பெற்றோர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவால்.சில பெற்றோர் - "ஏன் தான் இந்தக் கோடை வருகிற்தோ" என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.
எனவே பெற்றோர்களாகிய உங்களுக்கு சில ஆலோசனைகள்:
அவர்களுடன் கொஞ்ச நேரம்
பள்ளிக்கூட நாட்களில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கென ஒதுக்குகின்ற நேரம் மிக மிகக் குறைவு. இந்தக் கோடையிலாவது கொஞ்சம் அதிகம் நேரம் செலவிடுங்களேன். அது Quality time ஆக அமைந்து விடட்டும். மனம் விட்டுப் பேசுங்கள். "அவர்களுடைய உலகத்தைப்" புரிந்து கொள்ளுங்க்ள். அவர்களுக்குப் "போர்" அடிக்கும் அளவுக்கு நீ.....ண்ட உங்கள் சொற்பொழிவைத் துவங்கி விட வேண்டாம். அவர்களைப் பேச விட்டுக் கேளுங்கள். அவர்கள் மனம் திறப்பார்கள். அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு!
தொழுகை
குழந்தைகளை பள்ளிவாசலுடன் இணைத்து வைத்தல் மிகவும் நன்று. ஐந்து வேளைகளும் ஒழுங்காகத் தொழுகிறார்களா என்பதை உறுதியுடன் கண்காணிக்க வேண்டும். இதில் சலுகை வேண்டாம். "பிள்ளை நன்றாகத் தூங்குகிறான். விட்டு விடுங்கள்" என்று தாயோ தந்தையோ சலுகைக்கு வர வேண்டாம்.
தொழுகை சம்பந்தப் பட்ட சட்டங்களைக் கற்றுத் தரவும் மனப்பாடம் செய்திட வேண்டிய பகுதிகளை மனனம் செய்திடவும் கோடை ஒரு அருமையான வாய்ப்பு.
அதே நேரத்தில் வயதுக்கு வந்து விட்ட பிள்ளைகளிடம் அவர்களைக் சிறு குழந்தைகளைப் போல் நடத்திடக் கூடாது. உடனுக்குடன் கட்டுப் பட்டு நடந்த குழந்தைகள் விடலைப் பருவம் அடைந்ததும் அவர்களுடைய நிலையில் ஒரு மாற்றத்தை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் தொழுகையில் அலட்சியம் காட்ட வாய்ப்பிருக்கிறது. அப்போது - கடுமையான சொற்களைப் பயன் படுத்திட வேண்டாம். "தொழுகை விஷயத்தில் வாப்பா மிக உறுதியாக இருப்பார்" என்று அவர்கள் உணரும் படி நடந்து கொள்ளுங்கள். படிப்படியாக அவர்களிடம் மாற்றத்தைக் காணலாம். அது வரை சற்றே நீங்கள் பொறுமையைக் கடை பிடித்துத் தான் ஆக வேண்டும்.
டீவி
கோடையில் பெரும்பான்மையான மாணவ மாணவியர்க்கு டீவியே மிகப் பெரிய பொழுது போக்கு சாதனம். டீவியைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு சில கட்டுப் பாடுகளை விதிக்கலாம். டீவியை ஒரேயடியாக மறுக்கவும் வேண்டாம். செல்லம் கொடுத்து ஒரேயடியாக கெடுத்து விடவும் வேண்டாம். முதலில் எதனையெல்லாம் பார்க்க அனுமதி உண்டு என்றும் எதனையெல்லாம் பார்க்கவே கூடாது என்றும் வரையறுத்து விட வேண்டும். டீவியை எப்போதெல்லாம் பார்க்கலாம் என்றும் எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதற்கும் கட்டுப் பாடுகள் விதிப்பது நல்லது. இக்கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் பெற்றோர்களே ஒரு முன்மாதிரியாக விளங்கிடவும் வேண்டும்.
நேரக் கட்டுப்பாடு
பல மாணவர்கள் - காலையில் சிற்றுண்டி முடித்து விட்டு வெளியே புறப்பட்டு விடுவார்கள். கிரிக்கெட் அல்லது மற்ற விளையாட்டுகளுக்குக் கிளம்பி விடுவார்கள். மதியம் வீட்டுக்கு வரத் தாமதம் ஆகும். பிள்ளைகளை அழைத்துப் பேசி விடுங்கள் முதலிலேயே. அவர்களை தாராளமாக விளையாட விடுங்கள். அதிலே குறுக்கிடாதீர்கள். அவர்களிடம் உள்ள அதிகப் படியான ஆற்றல் செலவிடப் பட்டே ஆக வேண்டும்.
ஆனால், எப்போது வெளியே சென்றாலும் நேரக் கட்டுப்பாடு ஒன்றை விதித்து உற்சாகத்தோடு அவர்களை அனுப்பி வையுங்கள். அத்துடன் நின்று விடாமல், அவ்ர்களுக்கு விளையாடுவதற்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுக்கத் தவறாதீர்கள். அத்துடன் விளையாடி விட்டு வந்த பிறகு அவர்களின் விளையாட்டுத் திறமை குறித்தும், அன்றைய "சாதனைகள்" குறித்தும் கேட்டுப் பாராட்டுங்கள். உங்கள் அன்பில் சொக்கி விடுவார்கள். அத்துடன் நீங்கள் விதிக்கும் கட்டுப் பாடுகளை அணுவளவும் மீற மாட்டார்கள்.
நூல்கள்
நல்ல நூல்களை அவர்களுக்கு வாங்கித் தந்து படிக்கச் செய்யுங்கள். இஸ்லாமிய நூல்கள், சுய முன்னேற்றம் சம்பந்தப்பட்ட நூல்கள், சாதனையாளர்கள் வரலாற்று நூல்கள், இன்னும் உங்கள் பிள்ளைகள் விரும்பும் துறை சம்பந்தப் பட்ட நூல்கள் - என்று அவர்கள் வயதுக்கு ஏற்ற நூல்களை வாங்கிக் கொடுங்கள்.
பெரியோர் அறிமுகம்
தாம் சார்ந்த துறைகளில் வெற்றி பெற்ற பெரியவர்களை உங்கள் குழந்தைகளூக்கு அறிமுகம் செய்து வையுங்கள். அவர்களைப் போல் நாமும் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். மேலும் நல்ல மனிதர்களிடமும் உங்கள் குழந்தைகளை அறிமுகம் செய்து வையுங்கள். அவர்களுடைய துஆ உங்கள் குழந்தைகளுக்குக் கிட்டுவதுடன், அவர்களை உங்கள் குழந்தைகள் "முன்மாதியாக" எடுத்துக் கொண்டு விட வாய்ப்பு உண்டு.
உறவினர் வீடுகளுக்கு
உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் சில கட்டுப் பாடுகள். மச்சி உறவு முறை உள்ள வீடுகளுக்கு அனுப்பி வைத்தால் படுக்கைகள் பிரித்து வைக்கப் படுகிறதா என்றும் பார்க்க வேண்டும், நேருக்கு நேர் தேவையில்லாமல் பழக விடவும் அனுமதிக்கக் கூடாது. "நாங்கள் நல்ல எண்ணத்துடன் தான் பேசிக் கொள்கிறோம்" என்பதெல்லாம் ஷைத்தானின் அடிச்சுவடுகள்.
கோடை வாசத் தலங்கள்
நண்பர்களுடன் கோடை வாசத் தலங்களுக்குச் செல்ல விரும்புகிறார்களா? தாராளமாகச் செல்லலாம். நல்ல நணபர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். கொஞ்சம் அவர்களைக் கண்காணியுங்கள்.
இறுதியாக...
ஒரேயடியாக கட்டுப் பாடுகளை விதித்தால் பிள்ளைகள் உங்களை விட்டு வெருண்டோடி விடுவார்கள். ஒரேயடியாக அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி விடுவார்கள். எனவே நடு நிலையோடு நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!
by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,
No comments:
Post a Comment