Friday, June 14, 2019

இது கதையல்ல... நிஜம்


3 மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராகிய
துப்புரவு பெண் தொழிலாளி

30 ஆண்டுகள் வெளிவராத ரகசியம் பிரிவு உபச்சாரத்தில் ஊருக்கு தெரிந்தது

ஜார்க்கண்ட், ராஜ்புரா நகராட்சியில்
பார்வையாளர்களை நெகிழ வைத்த சம்பவம்

ராஜ்புரா, ஜூன். 10–

இது கதையல்ல நிஜம்... என்று சொல்ல வைத்திருக்கும் ஒரு சம்பவம். இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் விடுவார்கள். இப்படியும் ஒரு தாயா என்று ஆச்சரியக் கேள்வி எழுப்பி விழி ஓரம் திரளும் ஆனந்தக் கண்ணீரை துடைத்து மானசீகமாக அந்த தாயை வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.


அந்தத் தாய் சாதாரண துப்புரவு தொழிலாளி தான். இருந்தாலும் மூன்று மகன்களில் ஒருவனை மாவட்ட கலெக்டராகவும் இன்னொருவனை ரெயில்வே என்ஜினீயராகவும் மூன்றாமவனை டாக்டராகவும் உருவாக்கி சமுதாயத்தில் ரோல் மாடலாக உருவாக்கி இருக்கிறார் ... என்றால் அந்தத் தாய், ஊரும் உலகமும் பேசப்பட வேண்டிய தாய் என்றால் அதை ஏற்க மறுப்பவர்கள் யார் இருக்கிறார்கள்?

தாய்க்குலமே ஏன் தந்தை குலமும் தான் – பெருமையும் மகிழ்ச்சியும் அடையக்கூடிய அந்தப் பெண் – சுமித்ராதேவி. 60 வயது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஜபுரா நகராட்சியில் பெண் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்தவர். நடந்த பிரிவு உபச்சார விழாவில் அதாவது பணி நிறைவு பாராட்டு விழாவில் தான், கடந்த 30 ஆண்டுகளாக வெளி உலகத்திற்கு தெரியாமல் ரகசியமாக இருந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

மேடையில் பாராட்டு விழா நடைபெறும் 30 நிமிடத்திற்கு முன்பு வரை அவர் மாவட்ட கலெக்டர், என்ஜினியர் டாக்டர் ... இப்படி உயர்ந்த பொறுப்பில் இருக்கும் மகன்களின் தாய் என்று தெரியாது. அது தெரிந்ததும், அரங்கில் திரண்டிருந்த சக ஊழியர்களும், பார்வையாளர்களும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்கள்.

சுமித்ரா தேவிக்கு பாராட்டு விழாவை நகராட்சி நிர்வாகமும், சக ஊழியர்களும் இணைந்து நடத்தினார்கள். விழா தொடங்குவதற்கு அரை மணி நேரம் இருக்கும்போது, சைரன் ஒலிக்க ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பீகார் மாநிலம் சிவாஞ்சலி மாவட்டத்தின் கலெக்டர் மகேந்திரகுமார் இறங்கினார். அவரை அங்கு இருந்தவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு காரில் ரெயில்வே என்ஜினியரிங் வந்து இறங்கினார். அடுத்து டாக்டர் வந்திறங்கினார். அவர்களையும் விழா அமைப்பாளர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று மேடையில் அமர்த்தினார்கள். ஒரே நேரத்தில் கலெக்டர் டாக்டர், ரெயில்வே பணியாளர் விழாவிற்கு வந்திருப்பதைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு அமர்ந்திருந்தார்கள்.

‘‘30 ஆண்டுகள் சுமித்ராதேவி பணிபுரிந்து இருக்கிறார்; கடமையில் அர்ப்பணிப்போடு இருந்திருக்கிறார்; எந்த ஒரு புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவரைப் போல ஒரு தொழிலாளி கிடைப்பது என்பது அபூர்வம்’’ என்று நகராட்சி நிர்வாகிகள் மனம் திறந்து பாராட்டினார்

கலெக்டர் மகேந்திரகுமார் பேச்சைத் துவக்கினார். கடந்த 30 ஆண்டுகளாக ஒரு பெண்மணி, அதுவும் ஒரு பெண் துப்புரவு தொழிலாளி தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம், அதில் கிடைத்த சொற்ப சம்பளத்தை வைத்து குடும்பத்தையும் நடத்திக் கொண்டு சமுதாயத்தில் 3 பேரை உயர்த்தி உயர்ந்த பொறுப்பில் அமர வைத்து இருப்பது என்பது மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்கு உரியது’ என்று குறிப்பிட்டார்

இப்படி அவர் பீடிகையோடு துவக்கிய பேச்சைக் பார்வையாளர்கள் கூட்டம் உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தது. அவர் தொடர்ந்து பேசுகையில், தான் ஒரு துப்புரவு தொழிலாளியாக இருந்தாலும் கொடுத்த பணியை நேசித்து நேசித்து செய்தார் கடமை உணர்வோடு பணியாற்றினார். தன்னுடைய சவுகரியத்தை எல்லாம் குறைத்துக்கொண்டு, படிப்பு ஒன்றே குறியாக இருக்க வேண்டும் என்றும் மகன்களை படிக்க வைத்தார். சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒரு வைராக்கிய வெறியுடன் இறங்கினார். அவளின் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் குறை வைக்காமல் 3 பேரும் படித்தார்கள். வாழ்க்கையில் உயர்ந்தார்கள். அவர்களை உயர்ந்த இடத்தில் உட்கார வைத்தார். அவர்கள் தான் நாங்கள்’’ என்று தொடர்ந்து பேசிய நிறுத்தியபோது அரங்கில் பலத்த கைதட்டல் எழுந்தது.

இதுவரை வெளி உலகத்திற்கு 30 ஆண்டுகளாக வராத ஒரு ரகசியத்தை உண்மையை உங்களிடம் சொல்கிறேன் அந்தக் கலெக்டர் நான்தான், ரெயில்வே பொறியாளர் இவன். டாக்டர் இவன்... பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அடுத்த நிமிடம் மூன்று பேரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து எழுந்து நின்று, இந்த சபைக்கு அந்த உண்மையை சொல்கிறோம். ‘‘அந்தத் தாயின் மகன்கள் தான் நாங்கள்’’ என்று சொன்னதும் அரங்கமே உணர்ச்சிப் பிழம்பாய் மாறியது. பார்வையாளர்களின் விழியோரம் ஆனந்தக் கண்ணீர். அத்தனை பேரும் அசந்து போனார்கள். எழுந்த கைதட்டல் அடங்குவதற்கு 120 வினாடிகள் பிடித்தது.

செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து செயல்பட்வள் தான் எங்கள் தாய். துப்புரவுத் தொழிலாளி என்றாலும் அது தரக்குறைவான பணி என்று உதறித்தள்ளவில்லை. எங்களிடம் அந்த வேலையைப் பற்றி சொன்னதும் நாங்களும் அவளை வேலையிலிருந்து விலக்கவில்லை. விடு என்று வற்புறுத்தவில்லை. அவளும் வேலையை தொடர்ந்தார் எங்களை படிக்க வைத்தாள். நாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம். அவர் வாழ்க்கையில் எத்தனையோ தியாகங்களை செய்து எங்களைக் கரையேற்றி இருக்கிறார்ள். அவள், எங்கள் பார்வையில் வெறும் தாய் அல்ல – உண்மையிலேயே தெய்வத்தாய் ...’ என்று சொல்லி நிறுத்தியபோது பார்வையாளர்கள் மீண்டும் (எழுந்து ஸ்டாண்டிங் ஓவேஷன் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

தனக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் அவர்கள் மூவருமே உயர் பொறுப்பில் அந்தஸ்தில் இருக்கிறார்கள் என்பதை வெளி உலகத்திற்கு ஏன் உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்குக் கூட சொல்லாமல் கடமையில் அர்ப்பணிப்பாய் இருந்து குடும்பத்தை கரையேற்றி இருக்கும் சுமித்திரா தேவியினுடைய அந்த எளிமையை, பண்பை, பாசத்தின் எச்சத்தை கேட்டு ஒட்டுமொத்த அரங்கமே மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியில் திளைத்தது.

நல்ல உத்யோகத்தில் கணவன் – மனைவி இருந்தும் ஒரு குழந்தையை பெற்று அவர்களைப் படிக்க வைப்பதற்குள் விழிபிதுங்கவிடும் காலக்கட்டத்தில்.. செய்யும் வேலை... இன்னதென்று கண்டு இகழ்ந்து கொண்டிருக்காமல், தொழிலை மதித்து, குடும்பத்தை உயர்த்திய தாய் சுபத்ரா தேவி, மாதர்குல மாணிக்கம் என்று பாராட்டி சொன்னால்... இதையும் இல்லை என்று யார் தான் மறுக்கப் போகிறார்கள்?


https://www.indiatimes.com/news/here-is-inspiring-story-of-sumitra-devi-a-cleaner-who-made-her-sons-top-officer-including-an-ias-officer-264837.html

No comments: