Sunday, March 8, 2015

புதுமைப்பெண் - ரஃபீக்"இப்ப வேலையில் இருக்கும் நிறுவனத்தைவிட நல்ல நிறுவனமாக இருந்தால் உடனே தாவிவிடு, அதுபோலக் கிடைக்காத சூழ்நிலையில், இருப்பதிலேயே ஒட்டிக்கொண்டிரு அதுதான் கெட்டிக்காரத்தனம்” இப்படித்தான் நமது கெட்டிக்காரத்தனத்தையும் புத்திசாலித்தனத்தையும் நமக்குள் விதைத்திருக்கிறார்கள் இல்லையா?

ஒருவேளை நீங்கள் அதற்கு மாறாக முயற்சி செய்யக்கூட வேண்டாம், அப்படி செய்யலாம் என்று நினைத்தேன் என்று சொல்லிப்பாருங்கள், “பிழைக்கத் தெரியாதவன்” என்ற பட்டம் சூட்ட வரிசையில் நிற்பார்கள்.
இன்று ஆரக்கிள் எனும் நிறுவனத்தில் வேலையில் அமர்வதற்கு, எந்த அளவிற்கு கடுமையான முயற்சி, உழைப்பு தேவை என்று ஐ.டி துறையில் வேலையில் இருப்பவர்களுக்குத் தெரியும். அப்படி கிடைத்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, யாரோ இரண்டு மூன்று பேர் அதுவும் கல்லூரியில் கூட ஒழுங்காகப் படிக்கவில்லை.

அவர்கள் சேர்ந்து தொடங்கியிருக்கும் ஒரு நிறுவனத்தில், இல்லை ஒரு நிறுவனம் என்று கூட சொல்ல முடியாது. ஒரு உணவத்தின் மேல்தளத்தில் சிறிய அறையினை வாடகைக்கு எடுத்து நடத்தப்படும் ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேருகிறீர்கள் என்றால் என்ன பட்டம் கிடைக்கும்? மேற்சொன்னது தான் இல்லையா?

அதே முடிவை ஒரு பெண் எடுத்திருந்தார் என்றால்?? ”அடப்போங்க, சான்ஸே இல்லை யாரும் அப்படிச் செய்யவே மாட்டார்கள்” அப்படித்தானே சொல்கிறீர்கள்….

நம்புங்கள்! 23 வயது இளம் பெண், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் கணினிப் பொறியியல் பட்டம் பெற்றவர். மேற்சொன்ன அதே புகழ்பெற்ற பெரிய நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றியவர். அந்த வேலையை விட்டு விலகி, கல்லூரிப் படிப்பை முடிக்காத 21 வயது இளைஞர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்குச் சேருகிறார்.

ஆம், 21 வயது மார்க் ஸக்கர்பெர்க் சீன உணவகத்தின் மாடியில் சிறிய அறையில் தொடங்கிய (ஆரம்பகால)ஃபேஸ்புக் நிறுவனத்தில், முதல் பெண் பொறியாளர் என்ற சிறப்புடன் 2005ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் தான் இந்தச் சிறப்புக்கட்டுரையின் நட்சத்திரம், இந்திய இளம்பெண் ருச்சி சங்க்வி.

2005ம் ஆண்டு சங்க்வி பணியில் சேர்ந்தபோது, ஃபேஸ்புக் முகப்பு எப்படி இருந்தது (படம்) என்று அன்று கணக்குத் தொடங்கியவர்களுக்குத் தெரியும்.
ஒரு Telephone Directory புத்தகத்தைப் புரட்டுவது போல ஒவ்வொரு நண்பர்களின் பதிவு மற்றும் விபரங்களைத் தெரிந்துகொள்ள தனிதனியே அவர்களின் பக்கங்களைப் புரட்ட வேண்டியிருந்தது. வேறொரு நண்பரின் பக்கத்திற்குப் போனால் மட்டுமே அவர் பதிந்திருக்கும் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இதுபோல இருப்பதை மாற்ற வேண்டும். ஒவ்வொரு நண்பர்கள் பதியும் தகவல்களும் அனைத்து நண்பர்களுக்கும், செய்திகள் ஓடைபோல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு செய்தி நிறுவனம் தனது செய்தியைத் தருவது போல ஒரு கோடி பயனாளர்கள் தத்தம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் எனத் தனது யோசனையை நிறுவனரின் முன் வைத்தார்.

இவரது திட்டத்தைத் தலைமை ஏற்றுக்கொண்டது. தன்னுடன் இரண்டு பொறியாளர்களைக் கொண்டு அன்றே களத்தில் இறங்கிவிட்டார் சங்க்வி.

இவரது கடும் உழைப்பினால் உருவானதுதான் இன்று நம் முன் செய்தி ஓடையாய் ஓடிக்கொண்டிருக்கும் NEWS FEED எனும் வசதி. இவரது அயராத உழைப்பினால் ஃபேஸ்புக் பெரும் மாற்றம் கண்டது. பயனார்களின் எண்ணிக்கை 10 மில்லியன் என யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. சந்தையிலும் மதிப்பு உயர்ந்தது.

2010ம் ஆண்டு ஏறத்தாழ 900 மில்லியன் உபயோகிப்பாளர்களுடன் வெற்றிநடையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஃபேஸ்புக் நிறுவனத்தை விட்டு வெளியேறும் முடிவினை எடுத்தார் சங்க்வி.
முன்பு போலவே அனைவரும் இவரின் முடிவை வேடிக்கையாய்ப் பார்க்க, “அனேக பெண்கள் தாங்கள் கர்ப்பிணியாக இல்லாதபோது கூடப் பின் சீட்டைத்தான் விரும்புகிறார்கள். பெண் என்பவள் எப்போதும் பின்சீட்டில் உட்கார்ந்து பயணிப்பவள் அல்ல; எந்தவொரு பயணத்தையும் முன்னெடுத்துச் செல்பவளாக இருக்க வேண்டும்.” என்று தனது நம்பிக்கையினை முதலீடாக்கி, COVE எனும் புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

இரண்டு வருடங்கள் உழைத்து உருவாக்கிய நிறுவனத்தை, பிரபல Drop-Box வாங்குகிறது. இதில் அவருக்குத் துணைத்தலைவர் பதவி.
மேலும் பல வளரும் நிறுவனங்களில் முதலீட்டாளராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இந்தியாவில் Flipkart நிறுவனம் இவரது முதலீட்டில் இயங்குகிறது.

தான் உருவாக்கிய FACBOOK NEWS FEED, சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. குறிப்பாக எகிப்தின் புரட்சிக்கு 90,000 பேரை ஒரு இடத்திற்கு திரட்டிவர பெரிதும் உதவியது அந்தத் தொழில்நுட்பமே என்று பெருமிதம் கொள்கிறார்.

இன்று ஃபேஸ்புக் என்பது சமூகவலைத்தளம் என்பதையும் தாண்டி, குடும்பம் நண்பர்கள் உறவுகள் என அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது என்கிறார்.

”எந்தவொரு நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு சுதந்திரமாகப் பணிபுரியும் சூழலை உருவாக்கி, அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து அதை ஊக்குவிக்கும்போது இது போன்ற சாதனைகள் சாதரணமே!” என்று வெற்றிக்கான வழியை முன்மொழியும் சாதனைப் பெண்ணான இவரை இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்துவதில் பெருமை கொள்வோம்.
-ரஃபீக்

Rafeeq Friend

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails