Tuesday, March 30, 2010
உலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட்
எல் காஸ்டிலோ பிரமிட் என அழைக்கப்படும் இது உண்மையில் படிக்கட்டுகளால் அமைந்த பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு கோட்டையாகும். இது மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் கோட்டையை மாயன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் கட்டினர். மீசோ அமெரிக்கக் கலாச்சாரப்படி பழைய பிரமிடின் மேல் புதிய பிரமிடு ஒன்றைக் கட்டுவது வழக்கம். அதன் சாட்சியாக நிற்கிறது இந்த பிரமிட்.
கம்பீரமான இந்த ஆலயத்தின் மேலேறினால் இன்றைய உலகம் உற்சாகக் காற்று வீசி வரவேற்கிறது. நாலா பக்கமும் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன. ஆனால் ஆலயத்தின் உள்பக்கமோ கடந்த காலத்தின் மௌன சாட்சியாய் அமைதியுடனும், வரலாற்றுச் சிதைவுகளுடனும் அமைந்திருக்கிறது.
இட்சா எனும் படை வீரர்கள் குழு ஒன்று கட்டிய நகரே சீச்சென் இட்சா என அழைக்கப்படுகிறது.
இந்த நகரில் அவர்கள் தங்களுடைய கலாச்சாரத்தின் அடையாளமாக பல்வேறு கோயில்கள், நினைவுச் சின்னங்கள், கோட்டைகள் கட்டி தங்களை நிலை நிறுத்தியுள்ளனர்.
இவர்கள் போர்வீரர்களாகவும், கலைஞர்களாகவும் கூடவே வானியல் வல்லுனர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
சீச்சென் இட்சா என்பதற்கு இட்சாவிலுள்ள கிணற்றின் வாய் என்பது பொருள். வித்தியாசமான பெயராய் இருக்கிறதே என்னும் நமது கேள்விக்கு “மாயன் நாகரீகம் கிணற்றை புனித அடையாளமாகப் பாவிக்கிறது:” எனும் பதில் கிடைக்கிறது.
எல்காஸ்டிலோ கோட்டையில் வடக்குப் படிக்கட்டு வித்தியாசமானது. இந்த படிக்கட்டுகளின் இரண்டு ஓரத்திலும் ஒவ்வோர் பெரிய பாம்புகள் மேலிருந்து கீழாக தரை வரை இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
சில குறிப்பிட்ட காலங்களில் சூரிய வெளிச்சம் இந்த கோட்டையில் விழும்போது கோட்டையின் நிழல் இந்த படிக்கட்டின் ஓரத்தில் விழுகிறது. வெளிச்சமும் நிழலுமாய் சேர்ந்து இந்த பாம்புகள் உயிருடன் இருப்பது போன்ற அற்புத தோற்றத்தை உருவாக்குகின்றன. இது மாயன் நாகரீக மக்களின் கட்டிடக் கலை அறிவுக்கும், வானியல் அறிவுக்கும் ஒரு துளிச் சான்று எனலாம்.
எல் காஸ்டிலோ எனும் ஸ்பானிய வார்த்தைக்கு கோட்டை என்பது அர்த்தம். ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனவும், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனவும், பதினோராம் நூற்றாண்டிற்கும் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் எனவும் பல்வேறு காலகட்டங்கள் தெரிவிக்கப்பட்டாலும் உறுதி செய்யும் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.
எனினும் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே கட்டிய கோட்டை என்பதில் அனைவரும் உடன்படுகின்றனர்.
மாயன் நாகரீகத்தின் அடையாளமாகத் திழகும் சீச்சென் இட்சா நகர் மெக்சிகோவிலுள்ள யூகேடின் மாநிலத்தில் அமைந்துள்ளது. மெரிடாவிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர்கள் தொலைவில் இது அமைந்துள்ளது.
மாயன் மக்களிடையே பல கடவுள்கள் இருந்தனர். இந்த கோட்டை அவர்களுடைய குவெட்சால்கோட்டில் என அழைக்கப்படும் இந்த குகுல்சான் கடவுளுக்காக கட்டப்பட்டதாகும். இந்த கடவுள் ஒரு பாம்பு !
“குவெல்டால் கோட்டில்” என்பதற்கு “கடவுளின் அருளை பெற்ற ஞானமுடையவன்” என்று அர்த்தம்.
கி.பி 1920 முதல் 1940க்கு இடைப்பட்ட காலத்தில் மெக்சிக அரசு வாஷிங்டனின் கெண்டகி கல்வி நிறுவனத்தின் மூலம் இந்த கோட்டையைப் புதுப்பித்தது. புதுப்பிக்கப்பட்டது என்பதை விட பெரிய அளவிலான மாற்றம் கொண்டுவரப்பட்டது எனலாம்.
இதன் நான்கு பக்கங்களிலும் அகலமான படிக்கட்டுகள் அமைத்து உச்சிக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வடிவத்தின் உள்ளே பழைய பிரமிடு இருக்கிறது. அங்கே மன்னனின் அரண்மனை அமைந்துள்ளது.
வருடத்தின் முன்னூற்றி அறுபத்து ஐந்து நாட்களையும் குறிக்கும் விதத்தில் இந்த பிரமிட் 365 படிகளைக் கொண்டுள்ளது. பக்கத்துக்கு 91 படிகளாக 364 படிகள். கடைசி மேடை ஒரு படி. என மொத்தம் 365 படிகள் என கணக்கிடப்படுகிறது.
முப்பது மீட்டர் உயரமுள்ள இந்த பிரமிடின் குறுக்கு அகலம் 55.3 மீட்டர்களாகும். இதன் உச்சியில் அமைந்துள்ளது மன்னனுக்கான சிறப்புக் கோயிலாகும்.
இந்த மாயன் நாகரீக அடையாளங்கள் பிற்காலத்தின் தோன்றிய போர்களினால் அழிந்து போயிருந்தாலும் சில அடையாளங்கள் இன்னும் அந்த நாகரீகத்தின் சாட்சியாய் நிமிர்ந்து நிற்பது குறிப்பிடத் தக்கது.
இந்த எல் காஸ்டிலோ பிரமிட் கோயில் சீச்சென் இட்சா நகரின் மையத்தில் அமைந்திருப்பதே இந்த கோயிலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
கி.பி 600 களில் சிச்சின் இட்சா மிகவும் செல்வச் செழிப்பில் மிதந்த ஒரு நாடாக இருந்திருக்கிறது. எனவே இது மன்னர்களின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.
கி.பி 987ல் ஏற்பட்ட படையெடுப்புக்குப் பின் மாயன் நாகரீகத்தினரிடையே தொல்டெக் நாகரீகக் கலப்பு ஏற்பட்டிருக்கிறது.
எனவே அதன் பின் சீச்சென் இட்சாவில் நாகரீகக் கலப்பு உருவானது. மாயன் நாகரீகமும் தொல்டெக் நாகரீகமும் கலந்து வெளிப்பட்டன.
கட்டிடம் மொத்தம் ஒன்பது நிலைகளைக் கொண்டுள்ளது. இவை மாயன் நாகரீகத்தின் பாதாள உலகத்தைச் சித்தரிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரமிடின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பதின்மூன்று நிலைகள் மேல் உலகத்தைச் சித்தரிக்கிறது எனவும் அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்.
மாயன் நாகரீகம் மிகவும் செழிப்பான நாகரீகமாக இருந்திருக்கிறது என்பதன் சாட்சியாக நிற்கிறது இந்த கோட்டை. ஆன்மீகம், தத்துவம், கட்டிடக்கலை, கணிதவியல் என பலவிதமான கோட்பாடுகளை உள்ளடக்கி, மாயன் கலாச்சாரத்தை மௌனமாய் இருந்து உரக்கச் சொல்கிறது இது.
இது ஒம்பது அடுக்குகளுடனும், அடுக்குக்கு பதினெட்டு பாகங்களுடனும் அமைந்துள்ளது. இந்த பதினெட்டு என்பது மாயன் நாகரீகத்திலுள்ள 18 மாதங்களைக் குறிக்கிறது.
இந்த கோட்டையின் மேலிருந்து பார்த்தால் மேற்கு பக்கமாக மாயன் காலத்தைய மிகப்பெரிய பந்து அரங்கம் தென்படுகிறது. மாயன் காலத்தைய மிகப்பெரிய அரங்கமாக இது விளங்கியிருக்கிறது.
கோட்டையின் மேல் மாயன் மக்கள் வழிபட்ட மழை கடவுள் சாக் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோட்டைக்கு வடக்கே 285 அடி அகலமுடைய கிணறு ஒன்று காணப்படுகிறது. இதை மாயன் மக்கள் புனித அடையாளமாகக் கொண்டிருந்ததாக கருதப்படுகிறது.
மெக்சிகோ நகரில் அமைந்துள்ள இந்த எல்காஸ்டிலோ உலக அதிசயங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதுவே மாயன் கால மக்களின் திறமைக்கும், அவர்களுடைய அடையாளங்களுக்கும் கிடைத்த உலக அங்கீரமாய் கருதிக் கொள்ளலாம்.
பின் குறிப்பு:
இப்படி எழுதிக் கொண்டிருக்கையில் அனுமதியில்லாமலேயே கனவுக் கதவு திறந்து உள்ளே வந்தாள் அவள். தேவதைகளுக்குச் சாவிகள் தேவையில்லையே.
எல் காஸ்டிலோ பத்தி எழுதறீங்க.. என்னைப் பற்றி எழுதமாட்டீங்களா வந்த தேவதை கொஞ்சியது.
உலக அதியங்கள் எல்லாம்
கல்லால் ஆனவையடி
இல்லையேல்
உன்னைத் தான்
முதலில் சேர்த்திருப்பார்கள்.
என்றேன். தன் மழலை உதடுகளால் முத்தமிட்டு மடியில் அமர்ந்து கொண்டது அந்த மழலை தேவதை. எல் காஸ்டிலோ உயரமிழந்தது.
நன்றி : http://xavi.wordpress.com/2008/04/23/elcastilo/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment