Saturday, July 27, 2019

குறையொன்றுமில்லை


( மண்ணில் மலர்ந்த மகத்தான சிறாப்புக் குழ்ந்தைகளுக்கு சமர்ப்பணம் ........)


------ ஆக்கம் : கவிஞர் காயல் முஸ்தாக் அஹமது   ---



ஒளி சிந்தி உருளும் குறைமதியென்றும்
வானுக்கு பாரமில்லை
மணம் சிந்திச் சிதறும் மலர்களென்றும்
மண்ணுக்குப் பாரமில்லை ..

பிறப்போடு குறைகள், வளர்ப்பதோடு கண்டு
மருத்துவம் அளித்திருந்தால் - நாங்கள்
சிறப்பான குழந்தைகளே - துயரம்
எங்களின் தூரங்களே..


கண்ணீர் தவிர்த்து, கரங்கள் கோர்த்தால்
யாருக்கும் பாரமில்லை - நாங்கள்
உறவுக்கும் தூரமில்லை

ஒளி சிந்தி உருளும் குறைமதியென்றும்
வானுக்கு பாரமில்லை
மணம் சிந்திச் சிதறும் மலர்களென்றும்
மண்ணுக்குப் பாரமில்லை ..

நேற்றுப் பின்னிரவில்
காற்று சொன்ன சேதி
பாட்டில் சொல்லிடவா...


வாட்டும் வலிகளெல்லாம்
வாழும் வழிகளென்ற-ஞானம்
சொல்லிடவா-இன்னும்
வாழச்சொல்லிடவா..

ஒளி சிந்தி உருளும் குறைமதியென்றும்
வானுக்கு பாரமில்லை
மணம் சிந்திச் சிதறும் மலர்களென்றும்
மண்ணுக்குப் பாரமில்லை ..

அன்பான அன்னை, அறிவான தந்தை
எங்கள் உயிரல்லவா...?
அழகான சுற்றம், அருளான அன்பு
எங்கள் உறவல்லவா...?

வேண்டும் என்றா இப்பிறவி கேட்டோம்
இறைவன் அருளல்லவா-நாங்கள்
சுவன மலரல்லவா...

ஒளி சிந்தி உருளும் குறைமதியென்றும்
வானுக்கு பாரமில்லை
மணம் சிந்திச் சிதறும் மலர்களென்றும்
மண்ணுக்குப் பாரமில்லை ..

வளர்ந்த உடல்கள், வளரும் உணர்வுகள்
சொல்லத் தெரியவில்லை
வாழும் ஆசைகள் வாகாய்ச் சொல்லிட
மொழிகள் ஏதுமில்லை-எங்கள்
கவலை தீரவில்லை...

ஒளி சிந்தி உருளும் குறைமதியென்றும்
வானுக்கு பாரமில்லை
மணம் சிந்திச் சிதறும் மலர்களென்றும்
மண்ணுக்குப் பாரமில்லை ..

உடல் மொழி கண்டு, உளமொழி கேட்டு
உலகம் திறந்திடுங்கள்-எங்கள்
உலகில் சேர்ந்திடுங்கள்...

எங்கள் வலியின் மொழியறிந்த
அசைவின் பொருளறிந்த
ஆங்கொரு கூடம் உண்டு - அங்கே
இரண்டாம் தாயாய் இதயம் தழுவிடும்
அன்பின் கூட்டமுண்டு...


ஒளி சிந்தி உருளும் குறைமதியென்றும்
வானுக்கு பாரமில்லை
மணம் சிந்திச் சிதறும் மலர்களென்றும்
மண்ணுக்குப் பாரமில்லை ..

நன்றி :
இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு மாத இதழ்
ஜூலை 2019

No comments: