Tuesday, April 11, 2017

விவசாயிகள் போராட்டம் குறித்து இன்பாக்சில் கேள்வி மேல் கேள்விகள்.

Shahjahan R
போனீர்களா... பார்த்தீர்களா... தடியடியாமே... எப்போது முடிவு வரும்... என்னதான் நடக்கும்... வெற்றி கிடைக்குமா... அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே....
சுமார் ஒரு மாத காலமாக தலைநகரில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரத்துக்காகப் போராடுகிறார்கள், ஆடிகார் அய்யாக்கண்ணு என்று ஒரேயடியாக ஒதுக்குவது எவ்வளவு தவறோ, அதே அளவுக்குத் தவறு - கோரிக்கைகள் அனைத்தும் சரியானவை என்பதும்.
கோரிக்கைகள் குறித்து எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, நதிநீர் இணைப்பு.
இருக்கட்டும். இப்போது அது விஷயமில்லை.

இதற்கு முன் மூன்று முறை சென்று சந்தித்து வந்தேன். (ஒரு முறை குடும்பத்தினருடனும்.) உணவு விஷயத்தில் உதவிகள் ஏதும் தேவையா என்று விசாரித்தேன். ஆதரவு போதும் என்றார் அய்யாக்கண்ணு. “அவர் எதுவும் கேட்க மாட்டார், நாமாகத்தான் கொடுக்க வேண்டும்” என்றார் ஒருவர்.
“சரி, தேவை என்ன என்று சொன்னால்தானே ஏற்பாடு செய்யலாம்?” என்றேன்.
இரவில் இருட்டாக இருக்கும் என்பதால், எமர்ஜென்சி லைட் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார் ஒருவர். அடுத்த நாளே இரண்டு எமர்ஜென்சி விளக்குகள் வாங்கிக் கொடுத்தேன்.
செல்போன் டாக்டைம் ரீசார்ஜ் செய்யச் சொல்லி அவ்வப்போது வேண்டுகோள்கள் வரும். வீட்டில் இருந்தபடியே செய்து கொண்டிருக்கிறேன்.
மாற்றுத்துணியாக சிலருக்கு பச்சை வேட்டி, துண்டு இல்லை என்பதால் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார்கள். சில கடைகளுக்கு அலைந்த பிறகு இங்கே பச்சை வேட்டி கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்பது தெளிவானது. எனவே, கதர் கடைக்கு அழைத்துச் சென்று, 2000 ரூபாய்க்கு மீட்டர் கணக்கில் துணி வாங்கி துவாலைகளாகக் கிழித்து அவர்களுக்குக் கொடுத்தேன்.
பேஸ்புக் தோழி Geetha Shanker தன் பங்காகவும் தன் நண்பர்கள் வாயிலாகவும் 7500 ரூபாய் அனுப்பி வைத்தார். அது தவிர, அவ்வப்போது ஏதாவது தேவையா என்று 15 நாட்களாக கேட்டுக் கொண்டே இருந்தார். அவர்களுடைய இப்போதைய தேவை வேட்டி துண்டு என்று சொன்னேன்.
நேற்று சென்னையிலிருந்து 30 வேட்டிகள், 30 துண்டுகள் வாங்கி, விமானத்தில் இன்று தில்லி வந்த தன் நண்பர் மூலம் அனுப்பி வைத்தார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க இருந்த நண்பர்தான் அந்த 15-20 கிலோ பண்டலை சுமந்து வந்தார். (Srinivasan Sundar) மதியம் ஹோட்டல் வாசலில் அவரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு வந்து, இன்று மாலை அய்யாக்கண்ணுவை சந்தித்து ஒப்படைத்து விட்டேன்.
இதன் நினைவாக ஒரு துவாலை மட்டும் எனக்கு நீங்களே கொடுங்கள் என்று அவரிடமே கேட்டு வாங்கி படமும் எடுத்துக் கொண்டேன். (கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது.)
(ராம்ராஜ் வேட்டியும் துண்டும் சுமார் 400 ரூபாய். 30 ஜதைகளுக்கு சுமார் 12 ஆயிரம் ரூபாய். பணம் யார் கொடுத்தார்கள் என்று தோழி சொல்லவில்லை.)
போராட்டத்தில் இருக்கிற ஒரு விவசாயி சென்னை சென்றிருக்கிறார். மதியம் தொலைபேசினார். வேட்டி துண்டு வந்து விட்டதா என்று கேட்டார். 30 வந்து விட்டது, உங்களால் முடியுமானால் 20 ஜதை வாங்கி வாருங்கள். நீங்கள் இங்கே வந்ததும் பணம் தருகிறேன் என்றேன். நாளை சென்னையிலிருந்து ரயிலில் புறப்படுகிறார். வந்த பிறகு அழையுங்கள், நானே வந்து பணம் தருகிறேன் என்று சொல்லிவிட்டேன். (எழுதி முடிக்கும் இந்த நேரத்தில் மறுபடி போன் வந்தது. 25 ஜதை வாங்கிவிட்டதாகச் சொன்னார்.)
இன்று நிர்வாணப் போராட்டம் பற்றிய செய்திகள் அறிந்தேன். நாளை பெண்களை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபடுத்த இருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் ஊடகத்தினர் / நண்பர்கள் அறிவுரை காரணமாக, அந்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார் அய்யாக்கண்ணு. பெருத்த நிம்மதி.
எல்லாக் கோரிக்கைகளும் நிறைவேற்ற முடியாததாக இருக்கலாம்தான். ஆனால், உத்திரப் பிரதேசத்தில் செய்ததுபோல, குறிப்பிட்ட வரம்புக்குள்ளான விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்கிறோம் என்று அரசு சொல்லலாம். உத்திரப் பிரதேசத்தில் செய்ய முடிகிற விஷயத்தை தமிழ்நாட்டுக்கு ஏன் செய்ய முடியாது என்று கேட்டால் நான் தேசவிரோதி ஆகிவிடுவேன்!
பிரதமரை சந்திக்க நேரம் தருவதாக இரண்டு நாட்களாக சொல்லப்பட்டிருந்தது. இன்று பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவில் குடியிருக்கிறாரோ இல்லையோ, சமூக வலைதளத்திலேயே குடியிருக்கிற பிரதமருக்கு போராட்டத்தின் தகவல்கள் எட்டாமலிருக்க முடியாது. ஆனால் அவர்களை சந்திக்கவோ, குறைகளைக் கேட்கவோ அவருக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.
கொஞ்ச நாள் இப்படியே கத்திட்டிருப்பாங்க. அப்புறம் சலிச்சுப்போயி அவங்களாவே நிறுத்திடுவாங்க. இல்லாட்டியும், இன்னும் ஒரு வாரம் போகட்டும். இதுவரைக்கும் எல்லா கட்சிக் காரங்களும், எல்லா விவசாய சங்கத்திலிருந்தும் வந்துட்டுப் போயாச்சு. இனியும் வர்றதுக்கு ஆட்கள் இல்லை. இப்படியே இன்னும் ஒரு வாரம் போனா மீடியா கவனமும் குறைஞ்சு போயிடும். இன்னும் கொஞ்சம் வீக் ஆயிடுவாங்க. அப்புறமா பேசினா போதும், அல்லது அப்புறமா புடிச்சுத் தூக்கி உள்ளே போட்டா போதும் என்று நினைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
தான் யாருக்கான பிரதமர் என்பதை அவர் அடிக்கடி தெளிவாகக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். அவருக்கேற்ப தமிழ்நாட்டுக்கு வாய்த்திருக்கிறது சொல்லத் தரமற்ற ஓர் அரசு.
இன்று ஆஸ்திரேலியப் பிரதமர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். நம் பிரதமர் அவரை அழைத்துக் கொண்டு அக்ஷர்தாம் கோவிலுக்குச் சென்றார். ஆஸ்திரேலியா விரைவில் யுரேனியம் சப்ளை செய்யும் என்று உறுதியளித்திருக்கிறார். பிறகென்ன, எல்லாரும் யுரேனியம் சாப்பிடலாம்.
(ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் சென்றிருந்த ஈஷா மையம் எப்படி கோவையில் அங்கீகாரம் இல்லாமல் வனப்பகுதிகளை ஆக்கிரமித்ததோ, அதேபோல கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லாத யமுனைக் கரையில் ஆக்கிரமித்து பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது லட்சுமி நாராயணன் கோவில் எனப்படும் அக்ஷர்தாம் கோயில். ஒரே ஒரு வித்தியாசம் — இதன் மீதான வழக்குகளை எல்லாம் ஒரேயடியாக முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். ஆமாம், கட்டியது கட்டியாயிற்று, இருந்து விட்டுப் போகட்டும் என்று பெரிய மனது பண்ணி அனுமதித்து விட்டது.)
என்ன நடக்கும்... ஏதாவது நடக்குமா... விவசாயிகளுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா...? ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
(ஒரு நேர உணவு சரவண பவனிலிருந்து வருவதாகத் தகவல். இரவு உணவுக்கு தில்லிவாசிகள் உதவி வருகிறார்கள். உணவு ஏற்பாடு செய்பவரிடம், எப்போது தேவை என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன். வேண்டுகோள் வந்தால் உங்களிடம் வேண்டுகோளுடன் வருவேன்.)
போராட்டமே வாழ்க்கை யாச்சு நீரோட்டம் போலே
ஆற்று நீரோட்டம் போலே...
சோளப் பொரி கிடைச்சது யானைப் பசிக்கு தேரோட்டம் போலே
வருசமொரு தேரோட்டம் போலே...

Shahjahan R

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails