Friday, March 9, 2012

சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை

 எல்லாப்புகழும் இறைவனுக்கே


சகோதரி ஸாதிகா அவர்கள் கடந்து வந்த பாதை


தங்கை ஹுசைனம்மா அழைத்த தொடர் பதிவை ஏற்று இந்த பகிர்வு.
அறுசுவை தளத்தில் எழுதி வந்த எனக்கு பிளாக் பற்றி சமீபத்தில்தான் தெரிய வந்தது.தங்கை ஜலீலாதான் தனது பிளாக்கை பார்க்குமாறு லின்க் அனுப்பித்தந்தார்.பிற பிளாக்குகளை எப்படிப்பார்ப்பது என்றும் சொல்லித்தந்தார்.பிளாக்குகளைப்பார்வை இட்ட ஒரே நாளில் எனக்கும் பிளாக் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.பிளாக் உலகம் பற்றி 'அ' என்று கற்றுக்கொண்டு 'ஆ'என்று அடுத்து கற்றுக்கொள்ளும் முன்னரே அவசர,அவசரமாக பிளாக்கைத்தொடங்கி விட்டேன்.

தங்கை ஜலீலா கொடுத்த ஊக்கமும்,உதவியும்தான் என்னை தொடர்ந்து எழுத ஊக்குவித்தது.

பிளாக் உலகில் நுழைந்து பிறரது பிளாக்குகளை பார்த்தபொழுதுதான் எற்கனவே வேறு தளங்களில் பங்கேற்ற ஸ்நேகிதிகள் வலம் வந்ததை கண்ணுற்றேன்.

ஜலீலா,ஹுசைனம்மா,மலிக்கா,சுஸ்ரீ,விஜி,இலா,மேனகா,கீதா ஆச்சல்,ஹாஷினி,ஹைஷ் ,அம்மு,போன்றோர் பதிவுகளைப்பார்த்ததும் எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

இருந்தாலும் பிளாக் பற்றிய சந்தேகங்கள் நிறையவே உள்ளது.இன்னும் தெளிவு கிட்டவில்லை என்பதே உண்மை.கற்றது கை மண்ணளவு தான்.இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது.கற்றுக்கொள்ளும் ஆவலும் நிறையவே உள்ளது.பிளாக் பற்றி யாராவது கிளாஸ் எடுத்தால் அவசியம் தகவல் தாருங்கள். :-)

எனக்கு எழுத்து தாகம் இப்போது,நேற்று வந்ததல்ல.நான் பத்து வயது சிறுமியாக இருந்த பொழுதில் இருந்தே கதைகள் எழுதி,எழுதிய கதைகளை நானே திரும்ப,திரும்ப வாசித்து,மலை போல் குவிந்து போன பேப்பர் கற்றைகளை பெரிய பித்தளை டிரம்மில் போட்டு மொட்டை மாடியில் வைத்து கொளுத்திய அனுபவமும் உண்டு.அப்போதய என் கதைகளின் ஒரே வாசகி என் தங்கை.இப்பொழுதும் கூட "அநியாயத்திற்கு அத்தனை கதைகளையும் கொளுத்தி விட்டாயே "என்று இன்று வரை ஆதங்கப்படுவார்.

எனது எழுத்தார்வத்திற்கு நீரூற்றி,உரமிட்டு வளர்த்தவர் மரியாதைக்குறிய மறைந்த ஜமா அத்துல் உலமா பத்திரிகையின் ஆசிரியர் அல்லாமா.அபுல் ஹஸன் ஷாதலி சாஹிப் அவர்கள்.மாதாமாதம் அவரது பத்திரிக்கையில் எனது கட்டுரை வெளிவரச்செய்தார்.ஒரு மாதம் அனுப்பத்தவறினாலும் கடிதம் எழுதி கேட்டு விடுவார்.

இப்படியாக என் எழுத்துப்பயணம் ஆரம்பமாகி நர்கிஸ்,மலர்மதி,முஸ்லிம் முரசு,மங்கையர் மலர்,மங்கை போன்ற பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன்.இந்நேரத்தில் மலர் மதி ஆசிரியை என் அன்பு அக்கா அலிமா ஜவஹர் என்னை ஊக்குவித்து என் சிறுகதைகள்,தொடர்கதை போன்றவற்றை வெளியிட்டு எனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துத்தந்தார்.இதே போல் மங்கையர்மலர் ஆசிரியை மஞ்சுளா ரமேஷ் அவர்களும் என் படைப்புகளை வெளியிட்டு கடிதம் மூலம் என்னை ஊக்கப்படுத்தினார்.இந்நேரத்தில் என் கணவரும் என் எழுத்துக்கு நிறைய ஊக்கமும்,உதவியும் செய்தார்.

இந்த எழுத்தே என்னை ஈ.டி.ஏ குழுமத்தலைவர் அல்ஹாஜ்.பி.எஸ் அப்துர் ரஹ்மான் அவர்களின் குடும்பத்தினருக்கும்,எனக்குமான நட்பை ஏற்படுத்தியது.டாக்டர்.ரஹ்மதுன்னிஷா அப்துர்ரஹ்மான் அவர்களை ஒரு பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்து மூன்று பாகங்களாக வெளியிடச்செய்தேன்.

கீழை நகருக்கே மகுடம் சூட்டியது போல் அமைந்த கீழக்கரையில் பிரமாண்டமாக நடந்த மாபெரும்உலகத்தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பெண்கள் மாநாட்டில் என்னை வரவேற்புரை நிகழ்த்த அழைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நிகழ்வு.அம் மாநாட்டிலும்,அம் மாநாட்டைத்தொடர்ந்தும் திருவை அப்துர் ரஹ்மான்,ஆளூர் ஜலால்,நர்கீஸ் அனீஸ்பாத்திமா ,ஹிமானாசெய்யத்,பானு முகைதீன்,ச்வுந்தரா கைலாசம்,கமருன்னிஷா அப்துல்லா,அஜீஜ்ஸுன் நிஷா,நஃபீஷாகாலீம்,கம்பம் அலி,கவிக்கோ அப்துர்ரஹான் ,கவிகாமு ஷரீப்,கே.ஜெய்புன்னிஷா ,பாத்திமுத்து சித்தீக் ,தமிழம்மா ,நாதிரா கமால் ,சுமையா போன்ற பற்பலஅறிஞர்களின் அறிமுகம் ,அவர்களுடன் அளவளாவும் இனிய தருணமும் கிடைத்தது.சிலரின் நட்பு இன்னுமும் தொடர்கின்றது. கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வெல்ஃபேர் கமிட்டி உறுப்பினராக பங்கேற்கும் வாய்ப்பையும் தந்தது.

குழந்தைகள் பிறந்து எனக்கும்.எழுத்துலகிற்குமான பாலம் அறுபட்டுப்போனாலும்,பார்ப்பவர் எல்லாம் என்ன எழுதுவதே இல்லை என்று கேட்டாலும்,பார்க்கும் நேரமெல்லாம் டாக்டர் ரஹ்மதுன்னிஷா அப்துர்ரஹ்மான்,டாக்டர் கமலா ராகுல் போன்றோர் உட்பட என் நலம் விரும்பிகள் பலரும் "நம்ம சைட் எழுத்தாளரை மிஸ் பண்ணுகிறோமே?மறுபடி எப்ப ஸ்டார்ட் பண்ணப்போகின்றாய்"என்று கேட்கத்தவற மாட்டார்கள்.


இந்நேரத்தில் சற்றேனும் நேரம் கிடைக்காவிட்டாலும்,எனக்காக தன் படிப்பை ஒத்தி வைத்து விட்டு சற்று நேரம் அவ்வப்பொழுது வந்து உதவும் என் அருமை மகனாரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கின்றேன்.தமிழ் வாசிக்கத்தெரியாவிட்டாலும் சிரத்தையாக டிராயிங்க் வரைந்து கொண்டே என் பிளாக்கை நான் வாசிக்க கேட்டு கமண்ட் அடிப்பது எனக்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசு.

இப்பொழுது என் விரல்களில் பேனா நர்த்தனம் ஆடுவதை விட,கீ போர்டில் என் விரல்கள் நர்த்தனம் ஆடுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கின்றது.
நான் கிண்டிய உப்புமாவை டேஸ்ட் செய்து பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.


அப்படியே டெய்லர் கிச்சாவை சந்தித்து விடுங்கள்.இப்படியும் ஒரு கில்லாடியா என்று சிரிப்பீர்கள்.


இட்லிக்கடை அன்னம்மா வாயைத்திறந்தாலே பழமொழி அருவியாக கொட்டும்.அன்னம்மாவின் பழமொழி அருவியில் சற்று நனையுங்கள்.

வாழ்வியல் என்ற லேபிளில் நான் பகிர்ந்த பதிவுகள் நிறைய பதிவர்களால் விரும்பி பார்க்கப்பட்ட பதிவுகள்.

என்தந்தையைப்பற்றிய இந்த பகிர்வும் இந்தக்கவிதையும் என் ஆத்ம திருப்திக்காக எழுதப்பட்டவை.

மீண்டும் நாளை மற்றொரு சரத்தில் சந்திப்போம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

நன்றி!

அன்புடன்,
ஸாதிகா ஹாஜா
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

“Allâh will reward you [with] goodness.”

 உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான நல் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்   பெருமிதம் அடைகின்றேன் .
அன்புடன் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .

4 comments:

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சகோதரர் அவர்களே.தங்கள் முயற்சிக்கு ஒரு ராயல் சல்யூட்.என்னை உங்கள் வலைப்பூவில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வித நற்பாக்கியங்களையும் தந்தருள்வானாக ஆமீன்!

VANJOOR said...

எழுத்துலகில் சாதனைகளை
சாதித்து
தொய்வின்றி தொடர்ந்து சாதித்துக்கொண்டிருக்கும்

சாதனை "ஸாதிக்கா" வுக்கு

மென்மேலும் வளத்துடன் சாதிக்க வாழ்த்துக்கள்.

nidurali said...

புதுமையாகவும்,புலமையுடன்,சக்தி தரும் மருந்தாகவும் விமர்சனம் செய்வதில் நீங்கள் ஒரு சிந்தனையுள்ள நண்பர்.மிக்க நன்றி முகம்மதலி அலி ஜின்னா (VANJOOR) அண்ணன் அவர்களே

nidurali said...

சகோதரி ஸாதிகா அவர்களுக்கு உங்கள் சேவை பாராட்டுக்குரியது .இது மற்ற சகோதரிகளுக்கும் ஒரு உந்துணர்வைத் தரும் என்பதில் எனக்கு நம்பிகையுண்டு.

LinkWithin

Related Posts with Thumbnails