ரோலக்ஸ்
வாட்ச் காட்டும் காலத்தின் ஞானம்..!
#நிஷாமன்சூர்
நீண்ட பயணத்தின்போது வாசிக்க எப்போதும் இறுக்கமான
நடை கொண்ட புத்தகங்களை எடுத்துச்
செல்வதில்லை. விறுவிறுப்பான
நடையில் சவால்களை எதிர்கொள்ளும் சம்பவங்கள் நிறைந்த நாவல்கள் எனில்
பயணம் நன்றாக இருக்கும். இன்று
சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச்சை எடுத்துக்
கட்டிக் கொண்டேன். அதில் இடம்பெற்றுள்ள வரிகள்தான்
இவை.ஒரு ஜோதிடரிடம் கதாநாயகன்
பேசும்படி அமைந்திருக்கும். "எல்லாம் தீர்மானிக்கப் பட்டவைதான்
எனில் என்னதான் மனிதர்களின் பங்கு ?" என்பான் அவன். மேலும்
"என்னுடைய எண்ணங்கள்தான் என்னை வழிநடத்துகின்றன.என்னுடைய
செயல்கள்தான் எல்லாவற்றிற்கும் காரணம்" என்கிறான்.
அதற்கு
அவர் நிதானமாக ஆனால் உறுதியாகச் சொல்கிறார்
"எண்ணங்களை காலம் தீர்மானிக்கிறது, பிறகு
செயல்கள் மூலம் வழி நடத்துகிறது"
என்று.
எனக்கு
இதையொட்டி சிந்தனை ஓடியது.
“செயல்கள்
அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது."என்பது மிக முக்கியமான
நபிமொழித் தொகுப்பான ஸஹீஹ் புகாரியின் முதல்
நபிமொழி.
அதேசமயம்
"ஒருவனுடைய தீமையான செயல், அவனுக்கு
அழகாகக் காட்டப் படும்போது" என்கிறது
இறைமறை. இதே அர்த்தம் கொண்ட
மேலும் சில இறைமறை வசனங்களும்
உள்ளன. அவை குறிப்பிடும் சேதி
என்னவெனில் "அவனுடைய எண்ணம் அவன்
செய்யும் அநீதியான,தீமையான செயல்களையும் அழகானதாகக்
காட்டிவிடும்" என்பதுதான். இந்த இடத்தில்தான் ஹலால்,ஹராம் அதாவது ஒப்புக்கொள்ளப்பட்ட
நற்செயல்கள்,விலக்கப்பட்ட தீஞ்செயல்கள் தொடர்பான
வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.
நம் அவசரம் கருதி ஒன்வேயில்
பயணிக்கத் தூண்டுகிறது நமது எண்ணம்.ஆனால்
போக்குவரத்து விதிகள் தடுக்கின்றன, மீறிச்
செல்லும் போது அபராதம் செலுத்த
வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்நிலையில் எண்ணம் சொல்வதை நிராகரித்து
நாம் சட்டதிட்டங்களைப் பின்பற்றுகிறோம். அபராதமோ தண்டனையோ இல்லையெனில்
நாம் சர்வசாதாரணமாக விதிகளை மீறத்தான் செய்வோம்.
சரி,
எண்ணங்களைக்
காலம்தான் தீர்மானிக்கிறதா ?
சந்தர்ப்ப
சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன என்று சொல்வோமெனில் அதுவும்
காலம்தான். எனில் காலம்தான் செயல்களைத்
தீர்மானிக்கிறதா ?
இங்கும்
எதிர்படுகிறது ஒரு நபிமொழி,
"அல்லாஹ்
கூறியதாக நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
ஆதமுடைய
மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். (ஆனால்)
நானே காலமாக (காலத்தின் போக்கை
நிர்ணயிப்பவனாக) உள்ளேன். என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன.
இதுவும் புகாரியில்
உள்ள நபிமொழிதான்.
இந்த நபிமொழியில் "நானே காலமாக உள்ளேன்"
என்கிறான் இறைவன்.
அதனால்தான் அந்த இறைவனின் நிழலிலேயே
எப்போதும் இருக்கும் வரத்தை யாசிக்கிறார்கள்
இறைநேசர்கள். பெண் சூஃபிகளில் மிக
முக்கியமானவர்களான அன்னை ராபியத்துல் பஸ்ரியா
அவர்களது பிரார்த்தனை இப்படித்தான் இருந்தது,
"என்
இறைவா,
இவ்வுலகில்
எனக்கு என்னவெல்லாம் தர இருக்கிறாயோ
அவற்றை
உன் எதிரிகளுக்குக் கொடு.
மறு உலகில் எனக்கு என்னவெல்லாம்
தர இருக்கிறாயோ
அவற்றை
உன் நண்பர்களுக்குக் கொடு.
நீ மட்டுமே போதும் எனக்கு."
அவனே எல்லாமுமாக இருக்கும்போது இன்னொன்றும் வேண்டுமோ ?
No comments:
Post a Comment