Friday, March 16, 2012

புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல! புகாரி என்றால் என்ன?

புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல

புகாரி என்று எழுதுவதைவிட புஹாரி என்று எழுதுவதுதான் அரபி மொழியின் உச்சரிப்பைச் சரியாகக் கொண்டதாகச் சொல்ல முடியும். நான் இலக்கணம் படித்தவனல்ல புஹாரி சார். ஆனால் வீம்புக்காக புகாரிதான் சரியென வாதிடுபவர்களை தமிழ் வெறியன் என்றுதான் நான் சொல்வேன். அவர்கள் தமிழை வளர்ப்பது போல பாவ்லா செய்யலாம். புஹாரி என்று கா வுக்கு பதிலாக ஹா போட்டு எழுதுவதால் தமிழ் அழிந்து விடும் என நினைப்பது பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல. இந்த தமிழ் அறிஞர்களின் பிரச்சனைக்குள்ளே நான் புக விருப்பமில்லை. என் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன் அவ்வளவுதான். கிரந்தம் என்கிறதெல்லாம் தெரியாமலேயே தமிழை என் உயிராக நேசிக்கிறேன்.. ஆனால் ஜ, ஷ, ஸ, ஹ எல்லாம் உயபோகிக்கும், அவற்றையும் தமிழாகச் சேர்த்துக் கொள்ளும் பொதுநோக்கு மனம் படைத்தவன், வெறியில்லாத தமிழன் அவ்வளவுதான். முதலில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்களா, கான்வெண்டில் பாபா பிளாக் ஷீப் பாடுகிறார்களா என்று பார்க்கட்டும் புஹாரி சார்.முதலில் புஹாரி என்பது அரபு மொழியின் சரியான உச்சரிப்பு ஆகாது. Bukhari بخاری என்பதுதான் இமாம் புகாரியின் பெயர். இது புஹாரி என்பதைவிட புகாரி என்பதற்குத்தான் அதிக நெருக்கமானது.

காண்க: http://en.wikipedia.org/wiki/Muhammad_al-Bukhari

இதைவிட சுவாரியமான ஒரு தகவல் என்னவென்றால். என் பெயர் இஸ்லாமியப் பெயரே அல்ல. புகாரா என்ற ஊரிலிருந்து வந்தவர் என்ற பொருளைக்கொண்டதுதான் புகாரி.

இந்தியாவிலிருந்து வந்தவர் இந்தியர், பாகிஸ்தானிலிருந்து வந்தவர் பாகிஸ்தானி, குஜராத்திலிருந்து வந்தவர் குஜராத்தி என்பதுபோல புகாரா என்ற உஸ்பெகிஸ்தானின் ஓர் ஊரிலிருந்து வந்தவர் என்பதன் பொருள்தான் புகாரி. இமாம் புகாரியின் பெயர் முகம்மது. அவரின் குடும்பப்பெயர்தான் புகாரி. இரண்டையும் சேர்த்து முகம்மது புகாரி என்பது அவர் பெயர் ஆனது.

என் தந்தையை அசன்பாவா ராவுத்தர் என்று அழைப்பார்கள். ராவுத்தர் என்பது குடும்பப்பெயர். இஸ்லாமியப் பெயர் அல்ல. இப்போது யாரும் அந்த ராவுத்தர் என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்துவதில்லை. அது அவர் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்டது. ஒருவகையில் அது முஸ்லிம்களுக்கிடையில் சாதியை உருவாக்குவதுபோல் இருக்கிறது என்பதால் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது. அப்படிக்குறைவதையே நானும் விரும்புகிறேன்.

சென்னையிலும் இலங்கையிலும் இன்னும் சில நாடுகளிலும் Bukhari என்பதை Buhari என்று எழுதும் வழக்கம் உள்ளது. இது அவர்கள் துவக்கத்தில் செய்த தவறு என்றாலும் பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. எப்படியோ வைத்து அழைக்கப்படுவதுதான் பெயர். அந்த வகையில் என் பெயர் Buhari தான். வேறு எப்படி அழைத்தாலும் என் செவிகள் ஏற்பதில்லை. என் நண்பர்கள் அனைவரும் என் பெயரை Buhari என்று உச்சரிக்க மிகவும் விரும்புவார்கள். அதனுள் ஓர் இசை ஊஞ்சலாடிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம். சொல்லச் சொல்ல இனிக்குதடா புகாரி என்று சொன்ன நண்பரும் உண்டு.

ஆகவே, Buhari என்பதை புஹாரி என்று எழுதினால்தான் சரி என்று நினைத்து புஹாரி என்றே எழுதிவந்தேன். அப்போது என் கவிதைகள் வெளியான பத்திரிகைகளிலும் ஏ. புஹாரி என்றுதான் எழுதப்பட்டிருக்கும். பின் தமிழை மேலும் கற்றபின், தமிழில் எழுதப்படாத எழுத்துக்களின் அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. அதன்பின் என் பெயரை நான் புகாரி என்று எழுதத் தொடங்கிவிட்டேன்.

முகம் அகம் என்ற சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் க என்ற எழுத்து எந்த உச்சரிப்பைக் கொடுக்கிறது. முஹம் அஹம் என்றுதானே?

காகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் எழுத்து கா வாகவும் இரண்டாம் எழுத்து ஹ வாகவும் ஒலிப்பதைக் காணமுடிகிறதல்லவா?

கா முதல் எழுத்தாய் வரும்போது கா என்றும் அதுவே இடை எழுத்தாய் வரும்போது ஹா என்றும் ஒலிக்கப்படும். இதுதான் தமிழில் எழுதப்படாத எழுத்துக்கள். இப்படி எழுதப்படாத எழுத்துக்கள் தமிழில் ஏராளமாய் இருக்கின்றன.

காகம் என்பதை காக்கா என்று எழுதினால் இதில் ஹா என்ற உச்சரிப்பு வரவே வராது. ஏனெனில் ஒரு ஒற்றுக்குப்பின் வரும் க ஒலிப்பில் மாறிவராது என்பதுதான் காரணம். ஒற்றுக்கு அத்தனை அழுத்தம் உண்டு.

ஹரி என்ற பெயரை கரி என்று எழுதமுடியுமா? முடியாது ஏனெனில் அதில் க முதல் எழுத்தாய் வருகிறது. அப்படி வரும்போது அதை ஹரி என்று உச்சரிக்க இயலாது கரி என்றுதான் உச்சரிக்க முடியும். எனவே சில தமிழ்ப்பிரியர்கள் அரி என்று எழுதுவார்கள். என் தந்தையின் பெயரான ஹசன்பாவா அப்படித்தான் அசன்பாவா ஆனது.

இப்படியே புகாரி என்று எழுதி உச்சரித்துப்பாருங்கள் அது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்படும். புகாரி என்பது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்பட்டால் நான் தமிழ் எழுத்தைத் தானே பயன்படுத்த வேண்டும்? ஏன் கிரந்தத்தைப் பயன்படுத்த வேண்டும்? அது எப்படிப் பார்த்தாலும் கடன்வாங்கிய எழுத்துதானே?
Source : http://anbudanbuhari.blogspot.in

புகாரி என்றால் என்ன?


என் பெயர் புகாரி. என் தந்தை எனக்கு அன்போடு வைத்த பெயர். புகாரி என்று ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குத் தெரியாது. சொல்லும்போது அதன் உச்சரிப்பு அவரை ஈர்த்திருக்கலாம். அதன் பொருளில் மயங்கி வைத்திருக்கலாம். அல்லது எங்கோ ஒரு நண்பர் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் புகாரி என்று கேட்டு, அன்றே தன் பிள்ளைக்கும் அதே பெயரைச் சூட்டவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கலாம். ஆனால் எது உண்மை என்று நான் கேட்டுத் தெரிந்துகொள்ள என் தகப்பனார் உயிரோடு இல்லை. என் ஒன்பதாவது வயதிலேயே நான் போகிறேன் என்று ஒருவார்த்தை என்னிடம் கூறாமலேயே போய்விட்டார். அவருக்கு ரொம்பப் பிடித்தது அதனால் புகாரி என்று பெயர் வைத்தார் என்று என் அம்மா ஒற்றை வரியில் தன் விளக்கத்தை முடித்துக்கொண்டார்.

நான் என் பெயருக்கான பொருள் தேடி அலைந்தேன். ரஷ்யாவில் புகாரா என்ற இடத்திலிருந்து முகமது என்ற ஓர் இமாம் அரபு நாடு வந்து நபிகளின் வரலாறு அறிந்து 'ஹதீஸ்' என்னும் குறிப்புகள் தொகுத்தார். நபிகள் வாழ்வில் நடந்ததாகவும் நபிகள் கூறியதாகவும் இவர் தொகுத்த அந்தக் குறிப்புகள், ஆதாரப்பூர்வமானவை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவரை இமாம் முகமது புகாரி என்று அழைப்பார்கள். அதாவது புகாரி என்பது புகாராவிலிருந்து வந்தவர் என்று பொருள் கொண்டது. அது அவருக்குக் குடும்பப் பெயர் ஆனது.

நான் புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனா என்றால் சத்தியமாய் இல்லை.

ஆக, நான் புகாராவிலிருந்து வந்தவனும் அல்ல; புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனும் அல்ல. ஒரு குடும்பப் பெயர் எனக்கு முதல் பெயராய் அமைந்திருக்கிறது. எனவே பொருளை நாமே உருவாக்க வேண்டியதுதான் என்று முடிவுசெய்தேன்.

தமிழகராதியில் புகார் என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள்கள் இருப்பதைக் கண்டேன்.

ஆற்றுமுகம்
காவிரிப்பூம்பட்டினம்
பனிப்படலம்
மந்தாரம்
மழைபெய்யும் மேகம்
கபிலமரம்
கபிலநிறம்
முறையீடு

இவற்றுக்கு எனக்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டது. என் பெயருக்கான பொருளாக மிகச் சரியாக எதைக்கொள்ளலாம் என்ற என் அலசலில், சொல்லறிஞர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது. சொல்லறிஞர் என்றதுமே எனக்கு திரு. இராம.கி அவர்களின் நினைவே வரும். என் கேள்வியை அவரிடமே விட்டேன். வழக்கம்போல் அவர் பதிலும் அற்புதமாய் வந்து இறங்கியது. அவருக்கு என் நன்றி. இதோ அவரின் விளக்கம்:

(இந்த விளக்கத்தின் இறுதியில் என் கவிதை ஒன்று என் பெயர் குறித்து இருக்கிறது)

அன்பிற்குரிய புகாரி,

ஆறு என்பது ஓடி வரும் போது அதன் கரைகளில் ஊர்களுக்கு அருகில் இருப்பது ஆற்றுத் துறை.

துறுதல் = நெருங்குதல், அணுகி வருதல்; நாம் வாழும் இடத்திற்கு அருகில் வருகிறது.

அதே ஆறு கடலை அடையும் போது அது கடலுக்குள் நுழைகிறது; அதாவது புகுகிறது; புகல்கிறது; புகருகிறது. புகரும் இடம் புகார். அப்படிப் பார்த்தால் எல்லா ஆறும் புகும் இடம் புகார்தான். (அதனால் தான் புகல் என்ற சொல் port என்ற ஆங்கிலச் சொல்லிற்கு முற்றிலும் இணையானது.) இருப்பினும் சிறப்பாகக் காவிரி புகும் இடத்திற்குப் புகார் என்று சொன்னார்கள். ஆறு கடலில் புகும் போது ஆற்றுப் பக்கம் ஒரு முகமும் கடலின் பக்கம் ஒரு முகமும், கடலிலிற்கும் ஆற்றிற்கும் அருகில் சற்று உள்வாங்கினால் போல் ஏற்படும் கழியில் (backwaters) இன்னொரு வகை முகமும் ஏற்படும்.

ஆற்றில் ஏற்படும் முகம் (இங்கே முகம் என்பது ஆங்கிலத்தில் சொல்லும் face என்னும் பொருள் தான்) ஆற்றுமுகம்; கடலைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் (ஆங்கிலத்தில் sea face என்பார்கள்.) கடல்முகம்; இதைக் கடற்புறம் என்றும் சொல்வது உண்டு. கழியைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் கழிமுகம்.

மேலே உள்ள மூன்றுமே புகாரில் உண்டு; (இந்தக் காலப் புகாரிலும் உண்டு; சற்று சீரழிவுடன். ஆனால் எர்ணாகுளம், கொச்சி போனால் இந்த மூன்றையும் பெரியாற்றின் முகப்பில் காணலாம்.)

காவிரி புகும் பட்டினம் காவிரிப் பூம்பட்டினம் ஆனது; அதற்கும் பூவுக்கும் முடிச்சுப் போடுவது கவிநயம் கருதியே ஒழிய உண்மை அல்ல.

இது போன்ற சொல்லாட்சிகள் இங்கிலாந்து, இரோப்பா போன்ற இடங்களில் ஆற்றின் மேல் உள்ள ஊர், கடலின் மேல் உள்ள ஊர் என்ற பெயர்களால் உண்டு. இங்கு சவுதியில் கூட Yanbu Al bahar (Yanbu on the sea) என்ற ஆட்சி உண்டு.

It is a city through which Kaveri enters the sea. இதுதான் காவிரிப் புகும் பட்டினத்தின் பொருள். நம் வேறாகப் புரிந்து கொண்டு குழம்பிக் கொள்கிறோம்.

இனி அடுத்த மூன்று பொருட்பாடுகள் மேகம், மழை, நீர் பற்றிய தொடர்பு கொண்டவை. இதை அறிய ப.அருளியின் "யா" என்ற பொத்தகத்தைப் படிக்கவேண்டும்.

புய் என்பது துளைக் கருத்து மூலவேர்
புய்+அல்>புயல் = துளைவளியாக ஒழுகுதலையுடைய முகில்

மிகப் பலவாகிய பொத்தல்கள் உடைய ஒரு நீர் நிரம்பிய கலத்தினின்று நீர் வெளிப்பட்டு ஒழுகுதலைப் போலவே மழைநீர்ச் சொரிதலைக் கண்டு அப்படிப் பெயர் ஏற்பட்டது. நாளடைவில் புயல் என்பது முகில், மழை, காற்றோடு அடிக்கும் மழை என்று பொருள் நீட்டம் பெற்றது.

இதே போல நிலத்தின் மேல் நிரம்பிக் கிடக்கும் நெடுநீர்ப் பரப்பில் இருந்து முகந்து கொண்டதால் முகில்

முகு>முகுவு>முகவு>முகவை = நீர் முகக்கும் கருவி முகு+இல்>முகில் = நீரை முகக்கும் மேகம். பின் அது மழையையும் குறித்தது.

முகில் கரிய தோற்றம் கொண்டதால் மை, மழை, மங்குல், மப்பு, மந்து, மஞ்சு, மாரி, மால், மாசு, மேகம், கார், ஆயம் எனப் பல சொற்களைப் பெற்றது.

மய்>மை = கரிய முகில்
மய்>மய்+ஐ>மயை>மழை = கரிய முகில்
மய்>மய்ம்>மம்>மம்பு>மப்பு = கரிய முகில்
மம்+கு>மங்கு>மங்குல் = கரிய முகில்
மய்>மய்ம்>மய்ம்+து>மய்ந்து>மந்து = கரிய முகில்
மய்>மய்ம்>மய்ம்+து>மய்ந்து>மய்ஞ்சு>மஞ்சு = கரிய முகில்
மய்>மாய்>மாய்கு>மாய்கம்>மேகம் = கரிய முகில்

நான் சொல்லிக் கொண்டே போகலாம். விரிவு அஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்.

மப்பும் மந்தாரமும் என்று சொல்வது இரட்டைக் கிளவி. மந்து+ஆரம் = மந்தாரம் = மேகக் கூட்டம்; மேகம் நிறைந்து நிற்பது; அடைந்து நிற்பது ஆறு கடலை அடைவதைப் போல; அதன் வழியாக நீர் கொட்டுகிறதல்லவா?

மேகப் படலம் பனிப் படலம் போல;

இனி அடுத்த பொருட்பாடு கபில நிறம்.

புகர்தல் என்பது துளையிடுதல் என்று சொன்னேன் அல்லவா? அதனால் புகர்வது புள்ளியிடுவது ஆகும். புகர் என்றால் புள்ளி என்றும் பெயர். புகரப் புகர கருத்தது இன்னும் கருக்கும்; சிவந்தது இன்னும் சிவக்கும்.

எனவே புகர் என்பதற்கு இருண்டது என்ற பொருளும் வந்தது. dark என்ற பொருளில். புகார் என நீண்டு brown நிறத்தைக் குறிக்கும். ஆங்கிலத்திலும் brown என்ற சொல்லின் பிறப்பு இந்தக் கருத்தில் தான். brown என்பது தமிழில் இரண்டு விதமாக உணரப் படும். ஒன்று கருமை கலந்த பொன்மை; இன்னொன்று கருமை கலந்த செம்மை..

கபில நிறம் என்பது இது தான்; brown நிறம். கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்பது போல் கபிலன் என்றால் புகர் நிறத்தான். புலவர் கபிலர் என்றால் என்னமோ, ஏதோ என்று எண்ணிக் கொள்கிறோம். அது அவருடைய நிறக் குறிப்பு. அந்தக் காலப் பெயர்கள் பல இப்படி நிறம் சார்ந்து இருக்கின்றன. கருப்பன், செவத்தான், பொன்னன், வெள்ளையன், நீலன், பச்சையப்பன் போல இது ஒன்று கபிலன்.

இந்தப் புகரிலேயே கொஞ்சம் செம்மை கூடிவிட்டால் அது குரால் எனப் படும் (reddish brown).

தமிழில் இருக்கின்ற நிறப் பெயர்கள் இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

பெருங்கூச்சல், முறையீடு இரண்டும் வேற்று மொழிச் சொல்லால் கொண்ட பொருட்பாடுகள். இந்த மூலம் பாரசீகமோ, என்னவோ எனக்குத் தெரியாது.

அன்புடன்,
இராம.கி.


ஆக, நான்
கபில நிறத்தவனோ

கூட்டம் கூடி
கருணைக் கும்மியடித்து
மண்ணுக்குத் தேன் பொழியும்
மேக மனத்தவனோ

எண்ணக் குஞ்சுகள்
சின்னச் சிறகினை
விண்ணில் விரிக்க
மெல்லக் கிழிக்கும்
பனிப்படலமோ

ஓடித் திரிந்த
காவிரிப் பெண்ணின்
காதல் புகலிடமோ

ஆற்றலைத் தாகமும்
கடலலை மோகமும்
ஆரத்தழுவ
ஆசையாய் விரிந்துகிடக்கும்
இன்ப மடியோ

கற்பனை நீர் முத்துக்கள்
கணக்கற்று இறைய இறைய
கவிதை இழைகள்
காற்றினில் நிறைய நிறைய
கருத்துகள் எடுத்து வீச
புறப்பட்ட புயலோ

நானறியேன் நானறியேன்
ஆனால்...

புகாரி என்றெவரும்
அன்போடு அழைக்கும்போது
பூரித்துப் போகிறேன்
இந்த
அன்புடன் புகாரி

அதுவொன்றே
போதும் எனக்கு!

Source :http://anbudanbuhari.blogspot.in

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails