Tuesday, August 16, 2022

உமையாக்கள் #அத்தியாயம்_பதினாறு அபு ஹாஷிமா

 

#உமையாக்கள்

                   #அத்தியாயம்_பதினாறு

                              அபு ஹாஷிமா


உமையாக்கள் என்ற தலைப்பிலான

இந்தத் தொடரின்

அல்லது நூலின் உயிரோட்டம்

#அஹ்லபைத்துகள்தான் .

அஹலபைத்துகள் என்றால்

நபிகளாரின் குடும்பத்தினரான

ஃபாத்திமா

அலீ

ஹஸன்

ஹுஸைன் ஆகியோர்.

மக்காவில் தோன்றிய

ஹாஷிம் - உமையா

குடும்பத்தார்களின்

ஜீவ மரண போராட்டமே

இந்த நூலின் கரு.

இதன் முதல் பகுதி

16 அத்தியாயங்களோடு

இன்று நிறைவு பெறுகிறது.

இதன் இரண்டாம் பகுதி

ஓரிரு நாட்களில் ஆரம்பமாகும்.

இரண்டாம் பாகத்தில்தான் ..

உமையாக்களின் அதிரடி ஆட்டங்கள்

ஆரம்பமாகும் .

அந்த ஆட்டங்கள்

சாதாரணமான ஆட்டங்கள் அல்ல.

அஹ்லபைத்துகளை கருவறுத்த

உமையாக்களின்

கொலைவெறி ஆட்டம் அது.

அலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிலிருந்து அது ஆரம்பமாகிறது.

                           ***************

ரஸூலே கரீம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்கு பிறகு முதல் கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹஸ்ரத் அபுபக்கர் அவர்கள்  .

அபுபக்கர் ஆயிஷாவின்  தந்தை.

நபிகளாருக்கு ஆயிஷா நாயகியாரை

மணமுடித்துக் கொடுத்து நபிகளின் மாமனார் எனும் அந்தஸ்தைப் பெற்றவர்.

மக்கத்து குறைஷிகளில்

ஒரு சாதாரணக் குடும்பத்தைச்

சேர்ந்தவர்தான் அபுபக்கர்.

ஹாஷிம் , உமையாக் குடும்பங்கள்

அன்றைய நாட்களில் செல்வாக்கு மிகுந்த குடும்பங்களாக இருந்தன.

அபுபக்கர் கலீபாவாக வருவதை

அவர்களில் பலர் விரும்பவில்லை.

மக்களின் மனநிலை அபுபக்கருக்கு எதிராக

மாறி அன்சாரிகள் ஆட்சியை கைப்பற்றி விடுவார்களோ என பயந்தார் உமர் .

நிலமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முதல் ஆளாக

அபுபக்கருக்கு பையத் செய்து

" அபுபக்கரை நான் கலீபாவாக ஏற்றுக் கொள்கிறேன் " என அறிவித்தார்.

அபு பக்கரா

அலீயா

அன்சாரிகளா என பெரும் குழப்பத்தில் இருந்த நபித்தோழர்களில் பலர்

உமரை பின்பற்றி அபுபக்கரை கலீபாவாக ஏற்றுக் கொண்டனர்.

முக்கியமான பல நபித் தோழர்கள்

அபுபக்கரை ஏற்றுக் கொள்ளவில்லை.

அபுபக்கருக்கெதிராக

பெரிய பிரச்சினைகள் எதுவும் அவர் ஆட்சி காலத்தில் ஏற்படவில்லை என்பதும்

குறிப்பிடத்தக்கது.

அபுபக்கரின் ஆட்சி காலத்திலும் ...

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பம்

வறுமையிலேயே வாடியது.

நபியின் குடும்பத்தார் அவ்வளவாக

கண்டு கொள்ளப்படவில்லை.

நபிகளாருக்கு சொந்தமாக இருந்த

ஃபிதஹ் என்ற தோட்டத்தை தங்களுக்குத் தருமாறு ஃபாத்திமா நாயகி அவர்கள்

அபுபக்கரிடம் சென்று கேட்டார்கள்.

நபியின் சொத்துக்கள் வாரிசுகளைச் சேராது என நபிகளாரே கூறியிருப்பதாகக் கூறி அதனை வழங்க அபுபக்கர் மறுத்துவிட்டார்.

அபுபக்கர் அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஹஸ்ரத் உமர் கலீபாவானார்.

அதுவும் அபுபக்கர் அவர்களின் விருப்பப்படியே.

உமர் அவர்கள் தங்கள் மகள் அப்ஸா அவர்களை நபிகளுக்கு மணமுடித்துக் கொடுத்து நபிகளாரின் இரண்டாவது மாமனார் ஆனவர்.

மக்காவின் பிரபலமான கத்தாப் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நபிகளின் உறவினர் .

இஸ்லாத்திற்காக போர்க்களங்களில்

வீரம் காட்டியவர் என பல சிறப்புகள் இருந்தாலும் கூட ...

உமரையும் கலீபாவாக  ஏற்றுக் கொள்ள

பல நபித் தோழர்கள் மறுத்தார்கள்.

என்றாலும் ...

எதிர்ப்புகளை அடக்கி 12 வருடங்கள்

கலீபாவாக இருந்தார் உமர்.

இவரின் ஆட்சி காலத்திலும்

அலீ அவர்கள் ஒதுங்கியே இருந்தார்கள்.

உமரின் மரணத்தைத் தொடர்ந்து

மூன்றாவது கலிபாவாக வந்தவர்

ஹஸ்ரத் உஸ்மான் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் .

நபிகளாரின் அருமை மகளார் ருகையாவையும்

ருகையாவின் மரணத்திற்குப் பிறகு

நபிகளாரின் மற்றொரு மகளான உம்மு குல்தூமையும் மணமுடித்து நபிகளின்

மருமகன் எனும் சிறப்பைப் பெற்றவர்.

மக்காவின் உமையாக் குடும்பத்தின்

மதிப்புமிக்கவர்.

இவருக்கு உமையாக்களின்

ஆதரவு கணிசமாக இருந்தது.

அந்த ஆதரவே அவரது

உயிரையும் பறித்தது.

( இதன் விரிவான செய்திகள் அடுத்து வரும் அத்தியாயங்களில் இடம் பெறும் )

அபூபக்கரை தவிர

உமர்

உஸ்மான்

இரு கலிபாக்களும்

கொலை செய்யப்பட்டே

உயிரிழந்தார்கள் .

கலீபா உஸ்மான் அவர்களின் மரணத்திற்குப் பிறகு மதினா

பெரும் குழப்பத்தின் தத்தளித்தது .

நபித் தோழர்களிடையே

அடுத்த கலிபா யார் என்பதில்

பல கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் ஏற்பட்டது .

பலபேர் கலீபா பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் அவர்களின் முதன்மையாக இருந்தவர் ரஸூலுல்லாவின் அருமை மகளார் பாத்திமா நாயகியாரின் அன்புக் கணவர் அலீ அவர்கள் தான் .

அலீ அவர்கள் நபிகளாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் அருமை மகன் .

அலீ அவர்களின் வரலாறு

அவசியம் சொல்லப்பட வேண்டியது.

சிறு வயதிலேயே நபிகளாரிடம் வளர்ந்து

முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆண் என்ற சிறப்பு அலீ அவர்களுக்கே உண்டு.

இனி வரும்

அத்தியாயங்களில் அலியாரின்

வரலாறு விரியும்.

* இன்ஷா அல்லாஹ்

சந்திப்போம்.

* உமையாக்கள் முதல் பாகம்

No comments: