Friday, May 24, 2013

5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!

“மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் தரும் தொழில் எனக் கேள்விப்படுகிறேன். பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கின்றன, தண்ணீர் சேமிப்புதான் நாம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினை. 2025ம் ஆண்டில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பெட்ரோலிய நிறுவனங்களைப் போல (கோடிகளில் புரளும்) ஆகிவிட்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ”

- இளைஞர்களிடம் உரையாற்றும் போது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (ஜூலை 17, 2010)

“வாரத்துக்கு சராசரியாக ஐந்து கேன் வாங்குகிறோம். குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கேன் தண்ணீர்தான்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குடும்பத்தலைவி தேவிகண்ணன். இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என்று நாலு பேர் கொண்ட குடும்பம். ஒரு கேன் தண்ணீர் இருபத்தி ஐந்து ரூபாயிலிருந்து, முப்பத்தி ஐந்து ரூபாய் வரை சென்னையில் விற்கிறது. எனவே ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பட்ஜெட்டில் வாரத்துக்கு குறைந்தபட்சம் நூற்றி இருபத்தைந்து ரூபாயாவது குடிநீருக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஐநூறு ரூபாய். வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய்.


வேகமாக வளர்கிறது

’பாக் செய்யப்பட்ட குடி தண்ணீர் இன்று இந்தியாவில் வளர்ந்துவரும் மிகப்பெரிய தொழில் கடந்தாண்டு இந்தியாவில்,அதன் விற்பனை 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகத்தில் மட்டும், 5,000 கோடி. ஆண்டுக்கு 40 முதல் 50 சதவிகிதம் வரை இத்தொழில் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. 1999ல் ஆண்டொன்றுக்கு 1,5 பில்லியன் லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பருகப்பட்டு வந்தது. 2004ல் அது மூன்று மடங்கிற்கும் மேலாக, அதாவது 5 பில்லியன் லிட்டருக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

முன்பு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள் மட்டும் இந்த தண்ணீர் பாட்டில்களை வாங்கிப் பருகி வந்தார்கள். பின் நகர்ப்புற மேல்தட்டு வர்க்கம் அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்தது. இன்று கிராமப்புற மக்கள் கூட தண்ணீர் பாட்டிலுக்கோ, கேனுக்கோ மாறிவிட்டார்கள். ஏழை அடித்தள மக்களின் பர்சைக் குறி வைத்து பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் வருகிறது.

பெட்டிக்கடைகளில் கூட கையடக்கமான பிளாஸ்டிக் சாஷே, 100மிலி பாட்டில் 330 மிலி பாட்டில், 500 மிலி பாட்டில், ஒரு லிட்டர், இரண்டு லிட்டர், 20 லிட்டர், 50 லிட்டர் கேன்கள் எனப் பல அளவுகளில், பல வடிவங்களில், தண்ணீர் சந்தைக்கு வருகின்றன. (இது தவிர டாங்கர் லாரிகளில் மொத்தமாக விற்கப்படும் தண்ணீரைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை) பெட்டிக்கடை, பான் ஷாப்பிலிருந்து, பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், உணவுவிடுதி, பலசரக்குக்கடை, பெரிய மால் என அங்கிங்கிங்கெனாதபடி, எங்கும் கொடி கட்டிப் பறக்கிறது இந்த வியாபாரம். உலகில் பாட்டில் தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று

வியாபாரம் இப்படிச் சக்கை போடு போடுவதால், இந்தத் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் தொழிற்சாலைகளும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. பெய்லி என்ற பிராண்டில் தண்ணீர் விற்கும் பார்லே அக்ரோ நிறுவனம் 29 தொழிலகங்களை நடத்தி வந்தது. அண்மையில் அதை இரட்டிப்பாக, அதாவது அறுபது தொழிலகங்களாக அதிகரித்துள்ளது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழிலகங்கள் அதிகம் தென் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தென் மாநிலங்களிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்தியாவில் உள்ள 1200 தொழிலகங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 600 தொழிலகங்கள் இயங்கி வருகின்றன.

கொள்ளை லாபம்

இத்தனை பெரிய அளவில் பலர் இந்தத் தொழிலில் இறங்கியிருப்பதற்குக் காரணம் தேவை மாத்திரம் அல்ல. லாபமும் ஒரு காரணம். உதாரணத்திற்கு ஜெய்பூர் அருகில் உள்ள காலாதாரா என்ற இடத்தில் கோகோ கோலா நடத்திவரும் தொழிலகத்தை எடுத்துக் கொள்வோம். நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அது 2000-02ம் ஆண்டில் தண்ணீருக்கு செலவிட்ட தொகை வெறும் 5000ரூபாய். 2003ம் ஆண்டில் செலுத்திய தொகை 24,246 ரூபாய். இந்தத் தொகையும் அது சுத்தப்படுத்தும் போது மீந்துவிடும் கழிவுகளை வெளியேற்றியதற்காக மாசுக் கட்டுப்பாரியத்திற்குச் செலுத்திய கட்டணம். தண்ணீருக்கு அது ஏதும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.அதனால் பதினைந்து ரூபாய் விற்கும் ஒரு கின்லே பாட்டிலில் உள்ள தண்ணீருக்கு அதற்காகும் செலவு 0.02-0.03 பைசாக்கள் மட்டுமே.

காசு கொழிக்கிறது என்று மூக்கில் வேர்த்ததுமே களமிறங்கிவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள் . கோகோ கோலா, பெப்சி, நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், டாடா, பார்லே கிங் ஃபிஷர் போன்ற பெரிய இந்தியக் கார்ப்பரேட்கள், சிறிய அளவில் இயங்கும் உள்ளூர் நிறுவனக்கள் என மூன்று வகையான நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இருநூறுக்கும் மேற்பட்ட பெரிய ‘பிராண்ட்’கள் இப்போது சந்தையில் இருக்கின்றன.

ஏன் இந்த நிலைமை?

சுத்தமான குடிநீர் என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதி மன்றம் 2000ம் ஆண்டு டிசம்பர் முதல்வாரம் தீர்ப்பளித்திருக்கிறது. இது நம்முடைய உரிமை மட்டுமல்ல, தன்னுடைய குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அந்தக் கடமையில் நம் அரசுகள் தவறிவிட்டன. தினமும் 1600 இந்தியர்கள் குடிநீர் தொடர்பான நோய்களால் மரணமடைகிறார்கள். குடிநீரால் நோய் பரவும் என்கிற மக்களின் அச்சம்தான் தண்ணீர் வர்த்தகமயமாகிக் கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம்.

“ஒருமுறை என்னுடைய இரண்டு குழந்தைகளும் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது மருத்துவர், குடிநீரால்தான் பிரச்சினை என்றார். எனவேதான் குழாய்த்தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்து கேன் வாட்டர் வாங்க ஆரம்பித்தோம்” என்கிறார் தேவிகண்ணன். இவரைப்போலதான் அனைவருமே பாக்கெட், பாட்டில் மற்றும் கேனில் அடைக்கப்பட்டு வரும் தண்ணீர் பாதுகாப்பானது என்று கருதுகிறார்கள்.

ஆனால் அது உண்மைதானா? அகமதாபாத்தில் உள்ள Consumer Education and Research Society (CERS), என்ற ஒரு நுகர்வோர் அமைப்பு சந்தையில் உள்ள 13 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை எடுத்து வேதியில் மற்றும் நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தியது. 13 பிராண்டுகளில் 10 பிராண்டுகள் தரமானவை அல்ல எனத் தெரியவந்தது . சென்னையில் உள்ள மருத்துவர்களின் கருத்தும் பாதுகாப்பானவை அல்ல என்பதாகத்தான் இருக்கிறது.

தரத்துக்கு உத்திரவாதமா

குடிநீரைப் பாட்டிலில் அடைக்கும் தொழில் குறித்த சட்டங்கள் இந்தியாவில் தெளிவாக இல்லை. தண்ணீர் எந்த முறையில் சுத்தப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்துவதற்கு என்னென்ன வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, என்ன அளவில் பயன்படுத்தப்படுகின்றன போன்ற தகவல்களை அறிந்து கொள்ள நுகர்வோருக்கு உரிமை உண்டு. ஆனால் பல பிராண்ட்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்படுவதில்லை. பாக் செய்து விற்கப்படும் தண்ணீருக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ. முத்திரை அத்தியாவசியமானது. தொழிற்சாலையை தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆராய்ந்து, தயார் செய்யும் தண்ணீரை சாம்பிள் எடுத்து ஆராய்வார்கள். அரசின் தரக்கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே ஐ.எஸ்.ஐ. வழங்கப்படும்.

தண்ணீர் பேக்கேஜிங் செய்யும் ஒவ்வொரு தொழிற்சாலையில் ஓர் ஆய்வுக்கூடம் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு வேதியியல் நிபுணராலோ அல்லது மைக்ரோ பயாலஜிஸ்ட்டாலோ அது நடத்தப்பட வேண்டும். தயாராகும் தண்ணீரின் தரம் அங்கே சோதிக்கப்பட வேண்டும். தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அங்கே திடீர் விசிட் அடித்து சோதிப்பார்கள். தர அளவுகளில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் ஐ.எஸ்.ஐ. முத்திரை திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும். ஆலையை மூடுவதற்கும் கூட அரசுக்கு அதிகாரம் உண்டு.

“இம்மாதிரியான கட்டுப்பாடுகள் அவசியம்தான்” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, அம்பத்தூர் எச்2ஓ ஏஜென்ஸி நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயப்பிரகாஷ்.

“நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வின் பேரில் தரம் குறித்த நம்பிக்கையோடுதான் மக்கள் எங்களிடம் தண்ணீர் வாங்குகிறார்கள். அது சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறதா, நம் அரசின் தர அளவுகோல்களை எட்டியிருக்கிறதா என்பதெல்லாம் மக்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அவர்களது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது” என்கிறார்.

புற்றீசலாய் வளர்ந்துவரும் சிறு சிறு தண்ணீர் தயாரிப்பு தொழிற்கூடங்கள் அரசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இஷ்டத்துக்கும் தண்ணீரை விற்று வருகிறார்கள். நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி போதுமான நெறிமுறைகளை பின்பற்றாமல் அப்படியே விற்று வருகிறார்கள்.

தீர்வு?

முதலில் அரசு இப்பிரச்சினையை தீவிரமாக அணுகவேண்டும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவேண்டியது அரசின் கடமை. தண்ணீரில் குளோரின் கலந்து குழாய் வழியாக சப்ளை செய்வது என்ற வழக்கமான நடைமுறைக்கு வெளியேயும் அது சிந்திக்க வேண்டும்

மெட்ரோ வாட்டர், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அமைப்புக்கள் தண்ணீரைப் பாக் செய்து குறைந்த விலையில் விற்பதைப் பற்றி யோசிக்கலாம். வெளி மார்க்கெட்டில் இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கும் தண்ணீரை அரசு பத்து, பனிரெண்டு ரூபாய்க்கு தருமேயானால் மக்கள் அதை வரவேற்கவே செய்வார்கள் ஆவின் பால் போல, அரசு வீடுதோறும் இந்த பாக்கேஜ்ட் வாட்டரை விற்க முன்வந்தால் அது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களை, கார்ப்ரேட் அரசர்களை, ஒரு கட்டுப்பாட்டில் வைக்கும்.

முடிச்சூர் கிராம ஊராட்சி தானே ஒரு சுத்திகரிப்பு ஆலையை நிறுவி, நீரை சுத்திகரித்து தன் ஊர் மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குகிறது. தமிழ்நாடு அரசே ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதி ஒதுக்கி மற்ற ஊராட்சிகளிலும் இதை மிகச்சுலபமாக செய்ய முடியும்.

தடையின்றிச் சாராயம் கிடைக்கச் செய்ய முடியும் போது தரமான தண்ணீர் தரமுடியாதா?


எக்ஸ்ட்ரா மேட்டர்  1 :

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் உள்ளடக்கச் செலவு...

மூடி : 25 பைசா
பாட்டில் : ரூ 1.50 முதல் ரூ. 2.50
நீர் சுத்திகரிப்பு : 10 பைசா முதல் 25 பைசா
லேபிள் : 15 பைசா முதல் 50 பைசா
அட்டைப்பெட்டி : 50 பைசா
போக்குவரத்து : 10 பைசா முதல் 25 பைசா
மற்றவை : 25 பைசா

மொத்தச் செலவு : ரூ.2.85 முதல் 4.25 வரை
(லேபர், மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் வரி தவிர்த்து)

சந்தையில் நாம் வாங்குவது : ரூ. 10 முதல்

(Source : Centre for Science and Environment தரும் தகவல்களிலிருந்து பல்வேறு இடங்களில் திரட்டியது. இது தோராயமான தொகை. இடத்துக்கு இடம் பல்வேறு காரணங்களால் ஓரளவுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ வேறுபடலாம்)


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீர் பாதுகாப்பானதா? பொதுநல மருத்துவர் டாக்டர் ஜே.பாரத்

சில நிறுவனங்கள் நீரை சுத்தப்படுத்துவதற்கு கெமிக்கல்களை பயன்படுத்துகிறார்கள். நீரை சுத்திகரித்த பிறகு இவற்றை முறையாக நீக்குவதில்லை. இதுபோன்ற நீரை தொடர்ந்து பயன்படுத்தினால் இந்த வேதிப் பொருட்கள் உடலிலேயே படிந்து சிறுநீரக மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தவிர, வைரஸ், பாக்டீரியா, ஸ்போர்ஸ் ( நுண்ணுயிரிகள் அவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்களைச் சுற்றி ஒரு ஒரு கூட்டை (spores) ஏற்படுத்தி அதனுள் இருந்து கொள்ளும். சாதகமான சூழ்ல் இருந்தால் அதை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்). போன்ற நுண்ணுயிரிகள் முறையாக நீக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இதனால் தொற்று நோய்கள் பாதிப்பும் வரலாம்.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து வரப்படும் தரமான நிறுவனங்கள் விற்பனை செய்யும் நீரை பயன்படுத்தலாம். 100 சதவீதம் பாதுகாப்பான நீர் என்றால் அது பாதுகாப்பான நிலையில் இருக்கும் போர்வெல் நீர்தான். மழை நீர் பூமிக்கடியில் செல்ல செல்ல அதில் உள்ள எல்லா கிருமிகளும் அழிந்து சுத்தமான நீராகிவிடும். நிலத்தடி நீர் மாசடையாமல் இருந்தால அதைவிட பாதுகாப்பான நீர் நாம் பயன்படுத்த வேறு எதுவும் இல்லை. கேன் தண்ணீரை கொதி வைத்து பயன்படுத்தினால் நல்லதா டாக்டர் என்று கேட்பார்கள். நாம் அதிகபட்சமாக 100 டிகிரிதான் கொதிக்க வைக்க முடியும். 150 டிகிரி கொதிநிலையிலும் உயிர் வாழும் நுண்ணுயிரிகள் நீரில் உண்டு.

(நன்றி : புதிய தலைமுறை)

எழுதியவர் யுவகிருஷ்ணா
Source : http://www.luckylookonline.com/

No comments: