Wednesday, August 26, 2015

தோலை உரிச்சுருவேன் !

பள்ளிக்கூடத்தில்
படிக்கும்போது
வாத்தியார் வாயில்
அடிக்கடி உரிபடும் சொல்
தோலை உரிச்சுருவேன் !

சண்டை வந்தால்
நண்பர்கள் கூட சொல்வார்கள் !
அட்டகாசம் செய்தால்
வீட்டிலும் கூட !

வாரந்தோறும்
கசாப்புக் கடையில்
ஆட்டின் தோலையும்
ஹஜ் குர்பானி காலங்களில்
மாட்டுத் தோலையும்
உரிப்பதை
பார்த்திருக்கிறேன் !

காலைக்கடிக்கும்
செருப்புத் தோலை
மிதித்து மிதித்தே
சாகடித்திருக்கிறேன் !

கழற்றி வைக்கப்பட்ட
பாம்புத் தோலைக்கூட
பயமின்றி தொட்டிருக்கிறேன் !

சின்ன வயசில்
கதறிக் கதறி திமிறியும் விடாமல்
காலையும் கையையும்
கட்டிப் பிடித்து
சுன்னத் செய்யப்பட்டு
அதை இழந்துமிருக்கிறேன் !

படிக்கும் வயசில்
சைக்கிள் பழகி
கீழே விழுந்து
அடிபட்டு
தோலெல்லாம் உரிந்து
ரத்தம் வந்த போதும்
வராத அழுகை
இப்போது வருகிறதே !

கோழியை அறுத்து
தோலை உரித்து
வாங்கும்போது
தோலுரிக்கும் வலி தெரியவில்லை !

அரசியல்வாதிகளின்
ஊழல் விவகாரங்களை
தோலுரித்துக் காட்டும்போது
அவர்களுக்கும்
வலித்திருக்கும்தானே ?

தோலை உரித்தால்
எப்படி வலிக்கும்
என்பதை
எங்களுக்கெல்லாம்
உணர வைத்த
வெங்காயமே ...
இனிமேலும்
உன் தோலை உரிக்க
நாங்கள் தயாரில்லை
பிழைத்துப் போ !
Abu Haashima

No comments: