Saturday, November 12, 2016

காங்கோ பயணக்குறிப்பு ....!


ராஜா வாவுபிள்ளை
குள்ளமனிதர்கள் தொடர்ச்சி.சொல்லில் அடங்காத சுவாரஸ்ய செய்திகளை கொண்டுள்ள குள்ளமனிதர்களின் வாழ்வின் விபரங்களை எழுதிவரும் இக்கட்டுரைத் தொகுப்பில் கழிந்த பதிவில் குள்ளமனிதர் குடும்பத்தில் இளம்வயதினரின் திருமண வைபோகங்கள் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பார்த்தோம்.
இந்த பதிவில் திருமணமான இளம் தம்பதியர் தனியாக தங்கள் இல்லறத்தை எவ்வாறு அமைத்துக் கொள்கிறார்கள் என்று பார்ப்போமா ?
கோலாகலமாக நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும் மணமகன் மணப்பெண்ணை தனது தாய்தந்தையுடன் வசித்துவந்த பாரம்பரிய வீட்டிற்கு அழைத்துச்சென்று அதன் அருகிலேயே ஒருசிறு குடிலை அமைத்து தமது தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் வீட்டிற்கு வந்த மாட்டுப்பெண்ணிற்கு மாமியார் குடும்பம் நடத்தும் கலையையும் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் வாழ்ந்துகாட்டுதல் மூலமாக படிப்பித்துக் கொடுப்பார்.

மணமகனின் தாய் தந்தையர் மணமகளின் வாழ்க்கைப் பாடத்தின் செய்முறைகளில் முழுவதுமாக நம்பிக்கை வந்ததும் இதுவரை மணமக்களாக இருந்தவர்களை கணவன் மனைவியாக அங்கீகரித்து ஆசீர்வாதம் செய்து தனிக்குடித்தனம் செல்ல அனுமதிக்கிறார்கள்.
இதற்கிடையே ஆணானவன் தனது பாரம்பரிய வீட்டிலிலிருந்து தூரமான நல்ல வேட்டைக்கும் தேன் சேகரிப்பிற்கும் வசதியான ஒரு இடத்தில் தங்களது தனிக்குடிலை அமைத்து தனது மனைவியையும் அழைத்து சென்று தங்களது சுகந்திரமான வாழ்க்கையை ஆரம்பம் செய்கின்றனர்.
கல்யாணம் நடந்தவுடன் காலாகாலத்தில் குழந்தையும் உண்டாகும். குள்ளமனிதர்களில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் என்பது அவர்கள் அறிந்திராத ஓன்று ஏனென்றால் இயற்கையாகவே அவர்களது இனப்பெருக்க சக்தி இறைவனால் நல்லமுறையில் அமைக்கப் பட்டுள்ளது.
குழந்தை உண்டான தாயிக்கு நல்ல உயத்தர மாமிச வகைகள், தேன், காய்கறிகள், பலவகைகள் உண்பதற்கு கொடுப்பார்கள். கூடவே இயற்கை தரும் மருந்துகளிலான கசாயங்களும் தயாரித்து தாயும் சேயும் நல்ல ஆரோக்யமாக இருக்க ஆவண செய்கின்றனர்.
ஆகையால் திருமணம் நடந்ததும் இயற்கையாகவே இறையருளால் குழந்தை பேறும் காலம் கனிந்ததும் நடந்து விடுகிறது.
குழந்தை சுகப்பிரசவமாக மருத்துவமனை எதுவும் இல்லாத காட்டிலேயே குடும்பத்து மூத்த பெண்மணிகளின் உதவியுடன் நிகழ்கிறது. குழந்தை பிறந்ததும் தொப்புள்கொடி மூங்கிலாலான சிறுகத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டப்படுகிறது. பிறந்த குழந்தை நன்கு பதப்படுத்தப்பட்ட மான்போன்ற மிருகங்களின் தோலில் வைத்து பாதுகாப்பாக வளர்க்கப் படுகிறது.
எனது காங்கோ பயணக்குறிப்பின் ஒரு பாகமாக குள்ளமனிதர்களின் இயற்கை வாழ்வைப்பற்றி பார்த்து வருகிறோம். அடுத்த பதிவோடு இந்த குள்ளமனிதர்கள் பாகம் முடிவடையும். இதைவிடவும் அதிக சுவாரசியம் கொண்ட வேறுபல நிகழ்வுகளின் தொகுப்பாக மேலும் தொடர எண்ணியுள்ளேன்.
தங்களின் மேலான ஆதரவுக்கு அன்பும் மகிழ்வும் கொண்டவனாக உகாண்டாவில் உங்கள் நண்பன் ராஜா வாவுப்பிள்ளை.
பாகம் 7
தொடரலாம்.


ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails