுகூடிய கரங்களோடு
உங்களைப் பொய்யாய் நகர்த்தி
அசிங்கமாடும் நாற்ற அரசுகளின்
முட்டிகளை உடையுங்கள்

*
மாநில அரசு மத்திய அரசு
மாநகரச் சபை தேசிய ஊடகம்
என்று எல்லோரும்
மழைத்தொல்லை தாளாமல்
எங்கோ ஓர் சொகுசுப் பிரதேசத்தில்
பாவம் ஒதுங்கிக் கிடக்கிறார்கள்
பாருங்கள்

செத்ததுபோக
மீளும் மக்களைக் கொண்டு
நல்லாட்சி அமைக்க
ஓட்டுகேட்டு வருவார்கள்
கருப்பு நோட்டுகளோடு
நாளை

நிவாரண நிதியென்று
வசூலும் மகசூலும் ஆகப்போவதைச்
சொல்லவும் வேண்டுமா

ம்ம்ம்....
நாற்ற அரசியலை மட்டுமே
தூற்றித்தான் ஆவதொன்றுண்டா

நாம் அநியாயத்துக்கு நல்லவர்கள்
எதையும் எளிதில் மறக்கக்கூடியவர்கள்

நம்
மறதிகளை இம்முறை
மறப்பதைப் பற்றிய
எண்ணங்களால் நிறைப்போம்

*
அதற்கும் முன்
செயற்கரிய காரியங்கள்
நற் சிங்கங்கள் இன்றி அங்கே
ஏங்கிக்கிடக்கின்றன ஏராளமாய்
வாருங்கள் அவற்றை
நம் மகுடங்களாய் ஏற்போம்

அதோ
அந்த இளைஞர்கள்
பெண்கள் குழந்தைகள் முதியவர்களை
அல்லும் பகலும் அள்ளியெடுத்துக்
காத்து நிற்கிறார்கள் பாருங்கள்
அவர்களைப் பாராட்டி அவர்களோடு கைகோத்துச்
சேவையாற்றுவோம் வாருங்கள்

அதோ
அந்தப் பெருந்தகைகள்
கல்லூரி வளாகங்கள் கலைக்கூடங்கள்
கல்யாணமண்டபங்கள் பெருவீடுகள் என்று
அனைத்தையும் தந்து நிற்கிறார்கள் பாருங்கள்
அவர்களை வாழ்த்தி அவர்களோடு சேர்ந்து
வழியமைப்போம் வாருங்கள்

அதோ
அந்த ஈர நெஞ்சங்கள்
பொன்னும் பொருளும்
உணவும் உடைகளுமாய்க்
கொட்டித் தருகிறார்கள் பாருங்கள்
அவர்களைக் கட்டித்தழுவி அவர்களோடு இணைந்து
பொற்குவை வழங்குவோம் வாருங்கள்

* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

அன்புடன் புகாரி 

http://anbudanbuhari.blogspot.in

No comments: