*கண்ணோடு
காண்பதெல்லாம்*
- இப்னு ஹம்துன்
முதற்செயலாய்
முகிழ்க்கும்
அந்தத்
தன்வினை
பிற(ர்) வினையாகிறது
முடிவின்
போது.
.
கண்ணீர்
சுரக்காக்
குழந்தையின்
அழுகையும்
கவனிக்கப்படுகிறது.
மெளனம்
நிரப்பும்
முதுமையின்
அழுகையோ
புறக்கணிக்கப்படுகிறது.
ஆனந்தம்
தொடங்கி
அந்திமத்
துயர் வரை
அழுகையில்
உண்டு
ஆயிரம்
வகை.
எல்லாமும்
கண்ணின்
வழியாய்
கசியும்
கடிமனம்.
நீர்த்துவிட்ட
நெஞ்சத்து
உணர்வுகளின்
ஊர்வலம்
என்றா நினைக்கிறீர்கள்?
இல்லை
அழுகையென்பது
இதயமே
கண்களின்
வழி
இறங்கி
வருவது.
புற உலகின்
விளைச்சல்
பெருக
விண்ணீர்
உதவலாம்
அக உலகின்
உளைச்சல்
கழிய
உதவுவது
கண்ணீரே.
நேற்றின்
அழுகை
நாளைய சிரிப்பாவதை
நெஞ்சம்
அறிந்தாலும்
இன்றைய
அழுகையில்
இடறிக்
கிடக்கிறோம்.
துயரத்தோடே
தொடர்பு
என்றாலும்
அதிக மகிழ்வும்
அழுகையைத்
திறக்கிறது.
அதிகத்
துயரோ
அழுகையை
மறக்கிறது.
இயல்பல்லாத
அழுகை
இழிவடைந்து
நிற்க
தொழுகையாகிவிடும்
அழுகை
தூயவனை அடைகிறது.
No comments:
Post a Comment