Saturday, April 9, 2011

மனம் மகிழுங்கள் - 43 : இயைந்து வாழ்!

மனம் மகிழுங்கள்!
43 - இயைந்து வாழ்!
- நூருத்தீன்
ம் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் இயற்கையின் விதிகளுக்கும் தொடர்பிருக்கிறது; இயற்கை நமக்குப் பாடம் கற்றுத்தருகிறது என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், பூமி, மலை, கடல், மணல், சுண்டல், தூசு ஆகியனபோல் இந்த அகண்டப் பெரும் பிரபஞ்சத்தில் நாமும் ஓர் அங்கம். இயற்கை இவற்றிற்கெல்லாம் விதி நிர்ணயித்துள்ளதைப் போன்று நமக்கும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் முந்தைய அத்தியாயங்களில் அறிந்து கொண்டோம். அவை யாவை எனக் கொஞ்சமாய்த் தெரிந்து கொள்வோம்.

“எம்மாம் பெரிய தேக்கு மரம்!” என்று ஒரு மரத்தைப் பார்த்து வியந்து போகிறீர்கள். அது அம்மாம் பெரிசாக வளர்ந்து நிற்கப் பலகாலம் ஆகியிருக்கும்; இல்லையா? ஒரே இரவில் யாரும் அதைக் கொண்டு வந்து நட்டு வைத்துவிடவில்லையே. பளபளக்கும் வைரங்களைப் பார்த்துவிட்டு வாங்குவதற்கு வழியில்லாமல் முகவாய்க் கட்டையைச் சொறிந்து கொண்டே புருவம் உயர்த்தி ஆச்சரியப்படுகிறோம். அது ஒன்றும் வாரஇதழ்போல் ஒரே வாரத்தில் உருவாவதில்லை அல்லவா? எதுவொன்றும் தம் அழகையும் தரத்தையும் மேன்மையையும் அடைந்து அற்புதமாய்ப் பரிணமிக்க, குறிப்பிட்ட காலத்தைச் செலவிட்டிருக்கின்றது.

இப்படியாக, தத்திப் பறக்கும் பறவைகளிலிருந்து, ‘பூப்பூவாய் பறந்து போகும் பட்டாம்பூச்சி’யிலிருந்து ஒவ்வொன்றும் அது, அதுவாக உருவாவதற்குக் காலம் தேவைப்படுகிறது. அதைப்போலவே,

மனிதர்களாகிய நமக்கும் நாம் பிறந்தது முதல் மறையும்வரை இவ்வுலக வாழ்க்கையில் பலப்பல படித்தரங்கள் உள்ளன. படுத்தபடியே அழுது, கவிழ்ந்து, பிறகு தவழ, நடக்க, முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டால் ‘எச்சித் தொட்டு வெச்சு’ அந்தக் காயம் சுகமடைய என்று ஒவ்வொன்றிற்கும் அதற்குண்டான காலஅவகாசம் தேவைப்படுகிறது. 'துரித உணவுக் கடை'யில் அவசரத்திற்கு பீட்ஸா ஆர்டர் செய்து உண்பதுபோல் எதுவொன்றும் நாம் நினைத்த வேகத்தில் நடைபெறாது. பார்க்கப்போனால் ஆர்டர் செய்த உணவு மேசைக்கு வந்து சேரவே சில-பல நிமிடங்கள் தேவையாய் இருக்கிறது.

எனவே, நாம் நமக்கென ஒரு குறிக்கோளை, இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறும்போது அதற்கு நேரமெடுக்கும். தன்னம்பிக்கை ஏற்பட வேண்டுமா, அதற்குச் சிலகாலம் ஆகும். உடல் ஆரோக்கியத்தைச் செம்மைப்படுத்தி ‘சிக்ஸ் பேக்’, ஏழேமுக்கால் பேக் என்றெல்லாம் வடிவமைக்க முட்டை, பால் எனச் செலவழிக்க வேண்டும். தூங்கிய நேரம்போக உடற்பயிற்சி என்றெல்லாம் மெனக்கெட்டுக் காத்திருக்க வேண்டும். தொழில் என்று ஒன்றை ஆரம்பித்துவிடலாம்; அதைக் கட்டியெழுப்ப, நிறுவனமாக உருவாக்க அதற்குரிய காலம் தேவை. ஓர் இரவில் தூங்கி விழித்து எழுந்தோமெனில் பெட்காஃபி வேண்டுமானால் உடனே கிடைக்கலாம்; வேறெதுவும் சடுதியில் நடைபெற்றுவிடாது.

ஆச்சா? அடுத்து, இயற்கையான மாற்றங்கள்.

உலகின் பருவகாலம் நான்கு என்றால் ஒன்றைத் தொடர்ந்துதானே அடுத்தது வருகிறது. ஒன்றை மாற்றி ஒன்று, அல்லது ஒன்றை முந்திக் கொண்டு வேறொன்று என்று எதுவும் நிகழ்வதில்லை. மாறாக, ஒன்றன்பின் இன்னொன்று என்பதுவே இயற்கை விதித்த விதி. அதைப் போலவே இன்பமும் துன்பமும் நம் வாழ்க்கையில் மாறிமாறி நிகழ்வதும் இறைவன் நிர்ணயித்துள்ள இயற்கையின் விதி. எதுவொன்றும் அப்படியே நிலைத்து நிற்பதில்லை. இன்ப நிகழ்வுகளால் குதூகலம் அடையும் நாம், துன்ப நிகழ்வுகளின்போது அவசரப்படுகிறோம்; பொறுமையை இழக்கிறோம். சற்றுக் காத்திருக்க வேண்டும்; பின்னாடியே அடுத்த பஸ்ஸில் இன்பம் வந்து இறங்கப் போகிறது என்று நம்ப வேண்டும். இரவைத் தொடர்ந்து பகல், புயலுக்குப்பின் அமைதி என்பதுபோலவே நம் கவலையும் இன்பமும்.

அடுத்தது ஓய்வு!

ஓய்வு எனப்படுவதும் இயற்கையின் ஓர் அம்சமே. இங்கு நாம் பேசப்போவது, உத்தியோகத்திலிருந்து ஓய்வடைந்து வீட்டில் ஈஸிசேரில் சாய்ந்து கொள்ளும் ஓய்வு பற்றியல்ல. அதுவும் ஓய்வுதான். ஆனால் இங்கு ஓய்வு என்பது அவ்வப்போது நடைபெறுவதைப் பற்றியது. உழும் வயல் தொடங்கி காட்டில் வாழும் மான், புலி, என்று அனைத்திற்கும் ஓய்வு தேவை. தூக்கம் ஓர் இன்றியமையாத ஓய்வு. நீரில் மிதக்கும் மீன்கூட தூங்குகிறது - கண்களைத் திறந்து கொண்டே.

இருபத்துநாலு மணிநேரமும் ஓடிக்கொண்டேயிருக்க முடியாது. ‘ஓய்வே கிடைப்பதில்லை; தலைக்குமேல் வேலை இருந்து கொண்டே இருக்கிறது’ என்று இயங்கிக் கொண்டே இருந்தால் வேலை தீரப் போவதில்லை; ‘தாவு தீர்ந்துவிடும்’. ஓய்வு என்பது அடுத்த காரியத்திற்கு நம்மை தயார் செய்கிறது; அடுத்துத் திறம்பட செயல்பட உதவுகிறது. ஏனெனில் ஓய்வு என்பது குறிக்கோள் அல்ல; நிர்பந்தம். எடுத்தே ஆகவேண்டும்.

சரி! புரிகிறது! இதற்கும் மன மகிழ்விற்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது! இயற்கையோடு இயைந்து வாழ்!


னம் மகிழ, தொடருவோம்...

No comments: