(நீங்கள் எனக்கு எழுதி அனுப்பினால் அதனை பிரசுரிக்க மிகவும் விரும்புகின்றேன், அது யார் மனதினையும் நோகச் செய்யாமலும் உண்மை நிகழ்வாகவும் இருக்க வேண்டும் . அதை எழுதியதின் பொறுப்பு உங்களைச் சார்ந்தது.)
பெயர் வைத்த காரணம்!
1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் நீடுர் .ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள்.
காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த 1938ல் நான் பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.
அன்புடன் பாத்திமா ஜின்னாவின் சகோதரர் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .
-----------------------------------
பெயர் சொன்னதால் அடி வாங்கியது!
நான் நான்காவது படித்துக் கொண்டிருக்குபோது எங்கள் பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவர் வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவனின் பெயரையும் கேட்டார் . என் பெயர் கேட்கும் போது "முகம்மது அலி ஜின்னா" என்று பதில் சொன்னவுடன் அந்த இன்ஸ்பெக்டர் என் கன்னத்தில் அறைந்து விட்டார். நான் நிலை குலைந்து போனேன்.அவர் அடித்த காரணம் யாருக்கும் புரியவில்லை.உடனே அச்செய்தி எனது தகப்பனாருக்கும் மற்றவருக்கும் தெரிந்து ஊர் மக்கள் கூடிவிட்டார்கள். தான் செய்த தவறை உணர்ந்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டார். அந்த காலம் சுதந்திரம் அடையாத காலம் நான் வேண்டுமென்றே எனது பெயரை தவறாக சொல்வதாக அவர் நினைத்து விட்டார் . எனது தந்தை மிகவும் செல்வாக்கு உள்ள, சேவை செய்யக் கூடிய நம் நாட்டுப் பற்றுடையவர் .
இறைவன் நாடினால் தொடர்ந்து மறையாத நிகழ்வுகளை எழுதுகின்றேன்.
1 comment:
எல்லாப்புகழும் இறையவனுக்கே.
எனது தந்தை -
*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்
காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த
1939 ல் நான் மூத்த / தலைகமகனாக பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள்.
எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.
எனது இளைய சகோதரிக்கு "பாத்திமுத்து ஜொஹ்ரா" என பெயர் சூட்டினார்கள்.
நாங்கள் 1945 1947 கால கட்டங்களில் சென்னையில் வசிக்கும்பொழுது என் தந்தையார் எனக்கு ஷெர்வானி உடுத்தி "ஜின்னா கேப்" என் தலையில் அணிவித்து வெளியில் அழைத்து செல்லும் பொழுதெல்லாம்
"ஒரு குட்டி காயிதே ஆஸமாக"
அனைவராலும் செல்லமாக முத்தமிடப்பட்டு "ஜின்னா சாப்" என அழைக்கப்பட்டதை என்றும் மறக்க முடியாது.
சென்னையில் டான்பாஸ்கோ கான்வெண்டில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது படிப்பில் முதன்மையாக இருந்தேன் என்ற காரணத்தை விட "முஹம்மதலி ஜின்னா" என்ற பெயர் காரணத்தால் கான்வெண்டின் பிரின்சிபால், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரின் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறேன்.
இன்று வரையிலும் முஹமதலி ஜின்னா என்ற எனது பெயர் கொண்டு நான் உள்நாட்டவர்கள் மற்றும் சர்வதேசத்தை சேர்ந்தவர்களின் மகிழ்வான தனிக்கவனத்தை பெற்ற நிகழ்வுகள் அளவிடமுடியாது.
என்னுடைய மகிழ்வை பதிவு செய்ய இங்கு வாய்ப்பை உருவாக்கி தந்த
எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரித்தான நீடூர் “முஹம்மதலி ஜின்னா" அவர்களுக்கு
எனது வாழ்த்துக்களை நன்றியுடன் பதிவு செய்கிறேன்.
எல்லாப்புகழும் இறையவனுக்கே.
Post a Comment