Friday, July 25, 2014

எங்கும் ரத்தம், எங்கும் மரணம் - தி இந்து

எங்கும் ரத்தம், எங்கும் மரணம் - தி இந்து

உலகின் மனசாட்சியை நோக்கி காஸாவிலிருந்து ஒரு மருத்துவரின் குரல்!
உயிருக்கு உயிரான நண்பர்களே, நேற்று இரவு ரொம்பவும் கொடுமை.
எத்தனையெத்தனை மக்கள்! குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை; எல்லோரும்
அப்பாவிப் பொதுமக்கள்; படுகாயமடைந்து, உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய
நடுங்கிக்கொண்டு, செத்துக்கொண்டு வண்டிகளில் மந்தைமந்தையாக ஏறிச்சென்று…
அப்பப்பா! இப்படியொரு நிலைக்குத்தான் இறுதியில் கொண்டுவந்து
விட்டிருக்கிறது இஸ்ரேலியப் படையெடுப்பு.
இங்கே அவசரச் சிகிச்சை ஊர்திகளில் பணியாற்றுபவர்கள்தான் நிஜமான வீரர்கள்.
காஸாவிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் நேரங்காலம் பார்க்காமல் 12-24 மணி
நேரம் கூடப் பணியாற்றுகின்றனர். கொடூரங்கள் நிரம்பிய பணியின் சுமையினாலும்
களைப்பினாலும் அவர்களுடைய முகங்கள் சாம்பல் பூத்துப்போயிருக்கின்றன.
இத்தனைக்கும் ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்குக் கடந்த நான்கு
மாதங்களாகச் சம்பளமே வரவில்லை. இருந்தும், படுகாயமுற்றவர்களிடம் அக்கறை
காட்டுவதிலும், இன்னாருக்கு இன்ன சிகிச்சை என்று தீர்மானிப்பதிலும்,
எப்படிப்பட்ட வீரர்கள் அவர்கள்! அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றையும்
நிதானிக்க முயல்கிறார்கள் அவர்கள்: அதாவது, எண்ணற்ற மனித உடல்கள், வெவ்வேறு

அளவுகள், கைகால்கள், நடப்பவர், நடக்காதவர், சுவாசிப்பவர், சுவாசிக்க
இயலாதவர், நிற்காமல் ரத்தம் வெளியேறிக்கொண்டிருப்பவர், ரத்தப்போக்கு
நின்றிருப்பவர்கள் என்று மனிதர்களின் - ஆம் மனிதர்கள்தான் - பெரும்
குழப்பம், கூச்சலுக்கு இடையில் அந்த வீரர்கள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள
முயல்கிறார்கள். மனிதர்கள்… மனிதர்கள்… மனிதர்கள்! ஆனால், ‘உலக
ராணுவங்களிலேயே மிகவும் நியாயமாக நடந்துகொள்ளும் ராணுவம்(!)' அந்த
மனிதர்களை விலங்குகள்போல் மற்றுமொரு முறையும் நடத்தியிருக்கிறது.
காயமுற்றவர்களிடம் நான் கொண்டிருக்கும் மதிப்பு எல்லையற்றது; வலி, வேதனை,
அதிர்ச்சி ஆகியவற்றுக்கு இடையிலும் எவ்வளவு மனஉறுதி அவர்களுக்கு! அதேபோல்,
மருத்துவ ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரையும் எவ்வளவு
மெச்சினாலும் தகும்! பாலஸ்தீனர்களின் மனஉறுதிக்கு மிகவும் நெருக்கமாக
இருந்து பணியாற்றியது எனக்கு வலிமையைத் தருகிறது. இருப்பினும், சில சமயம்
எனக்கு ஓவென்று கத்தலாம் போன்று தோன்றும், யாரையாவது இறுக்கிக்
கட்டியணைத்துக்கொள்ளத் தோன்றும், அழத் தோன்றும், ரத்தத்தில்
தோய்ந்திருக்கும் குழந்தையொன்றின் சருமத்தையோ முடியையோ முகர்ந்து பார்க்கத்
தோன்றும், எல்லோரும் ஒருவருக்கொருவர் அரவணைத்துக்கொள்வதன்மூலம் எங்களைக்
காத்துக்கொள்ளத் தோன்றும். ஆனால், இதையெல்லாம் செய்ய எங்களால் முடியாது,
அவர்களாலும் முடியாது.
ஐயோ, சாம்பல் பூத்த முகங்களே! போதும்! மேலும்மேலும் படுகாயமடைந்து,
உறுப்புகளை இழந்து, ரத்தம் வடிய வந்துகொண்டிருப்பவர்களின் கூட்டத்தை
இனியும் தாக்குப்பிடிக்க முடியாது. ஏற்கெனவே, ரத்த வெள்ளத்தில்
மிதந்துகொண்டிருக்கிறது அவசரச் சிகிச்சை அறை. எங்கெங்கும் ரத்தத்தில்
நனைந்த கட்டுத்துணிகள், ரத்தம் சொட்டச்சொட்டக் குவியலாகக் கிடக்கின்றன.
ஐயோ! சுகாதாரப் பணியாளர்கள் ரத்தத் துணிகளையும், தூக்கியெறியப்பட்ட ரத்தக்
குப்பைகளையும், கொட்டிக் கிடக்கும் முடி, ஆடைகள், மருந்து செலுத்தும்
குழாய்கள் என்று மரணத்தின் மிச்சங்களையெல்லாம் உடனுக்குடன் கூட்டி
அள்ளுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் மறுபடியும் மறுபடியும் நிகழும்.
எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயிருந்து செய்ய வேண்டும். 24 மணி நேரத்துக்குள்
100 பேருக்கு மேல் ஷிஃபா மருத்துவமனையை நாடி வந்திருக்கிறார்கள். எல்லா
வசதிகளையும் கொண்ட பெரிய மருத்துவமனையால் இந்த எண்ணிக்கையை எளிதில்
சமாளிக்க முடியும். ஆனால், இங்கோ, மின்சாரம், நீர், மருந்து மாத்திரைகள்,
கட்டுப்போடுவதற்கான துணிகள், ஊசிகள், தூய்மைச் சாதனங்கள், அறுவைச் சிகிச்சை
மேஜைகள், உபகரணங்கள், உடலியக்கக் கண்காணிப்புக் கருவிகள் என்று எதுவுமே
இல்லை. அருங்காட்சியகமாக மாறிவிட்ட முற்காலத்து மருத்துவமனைகளிலிருந்து
கொண்டுவரப்பட்டவைபோல, துருப்பிடித்தும் குலைந்தும் போய்விட்டன எல்லாம்.
ஆனால், இந்த ஹீரோக்கள் (பணியாளர்கள்) இதைப் பற்றியெல்லாம்
குறைபட்டுக்கொண்டிராமல், அசாதாரணமான மனஉறுதியுடன், போர்வீரர்களைப் போல,
இருப்பவற்றைக் கொண்டு எல்லாவற்றையும் சமாளிக்கிறார்கள்.
எனது படுக்கையில் இருந்தபடி இதையெல்லாம் நான் உங்களுக்கு எழுதும்போது என்
கண்களில் நீர் பெருகுகிறது. கதகதப்பான கண்ணீர், ஆனால் வலியாலும்
வேதனையாலும் கோபத்தாலும் பயத்தாலும் எழும் பயனற்ற கண்ணீர். ஐயோ, இதெல்லாம்
நடக்க வேண்டுமா?
இப்போது இஸ்ரேலின் போர் இயந்திரம் தனது கொடூரமான சிம்பனியை இசைக்க
ஆரம்பிக்கிறது; கரைகளில் இருக்கும் ராணுவப் படகுகளிலிருந்து பீரங்கிகள்
சரம்சரமாகக் குண்டுகளைத் துப்புகின்றன. சீறும் எஃப்-16 ரக போர் விமானங்கள்,
ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள்… இவற்றில் பெரும்பாலானவை
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை, அல்லது அமெரிக்காவால் வழங்கப்பட்டவை.
மிஸ்டர் ஒபாமா உங்களுக்கு இதயம் இருக்கிறதா?
ஒரே ஒரு நாள் ஷிஃபா மருத்துவமனைக்கு வரும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
வந்து, சுகாதாரப் பணியாளர் வேடத்தில் இங்கே ஒரு நாள் மட்டும் இருந்து
பாருங்கள்!
அப்படி இருந்தீர்களென்றால் நிச்சயம் வரலாறே மாறிவிடும் என்று 100% நம்புகிறேன்.
இதயமும் அதிகாரமும் உள்ள யாரும், இந்த ஷிஃபா மருத்துவமனையை
விட்டுச்செல்லும்போது ‘பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து
நிறுத்துவேன்' என்ற முடிவை எடுக்காமல் இங்கிருந்து விடைபெற முடியாது.
ஆனால், இதயமற்றவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் பல்வேறு கணக்குகளைப்
போட்டுப்பார்த்துவிட்டு, காஸா மேல் மற்றுமொரு தாக்குதலுக்குத்
திட்டமிட்டுவிட்டார்கள்.
இதோ இரவு நெருங்குகிறது. இந்த இரவில் ரத்த ஆறு தொடர்ந்து ஓடியபடி
இருக்கும். ஆம், மரண ஆயுதங்களை அவர்கள் முருக்கேற்றுவது எனக்குக்
கேட்கிறது.
தயவுசெய்து, உங்களால் முடிந்த ஏதாவது செய்யுங்கள். இது, நிச்சயம் தொடரக் கூடாது.
- மேட்ஸ் கில்பெர்ட், நார்வே நாட்டைச் சேர்ந்த மயக்க மருந்து
மருத்துவர், பாலஸ்தீனப் போராட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக, பல்வேறு
தருணங்களில் மருத்துவச் சேவை புரிந்திருக்கிறார், புரிந்துவருகிறார்.
தமிழில்: ஆசை
 நன்றி http://tamil.thehindu.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails