Sunday, October 18, 2015

சாதனைப் பெண்மணி ஃபஜிலா

சர்வதேச அளவில் சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப் பெண்மணி. அவர் ஃபஜிலா ஆசாத்!  பல நாடுகளுக்கும் சென்று இளைஞர்களுக்கு  தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார் அவர்.

மிருதுவான கவிஞராக, அழுத்தமான கட்டுரை யாளராக, தேர்ந்த நகை வடிவமைப்பாளராக, வசீகரிக்கும் பேச்சாளராக, அனுபவம்மிக்க மனநல ஆலோசகராக இப்படி பல்வேறு பரிணாமங்களுடன் திகழ்ந்துகொண்டிருக்கும் தன்னம்பிக்கைப் பெண்மணி ஃபஜிலா ஆசாத் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். அவரை "இனிய உதயம்' வாசகர்கள் சார்பில் சந்தித்தோம்.

உலக அளவில் சாதனை செய்துவரும் உங்களின் வேர் எது? விலாசம் எது?

ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரைதான் என் தாய்பூமி. இதுதான் நான் வேரூன்றி முளைத்த இடம். என் அப்பா பெயர் உசைன் அப்துல்காதர். முற்போக்கு சிந்தனையாளர். பண்பாளர். அவர்தான் என் ரோல்மாடல். அம்மா, சித்தி சுபைதாவோ வைதீகக் கோட்பாடுகளில் ஊறியவர். என்னோடு பிறந்தவர்கள் ஐந்து பேர். நான்தான் மூத்தவள். குடும்பத்தினரின் அன்பு நீரூற்றில் நனைந்தபடியே வளர்ந்தவள் நான். பள்ளிப் படிப்பில் சுட்டி. பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் நான் பலமுறை மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறேன். ஹமீதியா மெட்ரிக் பள்ளி தமிழ் ஆசிரியை நூர்ஜகான் என் தமிழார்வத்துக்குத் தாய்ப்பால் ஊட்டினார். ஆசிரியை சௌதாவும் என்னை உற்சாகப்படுத்தினார். அதனால் எனது பள்ளி நாட்கள் வண்ணமயமாய் நகர்ந்தன.

பல்வேறு கல்லூரிகளில் படித்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே...?

ஆமாம். பள்ளிக்கல்வியை முடித்து சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் வகுப்பில் சேர்ந்தேன். அங்கு படித்துக்கொண்டிருந்தபோது, அப்பாவின் நண்பரும் கீழக்கரை கல்வி வள்ளலுமான அப்துல் ரகுமான், "கீழக்கரையில் மகளிர் கல்லூரியைத் தொடங்கியிருக்கிறேன். நல்லா படிக்கிற மாணவியான நீ, உன்படிப்பை அங்கவந்து கண்ட்டினியூ பண்ணு'ன்னார். நகரத்தை விட்டுவிட்டு, மீண்டும் கிராமத்தில் போய்ப் படிப்பதா? என்று  நான் திகைக்க, என் அப்பாவோ "நீ உன் திறமையை அங்க போய்க்காட்டு. நீ யாருன்னு அங்க உன்னை நிரூபி'ன்னு சொன்னாங்க. அதனால் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் எனது பி.காம். படிப்பைத் தொடர்ந்தேன். அந்தக் கல்லூரி என் திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்தது. படிப்பில்  முதலாவதாக வந்து, தங்க மெடல் வாங்கினேன். பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி கட்டுரைப் போட்டின்னு  எதையும் விடாமல், எல்லாத்திலும் கலந்துகொண்டேன். இதனால் ஆண்டுதோறும் ஆண்டு விழாக்களின்போது,  40 பரிசுகள் வரை  எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு போட்டிக்கும் நான் பரிசு வாங்கியதைப் பார்த்த, கல்வி வள்ளலான அப்துல் ரகுமான், "எல்லாப் போட்டியிலும் அந்தப் புள்ளதான் பரிசு வாங்கியிருக்கு. அதனால இங்கன மேடையில் அதுக்கு ஒரு சேரைக் கொண்டுவந்து போடுங்க. அதில் உட்கார்ந்தபடி அந்தப் புள்ள பரிசுகளை  வாங்கிக்கட்டும்'ன்னு பெருமையாச் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலிக் கிறது. பின்னர் துபாய் போனபின் அங்கே எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் படித்தேன்.  என்னைப் பொறுத்தவரை நான் வி.ஐ.பி. அல்ல;  அதே சமயம், சாமான்யர்களும் சாதிக்கலாம் என்பதை என் வாழ்க்கை மூலம் உணர்ந்த நான், அதையே பிறருக்கும் உணர்த்திக்கொண்டிருக்கிறேன்.



உங்கள் இலக்கிய ஈடுபாடுகள் பற்றிச் சொல்லுங்கள்?

நான் கவிப்பேரசு வைரமுத்துவின் தீவிர ரசிகை. அவரது கவிதைகள் என்னை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதேபோல் கவிக்கோ அப்துல் ரகுமானும் என்னைக் கவர்ந்தார். இவங்க கவிதைகளைப் படிக்கப் படிக்க,  எனக்குள் ஒரு புதுவித உலகம், தன்  பூங்கதவைத் திறந்துகொண்டது. இயற்கையை, வாழ்க்கையை, அனுபவத்தை கவிதைகளாக எழுத ஆரம்பித்தேன். பள்ளி, கல்லூரி நாட்களில் என் தோழிகளுக்கு வாழ்த்துக் கவிதைகளை எழுதிக்கொடுத்த அனுபவமும் எனக்கு இருந்தது. அதனால் கவிதைகளை ரசித்து ரசித்து எழுதினேன். என் சந்தோஷம், துக்கம், ஆசை, நிராசை எல்லாமும் கவிதை களாய் மலர்ந்தன. என் மனதின் மகிழ்ச்சிக் காகத்தான் நான் கவிதைகளை எழுதுகிறேன்.

நீங்கள் எழுதிய கவிதை வரிகளில் சிலவற்றைச் சொல்லமுடியுமா?

"அதிகாலையில் காரைத் துடைக்கையில்
மனம் வலித்தது;
ரேடியேட்டரில் சில
வண்ணத்துப் பூச்சிகள்!'’
-என்ற என் கவிதை பலரால் பாராட்டப் பட்டிருக்கிறது.
"கொட்டும் மழையில் வியர்க்கிறது
நனைந்துவிடுமோ
அந்தக் குருவிக்கூடு'
-இந்த வரிகளுக்கும் சபாஷ்கள் கிடைத்தன.

உங்களுக்குக் கிடைத்த பாராட்டுகளில் மறக்கமுடியாதது எது?

கவிப்பேரரசு என் "நிலவு ததும்பும் நீரோடை' என்ற கவிதை நூலுக்கு எழுதிய அணிந் துரையில் "ஒரு மெல்லிய மனசின் அதிர்வுகள், இந்தக் கவிதைகள்'ன்னு குறிப்பிட்டதை என்னால் மறக்கமுடியாது. அதே அணிந்துரை யில் "துடிக்கவும் வலிக்கவும் தெரிந்த இதயங் களால்தான் உலகம் உயிர்ப்போடு  இயங்கிக் கொண்டிருக்கிறது'’என என் கவிதைகளின் இதயத் துடிப்பறிந்து பாராட்டியிருக்கிறார் வைரமுத்து. எங்கள் குடும்ப நண்பரான  அண்ணன் லேனா. தமிழ்வாணனும் என்னைப் பாராட்டி என் கவிதைகளுக்கு உற்சாகம் கொடுத்துவருகிறார்.

எதனால் துபாய்க்கு இடம்பெயர்ந்தீர்கள்?

எனது சின்ன வயதிலேயே என் குடும்பம் துபாயில் செட்டிலாகிவிட்டது. படிப்பதற்காக கீழக்கரையில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்கு வந்துவந்து போய்க்கொண்டிருந்தேன். இங்கு கல்லூரிப் படிப்பை முடித்ததும் என் குடும்பம் இருக்கும் துபாய்க்கே போய்விட்டேன். இந்த நிலையில் சிங்கப்பூரில் பிசினஸ் செய்து கொண்டிருந்த அபுல் கலாம் ஆசாத்துக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. அன்பான அக்கறையான கணவர். நீ விரும்பினால் மேலும் படிக்கலாம் என்றார். அதனால் கல்லூரிப் படிப்பைத் தாண்டியும் நிறைய படிக்கத் தொடங்கினேன்.

என்னென்ன படித்தீர்கள்?

கம்ப்யூட்டர் ரகசியங்களைத் திருடுபவர் களைக்  கண்டுபிடிக்க உதவும் "எத்திக்கல் ஹேக்கர்ஸ்' உட்பட, கணிணி குறித்த பல்வேறு பாடங்களைப் படித்தேன். பின்னர், இலங்கையில் ஜுவல் டிசைன்’பற்றிய பயிற்சியை எடுத்துக்கொண்டேன். என் கணவர் கொடுத்துவரும் உற்சாகத்தால், இப்போதும்கூட "பிசினஸ் சைக்காலஜி' படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையே,  மனதையும் அறிவையும் வளப்படுத்தும் திசைகளில் என் ஆர்வம் சென்றதால் லீடர்ஷிப் ஸ்கில் டெவலப்மெண்ட் என்ற தலைமைப் பண்பிற்கான பயிற்சியை,  சிங்கப்பூர் இன்னர் யுனிவர்சிட்டியில் பிரபல நிபுணரான ராபின் சர்மாவின் ஒர்க் ஷாப்பில் எடுத்துக்கொண்டேன்.  அதோடு "குளோபல் ஹேப்பினஸ் அகடமி'யிலும் என்னை இணைத்துக்கொண்டேன். இதன்மூலம் பல அரிய விழிப்புணர்வு வகுப்புகளை சர்வதேச அளவில்  நடத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையே, சிங்கப்பூர் புரோ சாஃப்ட் நிறுவனத்திலும், துபை மொப்சிரா நிறுவனத் திலும், இங்கிருக்கும் பெல்லாரி ஹெக்கோ மினரல்ஸ் நிறுவனத்திலும் உயர் அதிகாரியாக பணியாற்றிய நான், தற்போது பிசினஸ் கண்ட்சல்டண்டாகவும் செயல்பட்டு வருகிறேன். இருப்பினும் இளைஞர்களுக்கு வகுப்பெடுப் பதில் கிடைக்கிற மகிழ்ச்சியே அலாதிதான். காரணம் உலகை நாளை நடத்த இருப்பவர்கள் இளைஞர்கள் தானே.

இளைஞர்களுக்கு வகுப்புகளில் அப்படி என்ன போதிக்கிறீர்கள்?

குளோபல் ஹேப்பினஸ் அகடமியில் என்.எல்.பி. எனப்படும் நியூரோ லிங்கஸ்டிக் புரோகிராமில் வாழ்வியல் பயிற்சியைப்பெற்ற நான், அந்த அகடமியுடன் இணைந்து இளைஞர்களுக்கு தன்னம்பிக்கைக்குரிய ஆலோசனைகளை வழங்கிவருகிறேன்.  அதேபோல் லைஃப் ஸ்கில்ஸ் புரோகிராம் களை கல்லூரி, பள்ளிகளில் நடத்தி மாணவர் கள் மற்றும் இளைஞர் சமுதாயத்துக்கு உற்சாகம் தந்துகொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது புரிதல்தான். ஆனால் பலருக்கு இந்தப் புரிதல் இருப்பதில்லை.  நாம் ஒன்றைச் சொன்னால், அதை எதிராளி மிகவும் அன்பாக, அக்கறையாக, ஆர்வமாகக் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லாதபோது, எதிராளிமீது நாம் கோபம்கொள்கிறோம்.  ஆனால் இது மிகவும் தவறு. முதலில் எதிராளியின் சூழ்நிலையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.  தவறான புரிதல்களால் நாம் நமது உறவுகளை இழக்கிறோம். எனவே புரிதலின் அவசியத்தை நாம் அனைவருக்கும் போதித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



 இளைஞர்கள், ஆற்றல்மிகுந்த சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள் நினைத்தால் இந்த உலகையே புனரமைத்துப் புத்தம் புதிதாய் ஆக்கலாம். பூமிப் பந்துக்கு புதுவண்ணம் கொடுக்கலாம். பிறந்துவரும் நாட்களை எல்லாம் நறுமணமாய் ஆக்கலாம். ஆனால் இன்றைக்கு இருக்கும் பெரும் பாலான இளைஞர்கள் தோல்வியைக்கண்டு துவள்கிறார்கள். வெற்றியை நம்மால் எட்டிப்பிடிக்க முடியுமா? என்று மகிழ்வைத் தொலைத்துவிட்டு துயர இருட்டிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். இது அவர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் மூடநம்பிக்கை. அவற்றை உடைத்தெறியும் வகையில் எனது வகுப்புகள் இருக்கும். அவர்களுக்கு உத்வேகம் தரவே விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துகிறேன். இளைஞர்கள் உற்சாக வீதிகளில் நடக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

தோல்வியை பிரச்சினையாக எண்ணி நாம் மிரளக்கூடாது. அதைப் பாடமாக எடுத்துக் கொண்டு, வெற்றிக்கான வழிகளைத் தேட வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்கி றேன். ஒரு சிறிய கல்லை கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தால், அது பூதாகர மாகத் தோன்றி, எல்லாவற்றையும் மறைக்கும்.  அந்தக் கல்லை கொஞ்சம் தூரத்தில் வைத்துப்பார்த்தால் அது சின்னதுதான் என்பது புரியும். நமக்கு வரும் பிரச்சினைகளும் அப்படிதான். பிரச்சினைகளைப் பெரிதாக எண்ணாமல், அதைத் தூரத்தில் வைத்துப் பார்த்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நாம் எளிதாகக் கடந்துவிடலாம் என்று போதிக்கிறேன். எந்த நிலையிலும்  நாம்  நமது மகிழ்ச்சியைத் தொலைத்து விடக்கூடாது. மகிழ்ச்சி யைத் தக்கவைத்துக் கொள்வது என்பது நமது கையில்தான் இருக்கிறது.

கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, 27 வருடங்கள் சிறையில் புழுங்கிக் கிடந்து வெளியே வந்த நெல்சன் மண்டேலா என்ன சொன்னார் தெரியுமா? வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவித்து வாழவேண் டும் என்று சொன்னார். எனவே துன்பங்கள் வரும் போது, அய்யோ!  இப்படி யாகிவிட்டதே என அதி லேயே சுருண்டு கிடக்கா மல், இந்தத் துன்பம் என்னை என்ன செய்யும்? இதை என்னால் எளிதாகக் கடக்கமுடியும் என்று நம்மை நாம் உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் எல்லாப் பிரச்சினைகளும், எல்லா வலிகளும் நமக்குத் தூசாகிவிடும் என்பதை யெல்லாம் உதாரணங் களோடு எடுத்துச்சொல் வேன்.
நமது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அறிவு வளர்ந்திருந்தால் மட்டும் போதாது, நமது மன உணர்வுகளை நமக்கு கையாளவும் தெரிந்திருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது, தோல்வியில் துவளாது இருப்பது, அதிகாரத்தில் அடக்கமாக இருப்பது போன்றவைதான் மன உணர்வுக் கட்டுப்பாடாகும்.

நாம் கவலையில் முடங்காமல் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டால், மகிழ்ச்சிக்கான எண்டோர்பின் ஹார்மோன் நம் உடலில் அதிகம் சுரக்கும்.  பிரச்சினை களைக் கண்டு பயந்தால், பதட்டத்தையும் துயரத்தையும் உண்டாக்கும் கார்ட்டிசால் ஹார்மோன்தான் நம்மிடம் சுரக்கும். எனவே நாம், நம் மனதை நிர்வாகம் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். பொதுவாக வெற்றிபெற்றவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் அறிவுவளர்ச்சி (ஐ.க்யூ)  20 சதமாக இருப்பதையும் அவர்களின் உணர்வு மேலாண்மை (ஈ.க்யூ- எமோஷனல் இண்டலிஜென்ஸ்) 80 சதமாக இருப்பதையும் ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன. எனவே மன உணர்வை சரியானபடி நம் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, அறிவை சரியாகப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியே நமக்குக் கிடைக்கும். இதையெல்லாம் இளைஞர்கள் மனதில் விதைக்கவேண்டும் என ஆர்வம் கொண்டிருக்கிறேன். இது தவிர இஸ்லாமிய சொற்பொழிவுகளையும் நிகழ்த்திக்கொண்டி ருக்கிறேன்.

பெண்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை?

ஆண்களோடு ஒப்பிடும்போது, உடலளவில் பெண்கள் பலவீனமாக இருந்தாலும் மனதள வில் மிகவும் உறுதியானவர்கள். இதைத்தான் நமது இதிகாசங்களும் புராணங்களும் உணர்த்துகின்றன. தங்கள் கணவர்களுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் சாதிக்கிற ஆற்றல் பெண்களுக்கு உண்டு.

சிலப்பதிகாரத்துக் கண்ணகி, தன் கணவன் கோவலனுக்காக நிமிர்ந்து நீதி கேட்டாள். பாஞ்சாலியோ, தன் குடும்ப மானத்தைப் பறித்தவர்களைப் பழிவாங்கினாள். இதுதான் காப்பியமாகவும் காவியமாகவும் ஆனது. இப்படி வைராக்கியத்திலும் மன உறுதியிலும் பெண்கள் அழுத்தமானவர்கள் என்பதை மேற்சொன்ன கதாபாத்திரங்கள் உணர்த்து கின்றன. இதைப் பெண்கள் புரிந்துகொண்டு, வாழ்க்கையை  எதிர்கொள்ளவேண்டும். சாதனைச் சிகரங்களை தைரியமாக எட்டிப் பிடிக்கவேண்டும்.

கிடைத்த விருதுகள், பரிசுகள் பற்றிச் சொல்லுங்கள்?

எனது செல்லமகன் பெயர் முகமது நாசர். அவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்ததை அடிப்படையாக வைத்து "ஏபிசி மேட் ஈஸி' என்ற நூலை எழுதினேன். இந்த நூலை, தமிழக அரசு 15 ஆயிரம் படிகள் வாங்கி பள்ளிகளுக்கு விநியோகம்செய்தது. இந்த நூலை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அதைப் படித்துவிட்டு நல்லமுயற்சி என பாராட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார். "அழகான தமிழ் எழுத்துப் பயிற்சி' என்ற ஒரு நூலையும் எழுதி நிறைய பாராட்டுகளைப் பெற்றேன்.

இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் "திறந்திடு மனசே' என்ற நூலையும் எழுதினேன். இதை விகடன் பதிப்பகம் வெளியிட்டது. இது நான் படித்த கல்லூரியிலேயே பாடமாக வைக்கப்பட்டது. இதுதவிர தமிழின் முன்னணி இதழ்களிலும் தொலைக் காட்சிகளிலும் என் சிந்தனைகளை தமிழ்ச் சமூகத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

"தினத்தந்தி' நாளிதழ் தங்கப்பெண் பஜிலா என கட்டுரை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது.

துபையில் இருக்கும் தமிழ்நாடு பண்பாட்டுப் பேரவை’குழந்தை நல எழுத்தாளர் என்ற விருதை எனக்கு வழங்கி சிறப்பித்தது. துபை சங்கமம் டி.வி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கலைப்பேரரசி என்ற பட்டத்தை எனக்கு வழங்கி கௌரவித்தது. அமெரிக்காவில் இருக்கும் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்  கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி என்னைப் பெருமைப்படுத்தி இருக்கிறது.

உங்கள் எதிர்கால நோக்கம்?

மனித நேயத்தை வளர்க்கவும், மனித ஆற்றலை ஊக்குவிக்கவும் என்னாலான பணிகளை இனியும் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான்.
நன்றி:நக்கீரன்
Source: http://www.nakkheeran.in/

No comments: