Friday, April 15, 2011

மனம் மகிழுங்கள் - 44 : குழந்தை மனம்

44 - குழந்தை மனம்!
- நூருத்தீன்
யற்கையின் மாசுமறுவற்ற மற்றொரு வடிவம் குழந்தை. குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும் லூட்டியும் தூய்மை. கள்ளம், கபடம் கலக்காதவை. அவர்களுக்கு முன்தீர்மானங்கள் இருப்பதில்லை. இடம், பொருள் பார்த்துப் பேசவேண்டும், கூடாது என்பதெல்லாம் எதுவும் அவர்களுக்கு இல்லை. அதனாலேயே அவர்களின் பேச்சோ சிரிப்போ நமக்குப் பொத்துக்கொண்டு வரும் சிரிப்பையோ சங்கடத்தையோ ஏற்படுத்திவிடும்.

தன் ஐந்து வயது மகளைக் குளிப்பாட்டும்போது தாய் பெருமையோடு கூறினாள், "இங்கே பாரு! உன் தலைமுடி எவ்ளோ நீளமா வளருது".

அதற்கு மகள் முகத்தைச் சிணுங்கலாக வைத்துக்கொண்டு, "நீதான் என் தலைல நெறய்ய தண்ணி ஊத்துற".

அவர்களது உலகம் வேறு. அவர்களின் குறிக்கோள் மிகவும் எளிதானது. மகிழ்வாய் இருக்க வேண்டும். பசித்தால், விழுந்தால், வலித்தால், ஓர் அழுகை. சமாதானம் செய்து கவனித்துக்கொள்ள பெற்றோராச்சு. பிரச்சினை தீர்ந்ததா? அடுத்ததாகத் தூக்கம், விளையாட்டு, சிரிப்பு. பெரியவர்கள் நாம்தான் குழந்தைகளுக்கு algorithm, trigonometry என்று அவர்களுடைய எளிய பாலகத்திலேயே திணித்து, கற்றுத்தந்து, அவர்களது குழந்தைத் தன்மையை விரட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம் பிடிக்கிறோம். ஓரமாய் அமர்ந்து நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பலன் ஏராளம். சொப்புப் பாத்திரத்தில் உணவு, பானம் எல்லாமும்கூட கிடைக்கலாம். வயிறு நிறையாது; ஆனால் மனம் இலேசாகும்.

பொதுவாய் அவர்களுக்குச் சிரித்து மகிழக் காரணம் தேவைப்படுவதில்லை; அழவும், சண்டித்தனம் செய்யவும்தான் காரணம் தேவை! அதை பொறுப்பாய் நாம் அவர்களுக்கு அளித்துவிட்டு, ‘எப்பப்பாரு என்ன அழுகை?’ என்று அதட்டல்வேறு.

குழந்தைகளுக்கு நிறவேற்றுமை, ஏற்றத் தாழ்வு, பாரபட்சம், எதுவுமில்லை. கா, பழம், விளையாட்டு, சிரிப்பு, கும்மாளம் அவ்வளவுதான். ஐந்து ஆண்டுகளுக்குப்பின் வாசலுக்குவந்து கும்பிட்டு, அசடு வழியும் எம்.எல்.ஏவைப் பார்த்தாலும் கோபம் வராது. "ஹைய்யா! அந்த மாமா விரல்ல பெர்ஸா மோதிரம்" என்ற வெள்ளேந்தி வியப்பு இருக்கும்.

அதற்காக பெரியவர்கள் நாமும் குழந்தைகள்போல் "தத்தக்கா பித்தக்கா" என்றெல்லாம் மழலையில் பேச ஆரம்பித்துவிட வேண்டும் என்பதல்ல. "நல்ல டாக்டரா பார்த்து காட்டக்கூடாதா? ஆரம்பத்திலேயே காண்பிச்சுட்டா இதெல்லாம் சரிப் பண்ணிடலாம். இப்படித்தான் என் ஒன்றுவிட்ட நாத்தனார் புருஷனுக்கு..." என்று பக்கத்துவீட்டு நல்லுள்ளத்தினர் நம் வீட்டினருக்கு இலவச அட்வைஸ் தருவார்கள்.

இங்கு விஷயம் குழந்தைகளின் மனசு. அவர்களின் மகிழ்வு. குழந்தைகள் நமக்கு ஆசான்.

பெரியவர்களாக வளரும் நாம் பற்பல பிரச்சினைகள், சோதனைகள் என்று தாண்டித் தாண்டி ஓடி ஒரு கட்டத்தில் அலுப்பு மேலிட்டுவிட்டால், சோர்ந்து அமர்ந்துவிடுகிறோம். அத்தகு தேக்கம் நம்மை மந்தமாக்கிவிடும். தெளிந்த நீராய் ஓடும் ஆறு ஓடிக்கொண்டே இருந்தால்தான் அதன் நீர் தெளிவு. தேங்கி நின்றால்? குளமாகி எருமைகள் குளித்து மகிழ்வடையும்! சைக்கிளோ, காரோ எதுவொன்றையும் உபயோகித்துக் கொண்டேயிருந்தால்தான் நல்லநிலையில் இருக்கும். இல்லையெனில் துருப்பிடித்துவிடும். நாம் நகராவிட்டாலும் நாளும் கிழமையும் வயதும் நகர்ந்து கொண்டுதானே இருக்கின்றன. அதனால் கூடவே ஓடாவிட்டால் மனம் மட்டும் முடங்கிவிடும். எனவே காலத்துடன் நகர்வதே உத்தமம்.
நமது செயல்பாடுகளுக்கு வயது தடையில்லை. ஜார்ஜ் பெர்னார்ட் ஷா நோபல் பரிசு பெறும்போது அவரது வயது எழுபது மட்டுமே!

இதில் சூட்சமம் என்ன? வேகமாய் நகர்ந்துகொண்டே இருக்கும்போது மனதிற்கு வருத்தப்பட நேரம் இருப்பதில்லை. அதனால் அது இளமையாகவே இருக்கிறது.

தவிரவும், கையோ, காலோ; திறமையோ, கற்பனையோ - உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவை தம் ஆற்றலை இழந்துவிடுகின்றன. ஏதோ ஒரு கட்சி ஆட்சிக்குவந்து இலவசமாய் அளித்தார்கள் என்பதற்காக சக்கர நாற்காலியைக் கொண்டுவந்து ஒரு தவம்போல் மூன்று ஆண்டுகளுக்கு அதில் அமர்ந்தவாறே வாழ்க்கையை ஓட்டுகிறீர்கள் என்று வையுங்கள். என்ன ஆகும்? அதன்பிறகு எழுந்து நின்றால் நடக்க இயலாது. கால்கள் நடை மறந்து போய்விடும். பிறகு பிஸியோதெரபிக்காரர், இலவசமெல்லாம் கிடையாது என்று ஃபீஸ் தீட்டிக் கறந்துவிட்டு நடக்கக் கற்றுத்தருவார்.

அது மட்டுமன்றி எந்தத் திறமையையும் பயன்படுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே அதில் நன்னம்பிக்கை ஏற்பட்டு அது மனதில் துணிவையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தும். நம்மிடம் இருக்கும் திறமையும் துணிவும் களவு போய்விடும் என்று அபத்தமாக நினைத்துக்கொண்டு யாராவது படுக்கையறையில் புகுந்து, இழுத்துப் போர்த்திக் கொண்டு, கதவையும் அடைத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? சிலநாட்களில் தானாகவே துணிவு விடைபெறும்; திறமை நமுத்துவிடும்.

வீடு, சன்னல், மேசை, நாற்காலி, மூக்குக் கண்ணாடி என்று ஒவ்வொரு பொருளையும் தூசுதட்டித் துடைத்துப் பாதுகாப்பதைப்போல் நமது செயல்களையும் திறமைகளையும் உபயோகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது நமது மனதை ஆறப்போட்டு விடாமல் அதன் முழு சக்திக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, முதுமையில் தளர்ச்சி உடலில் தென்பட்டாலும் மனம் மட்டும் பொலிவுடனேயே இருக்கும்; அது நம்மை இடைவிடாது செலுத்திக் கொண்டேயிருக்கும்.

விடைபெறும் காலம் வரும்வரை இயங்குங்கள்; நல்ல குறிக்கோளுடன் செயலாற்றிக் கொண்டே இருங்கள். மன உற்சாகமும் மகிழ்வும் தேர்தல் அறிக்கை போலன்றி உண்மையாகவே நிகழும்.


னம் மகிழ, தொடருவோம்...

No comments: