Monday, October 26, 2015

முகநூலும் எழுகின்ற உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது

முகநூல் திண்ணை..11
--------------------------

கணவருக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்து விட்டது..கூடவே பதவி உயர்வு..

ஆனால் அவளுக்கு ஏனோ அவ்வளவு மகிழ்ச்சியில்லை..ஆனால் எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..

புது ஊருக்குப் போன ஒரே மாதத்தில் அவளுக்கு உடலெல்லாம் எரிச்சல்,தோல் அரிப்பு ..

சூடு, அலர்ஜி என்று கணவர் ஆறுதல் சொல்லி மருந்து வாங்கி கொடுத்தாலும் நாளுக்கு நாள் எரிச்சலும் ,அரிப்பும் அதிகமாகிப் போனது...

வேறு வழியின்றி ஒரு தோல் மருத்துவரை சந்தித்த போது

"தோலெல்லாம் அரிக்குது சமயத்துல துணியெல்லாம் கூட ஈரமாகுது.." அவள் டாக்டரிடம் சொன்னாள்..

அவளுடைய பேச்சில் ஒரு வித கோபமும் ,விரக்தியும் கலந்து கிடப்பதை கண்டு கொண்ட டாக்டர் கேட்டார்.

"என்னம்மா பிரச்சினை..எதையாவது மனதில அடக்கி வச்சிருக்கியா வெளியில சொல்ல முடியாததா..?

அதற்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை..

" ஆமாம் டாக்டர் இவருக்கு வேறு ஊருக்கு மாற்றலானதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை..12 வருடமாக பழகிய ஊரை விட்டு போக மனமில்லை.கோபம் கோபமாக வந்தது..என்னுடைய இயலாமையினால் அழுகை வந்தது.. எதையும் என்னால் வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை..அடக்கிக் கொண்டு இருக்கிறேன்."கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது..

"அந்த அடக்கப் பட்ட உணர்வுகள் தான் உடம்பில் எரிச்சலாகவும் பிறகு வியர்வையில் ஈர உறுத்தலாகவும் மாறி மாறி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது..இதை இப்படியே விட்டு விட்டால் அது உங்களை பெரிய மனநோயாளியாக்கி விடும் " என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்

இது ஒரு உண்மை சம்பவம்...


குழந்தைகளாக இருக்கும் போது நம்முடைய உணர்ச்சிகளை உடனுக்குடன் வெளிப் படுத்தி விடுவோம்..

ஆனால் வயது ஆக ஆக சந்தர்ப்ப சூழ்நிலைகள் ,போலியான நிர்ப்பந்தங்கள் இதன் விளைவாக இயல்பாக உணர்வுகளை கூட வெளிப் படுத்த தயங்குகிறோம்..

இப்படி அமிழ்த்தப் படும் உணர்வானது உடலுக்குள் பல நோய்களை உருவாக்குகிறது..

ஆனால் இக் காலக் கட்டத்தில் ஆணாணாலும்,பெண்ணாணாலும் பெரும்பான்மையானவர்களின் மனவோட்டங்களை தீர்க்கும் அரு மருந்தாக இந்த முகநூல் விளங்குகிறது..

வீட்டில் ஏதாவது பிரச்சினையா,சமுதாய பிரச்சினையா,யாரையாவது வசைபாட வேண்டுமா,பாராட்ட வேண்டுமா,மனது சரியில்லையா,உடம்பு சரியில்லையா..

எதுவாக இருந்தாலும் வீட்டில் சொல்கிறார்களோ இல்லையோ முகநூலில் சொல்லி விடுகிறார்கள்..அதை படித்து லைக் கிடைக்கின்ற போது மனதில் இருந்து எதையோ இறக்கி வைத்ததை போன்ற நிம்மதியை அடைகிறார்கள்..

நாலு பேர் நமக்கும் இருக்கிறார்கள்.என்ற தைரியம் மனதளவில் வந்து விடுகிறது...

கதையாகவோ,கட்டுரையாகவோ,
கவிதையாகவோ,புகைப் படங்களாகவோ பல வழிகளில் தங்கள் கோபத்தையும்,
தாகத்தையும் தீர்த்துக் கொள்கிறார்கள்..

அந்த காலத்தில் தலைவன் தலைவிக்கு புறாத் தூது விட்டுக் கொண்டிருந்தான்..இப்போது முகநூல் தூது விட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

கணவன் மனைவிக்கு சொல்வதையும்,மனைவி கணவனுக்கு சொல்வதை கூட முகநூல் பதிவுகள்
மூலமாகஉணர்த்தி
விடுகிறார்கள்..

நேரில் கேட்க தயங்குகின்ற,சொல்ல தயங்குகின்ற விஷயங்களையும் முகநூலில் தயக்கமின்றிச் சொல்லி வைக்கிறார்கள்..

நேரில் சொன்னால் பிரச்சினை ஏற்படுத்தும் விஷயங்களைக் கூட அழகாகச் சொல்லி பலருடைய லைக்குகளையும் வாங்கி

"பார்த்தாயா..நீ சரியில்லை என்று சொன்னாயே..எனக்கும் ஆதரவுக்கு ஆள் இருக்கிறது பார் "

என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறார்கள்..

பெற்றோர்கள் பிள்ளைகளை தன்னுடைய நட்பில் சேர்த்துக் கொண்டு அவர்களின் எண்ண ஓட்டங்களையும் இது போல் தெரிந்து கொள்கிறார்கள்..

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு சொல்ல வேண்டியதையும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டியதையும் மிக அழகாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..

இது போல பலரும் யாருக்காவது ஒரு தகவலைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்...

இதனால் நேருக்கு நேர் போடும் சண்டைகள் இல்லை..கை கலப்புகள் இல்லை..புரிதல்கள் முகநூல் மூலம் மிக அழகாகப் புரிந்துக் கொள்ளப் படுகிறது..

மொத்தத்தில் இக் காலக் கட்டத்தில் உணர்ச்சிகளை அடக்கி வைக்கின்ற தன்மை குறைவாகவே காணப்படுகிறது...

ஆக இந்த முகநூலும் எழுகின்ற உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல...

அளவோடு இருந்தால் இந்த முகநூல் உணர்வுகளும் எல்லா சந்தோஷங்களையும் கொண்டு வரும்...
                                             Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails