Sunday, July 1, 2018

ஒரு தந்தையாக இப்படித்தான் இருக்க வேண்டும்

எங்கள் வாப்பா...!

ஏ.கே.ரிபாய் சாஹிப் எங்கள் தந்தையார்.

ஒரு தந்தையாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு வாப்பாவிடம் ஏராளமான
முன்மாதிரிகள் இருக்கின்றன.

ஒரு தந்தையாக இப்படி இருக்கக் கூடாதோ...? என்பதற்கும் எக்கச் சக்கத் தகவல்கள் பொதிந்திருக்கின்றன.

நாங்கள் சகோதரர்கள் ஐவர்.
முந்திய நல்வரும் சுமார் இரண்டாண்டு இடை வெளியில் பிறந்தவர்கள். கடைக் குட்டி எனக்கே பத்து வயது இளையவன்.

எங்கள் தாய் தந்தையருக்குப் பிள்ளையாகப் பிறக்கத் துவங்கிய முதல் பிள்ளை
பெண் பிள்ளை.
இரண்டாண்டுகள் வாழ்க்கைதான் அவருக்கு இறைவன் வழங்கியயருள்.

அடுத்து நான்கு ஆண்கள். அவரில் நான்காவது நான்.


எனக்குப் பின் இருபெண்கள். பிறந்த போதே மண்ணுலகைப் பிரிந்து போய்விட்டார்கள். கடைசி என் தம்பி . இடைவெளி பத்தாண்டுகள்
கணக்குச்சரி.

நாங்கள் நான்கு பேருமே எங்கள் வாழ்வு மொத்தமும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள்தாம் ஒன்றாக
வாப்பா அம்மாவோடு தங்கிப் படித்தவர்கள்.

பள்ளிக் காலத்தில் எங்கள் பிராக்கிரஸ் ரிப்போர்ட்டை (பிள்ளியில் அந்தக் காலத்தில் தரப்படும் மதிப்பெண் பட்டியல்) எங்கள் வாப்பா பார்த்ததே கிடையாது.

நாங்கள் காட்டியது கிடையாது.

ஆனால் அந்தப் பிராக்கிரஸ் ரிப்போட்டில் தந்தையார் கையொப்பம் சரியாக இருக்கும்.

எங்கள் வாப்பாதானே கையொழுத்தைச் சரியாகப் போட்டுக் கொள்வோம்.

அம்மா ஒருமுறை வாப்பாவிடம் கேட்டார்கள். "நீங்க பி.ஏ. படிச்சவங்கதான.பிராக்கிரஸ் ரிப்போர்ட் பள்ளியில் தருவாங்களே. அதை பிள்ளைங்கள்ட் கேக்க மாட்டீங்களா?" என்று.

"மார்க் வாங்கியிருந்தால்
முந்திக்கிட்டு வந்து காட்ட மாட்டான்களா? எல்லாம் பெயில் மார்க். அதான். காட்டலே. அவன்களே என் கையெழுத்தப் போட்டிருப்பான்கள்" என வாப்பா சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

எங்களுக்குச் சட்டை டவுசரே ஒழுங்காக இராது.

சட்டையிலே பட்டன் இல்லை. விழுந்துவிட்டதென்று அம்மா நூலால் தைத்தனுப்பிய கதையும் உண்டு.

டவுசரில் பின்பக்கத்தில்
கிழிசலை மறைக்க அம்மா தையல் அலங்காரம் இல்லாத டவுசரே இருக்காது.

வாப்பாவே தன் சட்டைக் கழுத்துப் பட்டையில் உள்ள தையல் பிரிவைச் சரி செய்ய அம்மாவிடம்
தையலுக்குத் தருவதுமுண்டு.

அம்மாவும் பாவம். மூன்று சேலை ஜாக்கெட்டுகளுக்கு மேல்
ஒரே நேரத்தில் அலமாரியில் வைத்ததில்லை.

இதற்கெல்லாம் வறுமையா காரணம்.?
இல்லவே யில்லை.

தேவைக்கு அதிகமாகவே இறைவன் வழங்கி அருளிய செல்வக் குடும்பந்தான் எங்கள் குடும்பம்.

அப்படியானால் கஞ்சத்தனமா காரணம்?
அதுவும் இல்லை.

வாப்பாவிடம் பரம்பரைச் சொத்துப் பணம் வரும்.
இது என்னாகும் தெரியாது. வாப்பாவிடமும் பணமிருக்காது. எந்தத் தவறிய வாழ்வும் துளியும் கிடையாது.

என்னதான் நடக்கும் இதுவரை எங்களுக்கு விளங்காத ரகசியம்தான்.

நாங்கள் நண்பர்கள் என்று எத்தனை நபர்களையும் வீட்டுக்குச் சாப்பிடக் கூட்டிவரலாம்.
சிறிதும் கண்டிப்பில்லாமல் சமையலுக்கு ஏற்பாடு வீட்டில் நடந்துவிடும்.

தென்காசியில் பரதன் பாக்கிய லட்சுமி என இரண்டு சினிமாத் தியேட்டர்கள் அப்போது உண்டு.

மாதத்திற்கு ஒருபடம் பார்க்க எங்களுக்கு அனுமதி உண்டு.

ஒரு நபருக்கு 25 பைசாக்கள் வழங்கப்படும். தரை டிக்கட் 21 பைசா.மீதி 3 பைசா இடைவெளி விட்டபின் முறுக்குக்கு. அவ்வளவுதான்.

ஆனால் இவையெல்லாவற்றிலும்
எங்கள் பெரிய வாப்பா, மாமி பிள்ளைகள் மிகத் தாராளம்.

எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.?

எங்கள் பெரிவாப்பா, மாமி பிள்ளைகளுக்குப் படிப்பதில் எவ்வளவு வசதிகள்? ஆடைகளில் எத்தனை விதங்கள்.

சரி. எங்கள் ஒருவரைத் தவிர நாங்கள் அனைவரும் பட்டதாரிகள். ஒருவர் எங்கள் எஸ்டேட் வரவு செலவுகளைத் தோட்ட வயல்களைக் கண்காணிக்கத் தொடங்கி விட்டார்.
படிப்பில் அவருக்கு நாட்டமில்லை. முதலாளியாகிவிட்டார்.

நாங்கள் பட்டம் பெற்றதால் வாப்பா பெருமைப் பட்டுக் கொள்ளவும் இல்லை.
படிக்காததைப் பற்றிச் சிறிதும் கவலைப் பட்டதுமில்லை.

சம நிலைதான்.
படிப்புக்கு வாப்பா வழி காட்டலுமில்லை.

எங்கள் திருமணங்களையும் வாப்பா கட்டாயப்படுத்தவும்
தேர்ந்தெடுக்கவும் இல்லை.

"அவர்கள் விருப்பம் அவர்கள் தேர்வு. ஆனால் மார்க்கம் கட்டாயம்.
ஏற்றத் தாழ்வு இவை பற்றி அக்கறை கிடையாது.
இதுதான் வாப்பா.

நான் சகோதரச் சமூகப்பெண்ணைத் திருமணம் செய்தேன்.
குடும்பத்தில் பலருக்கு விருப்பம் இல்லை.

வாப்பாவுக்கு என் தம்பியிடம் கடிதம் கொடுதனுப்பிச் சம்மதம் கேட்டிருந்தேன்.

நாகூர் கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ்வை அழைத்து,
"என்னப்பா ஒன் கூட்டாளி அவன் கல்யாணத்துக்குச் செய்தி அனுப்பியிருக்கான்.

சரி .செய்யச் சொல்.
அவனே பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் வந்து கண்டிப்பாக கலந்து கொள்வேன்.

ஆனால் தனித்தனி மார்க்கத்தில்
அவர்கள் இருந்தால் நான் வரமாட்டேன்.
தெளிவாச் சொல்லிரு" என வாப்பா சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

அழைப்பிதழில் அழைப்பவர் பெயரில் வாப்பா பெயரைப் போட்டுவிட்டேன்.

அவ்வண்ணம் என்பதின் கீழ் என் மனைவியின் தந்தைப் பெயரைப் போடவேண்டும். அவர் சகோதரச் சமூகத்தவர்.அவர் பெயர் எப்படிப் போட?
இது என் தயக்கம்.

வாப்பா பெயரையும் இணைத்துப் போட வாப்பா சம்மதிப்பார்களா?
குப்பம்.

வாப்பாவிடமே கவிஞர் தா.காசிம் வழியாகக் கேட்டேன்.

வாப்பா இவ்வளவுதான் சொன்னார்கள்.
"இவனுக்கு வாப்பா இருக்கிறார். அவருக்குப் பெயர் இருக்கிறது.
அதுபோலத்தானே அவளுக்கும் அப்பா இருப்பார்.அவருக்கும் பெயர் இருக்கும் .அதைப் போட ஏன்டா(கவிஞரை அப்படி அழைப்பார்.) அனுமதி கேட்கிறான்?"இதுதான் வாப்பா பதில்.

அழைப்பிதழ் அப்படித்தான் வெளிவந்தது. என் சொந்த அச்சகத்தில் அச்சேறியிருந்தது.

அன்றைய பழைய எண் 8 மரைக்காயர் லெப்பைத் தெரு முஸ்லிம் லீக் மாநிலத் தலைமை நிலையத்தில் என் திருமணம் நடந்தது .

கவிஞர் தா. காசிம்தான் மணப்பெண்
தந்தை இடத்திலிருந்து வலியாகச் சாட்சிக் கையொப்பம் இட்டார்.
வாப்பா இன்னும் குடும்பத்தார்கள் இருபக்கமும் கலந்து கொண்டார்கள்.

இதுதான் எங்கள் வாப்பா.
எங்களுக்குக் கிடைத்த இறையருள்.

Hilal Musthafa

No comments: