Sunday, January 9, 2022

இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்

 


அன்பு முக நூல் நண்பர்களே! சகோதர சகோதரிகளே !

எழுத்தாளர் அப்ஸல் அவர்கள் எழுதிய இந்திய சினிமாவில் முஸ்லிம்கள் எனும் நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பெற்ற உணர்வுகளையும் எனக்குள் நிழலாடிய சிந்தனைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஆவலால் உந்தப்பட்டு இந்தப் பதிவை இங்கு ஒரு தொடராக வெளியிடுகிறேன்.

மதிப்புக்குரிய உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக  இதை ஒட்டியும் வெட்டியும் விமர்சன ரீதியாக கருத்து தெரிவிப்பதுடன்  இதில்  நான் சொல்லாமல் விட்ட பயனுள்ள கருத்துகள் தரவுகள் ஏதும் இருப்பின் அவற்றைப் பதிவு செய்தும் பிழைகள் இருந்தால் திருத்திக் கொடுத்தும் நீங்கள்  பங்களிப்புச் செய்தால் நான் பெரிதும் மகிழ்வேன்.

ஹாலிவுட் படங்களில் முஸ்லிம்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த பல அரபு நூல்களை நான் வாசித்துள்ளேன், ஆனால் அவை பெரும்பாலும் அரபு முஸ்லிம்கள் குறித்த ஹாலிவுட்டின் சித்தரிப்பு பற்றியவை.

தமிழகத்தின் முஸ்லிம் அறிவு ஜீவிகளில் ஒருவரும் ஆயிரக்கணக்கான சமூக அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்ற - இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றவருமான  - பிரபல எழுத்தாளர் ஜி. அத்தேஷ் அவர்கள் இந்த விவாதப் பொருளில் சமநிலைச்  சமுதாயம் போன்ற இதழ்களில் எழுதிய சில பல கட்டுரைகளையும் நான் வாசித்துள்ளேன் .

ஆனால், மிகுந்த தரத்துடனும் போதிய தரவுகளோடும் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் கூட, அவை கட்டுரைகளாக மட்டுமே நின்று விட்டதால் இந்த அளவுக்கு விரிவாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போயிற்று.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஆங்கில ஊடக முயற்சியாக, ஓர் ஆங்கில தேசிய இதழாக சுமார் இருபத்தைந்து அல்லது முப்பது  ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து ஒரு சில ஆண்டுகளிலேயே நின்று போன A Ten day Magazine  என்னும் அடைமொழியோடு வெளிவந்த Meantime எனும் மாதம் மும்முறை இதழில் இதழியலாளர் மக்பூல் அஹ்மது சிராஜ் அவர்களால் எழுதப்பட்ட நீண்ட நெடிய  கட்டுரை ஒன்று, இந்தியசினிமாவில் முஸ்லிம்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள்  என்பதையும்

 இந்தப் போக்கு இந்திய சினிமாவில் எப்போதிருந்து தொடங்கியது, இந்தப் போக்கை  இந்திய சினிமாவில் முதன் முதலாகத்  தொடங்கி வைத்த மகானுபவர் யார்  என்பதையும் விளக்கியிருந்தது. அதனையும் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்து உள்வாங்கியுள்ளேன் .

  ஆனால், அந்தக் கட்டுரை இந்தியாவில் தயாரிக்கப்படும் பாலிவுட் திரைப்படங்களைக் குறித்து மட்டுமே பேசியது,

பாலிவுட்டுக்கு அடுத்து இந்திய சினிமாவின் மிக முக்கிய தளமாக விளங்கும் கோலிவுட்டின் திரைப்படங்கள் குறித்து இந்த விவாதப் பொருளில் எதனையும் பதிவு செய்யவில்லை.

ஏதோ காரணத்தால் பெங்களூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்த இந்த அருமையான ஆங்கில இதழ் திடீரென  நின்று போய் விட்டது, கேரள ஜமாஅத்தினர் அந்த இதழை நடத்தி இருந்தால் அது இன்று வரையும் கூட வலிவோடும் பொலிவோடும் வெளிவந்து கொண்டிருந்திருக்கும்.

ஆனால், எழுத்தாளர் அப்ஸல் அவர்களின் இந்நூல் பாலிவுட் கோலிவுட் ஆகிய இரு முக்கிய திரையுலகங்கள் குறித்தும் அவற்றின் முஸ்லிம் ஆதரவு மற்றும் முஸ்லிம் விரோதப் போக்குகள் குறித்தும் மிகத் துல்லியமாகவும் ( with professional accuracy) ஆய்வு ரீதியாகவும் (with a spirit of research) மறுதலிக்க முடியாத தகுந்த தரவுகளுடனும் (with undeniable and  appropriate data) விவாதிக்கிறது.

இந்நூலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்நூல் இந்த  இரு திரையுலகங்களிலும்  வெளிவந்த  முஸ்லிம் வெறுப்பைப் பரப்பும் திரைப் படங்களைப் பற்றி மட்டுமே அலசவில்லை. இவ்விரண்டிலும் முஸ்லிம் வெறுப்புப் போக்கு தொடங்குவதற்கு  முன்பும் அதற்குப் பின்பும் தயாரிக்கப்பட்ட முஸ்லிம்களின் நற்குணம் மற்றும் மனித நேயத்தை எடுத்துரைக்கும் திரைப் படங்களைக் குறித்தும் பேசியுள்ளார்,

உருப்படியான,  குறிக்கோள் பூர்வமான விமர்சனம் அல்லது திறனாய்வு (

Objective Criticism)என்பது இப்படித்தான் இருக்கவேண்டும். தரம் வாய்ந்த ஓர் எழுத்தாளர் இப்படித்தான் எழுத வேண்டும், எழுத முடியும். வெறும் குறைகளைப் பற்றி மட்டுமே பேசினால் அதன்  பெயர் திறனாய்வு அல்ல. அதன் பெயர் குறைகண்டுபிடித்தல் (Fault Finding) ஆகும்.

அது மட்டுமல்ல, மிகப்  பிரபலமான கதாநாயகர் ஒருவர் , தமது நண்பர்களான  முஸ்லிம் தயாரிப்பாளர்கள், முஸ்லிம் கதைவசன கர்த்தாக்கள் மற்றும் தமது  முஸ்லிம் ரசிகர்கள் மூலம் திரைத்துறையில் உச்சத்தை எட்டிப் பெரும் புகழும் ஈட்டியவர் , பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கடுமையாகக் கண்டித்து பத்திரிகைக்கு பேட்டி அளித்தவர்,   முஸ்லிம்களின் மனித நேயத்தை முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு நல்ல அம்சங்களை வெகுஜன மக்களிடையே தமது பல்வேறு திரைப்படங்கள் வழியாக வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தவர்- ( இன்று உடல் நலமின்றி வாடிக் கொண்டிருக்கும் திரு விஜயகாந்த் அவர்கள் ,எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு முழு உடல்நலத்தையும் மன நலத்தையும் வழங்குவானாக! நேர்வழியின் வெளிச்சத்தை நல்குவானாக!)   ஒரு கால கட்டத்திற்குப் பிறகு எப்படி ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கி  முஸ்லிம்களை தேச விரோதிகளாக , பயங்கர வாதிகளாக தமது திரைப் படங்களில் தொடர்ச்சியாக சித்தரிக்கலானார் என்பதையும்  அவரது இருவகைத் திரைப்படங்களையும் வரிசைப் படுத்தி விலாவாரியாக எழுதியுள்ளார் .

இப்படி இந்த நூலின் இன்னும் நிறைய சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் . இனி அவற்றை நாளைய பதிவில் பார்ப்போம்.



அன்பன் காஞ்சி அப்துல் ரவூப் பாகவி

புத்தகம் வாங்க :

கோதை பதிப்பகம்! திருச்சி.

90808 70936

No comments: