Saturday, February 25, 2017

மனித உள்ளங்களை வெல்வதே நல்லிணக்கம்:

பிற மதத்தவர்களின் உள்ளங்களை காயப்படுத்தாமல், அவர்களுடன் உறவாடி, அவர்களின் உள்ளங்களை குளிர்படுத்தி வெல்வதே சமூக நல்லிணக்கம்:
ஒருவர் தமது மதத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு உரிய உரிமைகளை அளித்து சமூக நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாப்பது ஒரு முஸ்லிமின் கடமை என இஸ்லாம் மார்க்கம் அன்பு உத்தரவு போடுகிறது.
இஸ்லாம் வகுத்தளித்துள்ள கடமைகளில், பல் சமய நல்லிணக்கமும் ஒன்று. இதை பயபக்தியுடன் கடைப்பிடித்தாக வேண்டிய கடமை உணர்வு அனைத்து முஸ்லிம்களுக்கும் உண்டு. பல்சமய நல்லிணக்கத்தை, மனிதநேயக் கோட்பாடாகவும், மார்க்கக் கோட்பாடாகவும் இஸ்லாம் விதித்துள்ளது.
உலகில் இஸ்லாம் வழங்கிய மதஉரிமைகள், மதச்சுதந்திரங்கள் மற்றும் மதச்சகிப்புதன்மை போன்றவை அதிகமாகும். பல்சமய நல்லிணக்கத்தை, மற்ற மதங்களைவிட மிக அதிகமாக இஸ்லாம் பேணிப் பாதுகாத்து வருகிறது.
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக பின்பற்றும் ஒரு முஸ்லிம் மற்ற மதங்களையோ, அந்த மதங்களின் கடவுளையோ, அந்த மதங்களின் வழிபாட்டு தலங்களையோ இழிவாக பேசுவதையும், கேவலமாக நினைப்பதையும் இஸ்லாம் தடை செய்கிறது. மேலும் அந்த செயலை வன்மையாகவும் கண்டிக்கிறது.

ஆரம்பத்தில் ஓரிறையை மறுப்பவர்கள் வணங்கி வந்த சிலைகளை இஸ்லாமியர்கள் கொச்சைப்படுத்தி வந்தார்கள். ஓரிறையை மறுப்பவர்களும் பதிலுக்குப் பதிலாக செயல்பட்டனர். இத்தகைய மதப்பூசல்கள் வெடித்து சிதற ஆரம்பித்தது.
அப்போது மதப்பூசல்களை தலை தூக்கிவிடாமல் பல்சமய நல்லிணக்கத்தை இஸ்லாம் ஏற்படுத்தி மகத்தான ஒரு சாதனையை படைத்தது.
ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மதச் சுதந்திரத்தையும், மதச்சகிப்புத் தன்மையையும், பிற மத உரிமைகளையும் நிலை நாட்ட பின்வருமாறு இஸ்லாம் குரல்கொடுக்கிறது.
‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்ட£தீர்கள் அப்படித் திட்டினால் அவர்களும் ஞானமில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். பின்பு அவர்களுடைய மீட்சி இறைவனிடமே உள்ளது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்’.
இன்றைய உலகில் சாதிப்பூசல்களும், மதப் பூசல்களும் ஏற்படுவதற்கு முழு முதற்காரணம் சாதித்தலைவர்களை அவமானப்படுத்துவதும், மத அடையாளங்களையும், பிறர் வணங்கும் இறைவனை கொச்சைப்படுத்துவதும் தான். இத்தகைய சாதிப் பூசல்களையும், மதப் பூசல்களையும் 1434 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்துக் காட்டியது.
எவரும் பிறமதக் கடவுளையோ, பிற சாதித் தலைவர்களையோ கொச்சைப்படுத்தி சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்தக் கூடாது. அவரவர் மதம் அவரவருக்கு அழகு! அவர் வழி அவருக்கு, இவர் வழி இவருக்கு! பிறர் வழியில் யாரும் தீங்கு விளைவிக்கக் கூடாது என பல் சமய நல்லிணக்கத்தை இஸ்லாம் உறுதியாக கடைப்பிடிக்கிறது.
‘உங்களுக்கு உங்களுடைய மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்.
‘நீர் கூறுவீராக: இந்தச் சத்திய வேதம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது. ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பட்டும். விரும்பாதவர் அதனை நிராகரிக்கட்டும்’.
ஒருவர் விரும்புகிற மதத்தைத் தழுவ அரசியல் சட்டப்படி அடிப்படை உரிமை இருக்கிறது. இதற்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது சமய நல்லிணக்கத்துக்கும், சுதந்திரத்துக்கும் எதிரானதல்லவா? விரும்புவோர் விரும்பலாம், விரும்பாதோர் நிராகரித்து விடலாம் என்று திருக்குர்ஆன் காட்டும் தீர்வு நடுநிலையானதல்லவா?
‘மனிதர்களில் சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும், கிறிஸ்தவக் கோவில் களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திருநாமம் தியானிக்கப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டு போயிருக்கும்’
எந்தச் சமயத்தவரின் ஆலயமாக இருப்பினும் அது பாதுகாக்கப்பட வேண்டும். அது அல்லாஹ்வுக்கே செய்யும் உதவி. தனக்கு உதவுவோருக்கு இறைவன் உதவுவான் என்பது திருக்குர்ஆன் தெரிவிக்கும் ஒப்பற்ற சமய நல்லிணக்க வழிகாட்டுதல் ஆகும்.
ஒரு தடவை ஏமன் நாட்டில் உள்ள நஜ்ரான் மாவட்டப் பகுதியில் இருந்து முஹம்மது நபியை பேட்டிகண்டு இஸ்லாமிய மத போதனையை அறியும் முகமாக கிறிஸ்தவ பாதிரிமார்களில் சிலர் வருகை தந்தனர். பேட்டியினிடையே பாதிரிகள், அவர்களது மத ஆச்சாரப்படி இறைவன் வணங்கும் நேரம் வரவே, தாங்கள் ஜெபம் செய்ய அதற்கு வசதி வாய்ப்பு செய்து தரும்படி நபியிடம் வேண்ட, நபி (ஸல்) தமது மஸ்ஜிதுன் நபவியில் ஒரு இடத்தை கொடுத்து, அவர்களை அவர்களது முறைப்படி வணங்க அனுமதித்து, சமய நல்லிணக்கத்தை நபி ஸல் கட்டிகாத்தார்கள்.
ஒரு சமயம் உமர் ரலி அவர்கள் பைத்துல் முகத்தஸ் என்ற புனித நகரைப் பெறுவதற்காக அங்கு சென்றிருந்தபோது கிறிஸ்தவ ஆலயமொன்றை அடைந்தார்கள். அப்பொழுது தொழுகை நேரம் வந்தது.
உமரை அழைத்துச் சென்ற கிறிஸ்தவ அறிஞர்கள் ‘இங்கேயே தாங்கள் தொழுது கொள்ளலாம்’ என்றார்கள். அதற்கு உமர் ரலி‘இது உங்களது ஆலயம். இங்கு நான் தொழுது முன் மாதிரியைக் காட்டிவிட்டால் அது பிற்காலத்தில் பிரச்சினை ஆகிவிடும்’ என்று கூறி பொது இடத்திற்குச் சென்று தொழுது, சமூக நல்லிணக் கம் நிலவ பாடுபட்டார்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails