Friday, March 26, 2010

அழகே அழகு

அழகு என்பதும் ”பர்சனாலிடி” என்பதும் முற்றிலும் வேறு வேறு என்று தமிழில் சொல்லமுடியாது.

பர்சனாலிடி என்பது ஆளுமைதான். ஆளுமை என்பது குணாதிசயங்கள்தாம். நல்ல குணாதிசயங்கள் என்பது ஒருவரின் அழகுதானே! அழகு என்றதும் நாம் புற அழகை மட்டுமே நினைக்கத் தேவையில்லை.

ரஜினியைப் பார்த்து உங்க ஸ்டைலே அழகு தலைவா என்கிறோம் - இது புற அழகா?
வைரமுத்துவைப்பார்த்து நீங்கள் பேசுவது பேரழகு என்கிறோம் - இது புற அழகா?
கலைஞரைப்பார்து நீங்கள் அரசியல் செய்யும் அழகே அழகு என்கிறோம் - இது புற அழகா?

அழகு என்ற தமிழ் வார்த்தை மிகவும் விரிந்த பொருளுடையதல்லவா?

கவர்ச்சியும் அழகுதான். கவர்ச்சி என்பது புற அழகால் மட்டுமா வருகிறது? காண்பதற்கு அழகாக இருக்கிறது என்பதும் பழகுவதற்கு அழகாக இருக்கிறது என்பதும் வேறு வேறுதான்.
தமிழில் அழகன் என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் அப்படி நேரடியாய் இருப்பதாய்த் தெரியவில்லை.

அழகிப்போட்டியில் 60 வயது கிழவிகள் ஏன் வருவதில்லை? புற அழகும் இளமையும் அங்கே அழகுக்கான முக்கிய அளவுகோள். அதன் பின்னறே குணாதிசயஙக்ள் ஆளுமைகள் எல்லாம்.

”பெர்சனாலிடி டெவலப்மெண்ட்” என்பது முற்றிலும் வேறு. அங்கே நடை உடை பாவனை மொழியாளுமை என்றெல்லாம் கவனிக்கப்படும். நடை உடை பாவனை அனைத்தையும் அழகாக்குவதே அது செய்யும் காரியமல்லவா?

நிறுவனன் வரவேற்பாளர் வேலைக்கு புற அழகும் தேவை. ஆனால் அது மட்டுமே போதாது. மற்ற அழகுகளும் தேவை.

பிள்ளைகளைக் காப்பது தந்தைக்கழகு. மரியாதை தருவதுதான் மகனுக்கழகு. பிறந்த வீட்டுப் பெருமை காப்பது மகளுக்கழகு என்றெல்லாம் சொல்கிறோமே இங்கே எது அழகு?

”பெர்சனாலிடியில்” உள்ள நேர்மறை குணத்தை அழகு என்றுதானே சொல்லவேண்டும்? அதன் எதிர்மறை குணம்தான் அசிங்கம் அல்லவா?

என் கவிதை ஒன்று அழகு எது என்று ஒரு பார்வை தருகிறது:

முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி அழகு
விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி அழகு
புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி அழகு
நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி அழகு
இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி அழகு
சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி அழகு
கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி அழகு
மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி அழகு
கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி அழகு
கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி அழகு
விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி அழகு
இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி அழகு
கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி அழகு
மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி அழகு




இன்னொரு கவிதை புற அழகை முதன்மையாக்கி பெர்சனாலிடி அழகை உள்ளடக்கி இப்படி வர்ணிக்கிறது:

அழகு என்பது

இனியும்
ஒருமுறையென
விழிமணி இழுப்பதும்

பார்க்கும் பொழுதெலாம்
பூக்கள் பொழிவதும்

மூடிய இமைக்குள்ளும்
ஈரமாய் மிதப்பதும்

முற்றாய் மறந்த நாளொன்றில்
நிலவாய்ப் புலர்வதும்

புலரும் பொற்கணங்களில்
இதழ்முகை அவிழ்ப்பதும்

ஊசிகளாய் இறங்காமல்
உணர்வுகளுக்குள்
ஊற்றுகளாய் எழுவதும்

ஆசைத்திரி தூண்டாமல்
இதயக் கிண்ணியில்
தீபச்சுடர் ஏற்றுவதும்

அழகு அழகு
பேரழகு

நன்றி:http://anbudanbuhari.blogspot.in\ ---------------------------------------------------------------------------------------

No comments: