Internet-of-Things“இன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !
இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.
பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.