Tuesday, September 20, 2016

சொல்ல மறந்த வரலாறு (பாகம் – 1)



தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று

என்பது வள்ளுவன் வாக்கு. ஏதோ பிறந்தோம்; ஏனோ வாழ்ந்தோம்; ஏதும் செய்யாமல் மடிந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையின் மகத்துவத்தை உண்மையாய் உணர்ந்து, வரலாற்று சாதனை நிகழ்த்துபவனே இவ்வையகத்தில் பிறந்த பயனை முழுவதுமாக அடைகின்றான்.

வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்

என்று கண்ணதாசன் தன் பாட்டிலே வினா தொடுப்பான். இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் இன்றளவும் எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும் ஒரு மாமனிதனின் பூர்வீகம் நாகூர் என்பது நம்மில் பலரும் அறிந்திராத தகவல்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

என்ற கவிஞர் வாலியின் வரிகளை மெய்ப்பிக்கும் ஒருவர்தான் நம் கட்டுரையின் நாயகன்.


முன்ஷி அப்துல்லாஹ்வின் பெயரை அறியாதவர்கள் சிங்கப்பூர் அல்லது மலேஷியாவில் யாருமே இருக்க முடியாது என்பது என் கருத்து.

“நவீன மலாய் மொழியின் இலக்கியத் தந்தை” என்று உலகளவில் போற்றப்படும் முன்ஷி அப்துல்லாஹ் நாகூரை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற செய்தி நாகூரில் பிறந்த ஒவ்வொரு மனிதனையும் தலை நிமிரச் செய்யும். .

மலேஷியா மற்றும் சிங்கப்பூர் –  இந்த இரு நாடுகளும் இந்த மாமனிதனை பெரிதும் கொண்டாடுகின்றன. காரணம் இவரது நாட்குறிப்பும், நூல்களும், ஆவணத் தொகுப்புகளும் இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் சிங்கப்பூரின் உண்மையான வரலாறே யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கும்

“திரை கடலோடியும் திரவியம் தேடு” என்ற ஒளவை பாட்டியின் வாக்குக்கு ஏற்ப சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேசியா நாடுகளில் குடியேறிய ஒவ்வொரு இந்திய வம்சா வழியினரையும் பெருமை கொள்ள வைத்த மாமனிதர் இவர்.

அப்துல்லாஹ்வின் சுயசரிதம்

முன்ஷி அப்துல்லாஹ்வின் சுயசரிதை
“In reading the lives of great men, I found that the first victory they won was over themselves… self-discipline with all of them came first”

என்று கூறுவார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹார்ரி எஸ். ட்ரூமன். முன்ஷி அப்துல்லாஹ்வின் சுயசரிதையான “ஹிதாயத் அப்துல்லாஹ்” என்ற நூலை நான் வாசிக்கத் தொடங்கியபோது அவருடைய நல்லொழுக்கமும், தன்னடக்கமும், சுயகட்டுப்பாடும்தான் அவரை ஒரு போற்றுதலுக்குரிய மனிதனாய் ஆக்கியது என்ற உண்மையை என்னால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது

மலாக்கா


முன்ஷி அப்துல்லாஹ்வின் பாரம்பரிய வீடு
அரசுடமையாக்கப்பட்ட முன்ஷி அப்துல்லாஹ்வின் பாரம்பரிய இல்லம்
மலேசியாவிலுள்ள 13 மாநிலங்களில் மூன்றாவது சிறிய மாநிலம்தான் இந்த மலாக்கா. இது உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 148 கி.மீ. தொலைவில் மலாக்கா நகரம் அமைந்துள்ளது

முன்ஷி அப்துல்லாஹ் பிறந்து வளர்ந்தது யாவும் மலேசியாவிலுள்ள மலாக்கா என்றாலும் தன்னை நாகூர்க்காரர் என்று சொல்லிக்கொள்வதில் அவருக்கு அளவற்ற பெருமை. தன் குடும்பத்தினர் நாகூரிலிருந்து வந்து குடியேறிய இந்திய வம்சா வழியினர் என்று அவ்வப்போது மார்தட்டிக் கொள்வார்.

முன்ஷி அப்துல்லாஹ், 1797-ஆம் ஆண்டு மலாக்காவிலுள்ள “கெம்பங் பள்ளி” என்ற இடத்தில் பிறந்தார். சந்தேகமே வேண்டாம்;  தமிழ் மொழியில் காணப்படும் பள்ளிவாயில் என்ற வார்த்தையின் சுருக்கம்தான் இந்த “பள்ளி”. தமிழ் மொழி எந்த அளவுக்கு அங்கெல்லாம் அப்போது பரவியிருந்தது என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.  அதன் பிறகு இச்சிற்றூர் “கெம்பங் மஸ்ஜித்” என்று அழைக்கப்பட்டது,  யுனெஸ்கோ நிறுவனத்தினால் உலக பாரம்பரிய தளமாக இச்சிற்றூர் அறிவிக்கப்படுள்ளது. வெறும் ஏழு பாரம்பரிய வீடுகள் மாத்திரமே இந்த கிராமத்தில் உள்ளன

அப்துல்லாஹ் போன்ற அறிவாளிகள் மலாக்காவுக்கு வாய்த்திருந்தபோதிலும் ஏன் “மலாக்கா பேயன்” என்ற சொலவடை என் நண்பர் எழுத்தாளர் ஆபிதீன் போன்றவர்களிடம் மாட்டிக்கொண்டு “லோல்” படுகிறது என்று புரியவேயில்லை.

முன்ஷி அப்துல்லாஹ்வின் வம்சாவழி

அப்துல்லாஹ்வின் தந்தை வழி பூட்டி நாகூரைச் சேர்ந்தவர்.

அப்துல்லாஹ்வின் தாய்வழி பூட்டனார் ஏமன் நாட்டு வணிகர். அவர் பெயர் ஷேக் அப்துல் காதிர்.  அந்தப் பெயரைத்தான் அப்துல்லாஹ்வின் தகப்பனாருக்கும் சூட்டினார்கள்.

அப்துல்லாஹ்வின் பூட்டனார் ஷேக் அப்துல் காதிர் நாகூரில் அரபி பயிற்றுவித்துக் கொண்டிருந்தவர். மார்க்க ஞானம் நிறைந்தவர். அரபு வம்சத்தைச் சார்ந்த இவருக்கு ஊரில் பெருத்த மதிப்பும், மரியாதையும் நாகூர்க்காரர்கள் தந்தார்கள். இவர் மணமுடித்ததும் நாகூரில்தான். மரணித்ததும் நாகூரிலேயேதான்.

இவருக்கு மொத்தம்  நான்கு மகன்கள். 1) முஹம்மது இப்ராஹிம், 2) முஹம்மது லாசா, 3) நூர் முஹம்மது மற்றும் 4) ஜைனுலாபுத்தீன்.

ஷேக் அப்துல் காதிரின் மறைவுக்குப் பின்னர்  அவரது மகன்கள் நால்வரும் வாழ்வாதாரம் தேடி கீழைநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். முஹம்மது இப்ராஹிம் மலாக்கா வந்தடைந்து அந்த ஊரிலிருந்த தமிழ் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த மீரா லெப்பை என்பவரின் மகளார் பெரிய ஆச்சி என்ற பெண்மணியை மணமுடித்துக் கொண்டார். பெரிய ஆச்சி பள்ளிப் படிப்பை முடித்தவர். சமூக நல ஆர்வலர். வீட்டையும் கவனித்துக் கொண்டு அந்த ஊரிலுள்ள பிள்ளைகளுக்கும் கல்வி கற்பித்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்தான் அப்துல்லாஹ்வின் தந்தை ஷேக் அப்துல் காதிர். அப்துல்லாஹ்வின் பூட்டனார் பெயரைத்தான் அப்துல்லாஹ்வின் தந்தைக்கும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அப்துல்லாஹ்வின் உடன்பிறந்த மூத்த சகோதரர்கள் நான்கு பேர். ஐந்தாவதாக தவமிருந்து பெற்ற கடைக்குட்டிதான் நம் கட்டுரை நாயகன் அப்துல்லாஹ்.

சகோதர்கள் நான்கு பேரும் ஒன்றன்பின் ஒன்றாக இளமையிலேயே இறந்து போனார்கள். ஒரு குழந்தை ஆறு மாதத்திலும், அடுத்த குழந்தை ஒரு வயதிலும். மற்றொன்று இரண்டு வயதிலும், இன்னொன்று மூன்று வயதிலும் மரணித்து விட்டன. அடுத்தடுத்து ஏற்பட்ட துயரம் அப்துல்லாஹ்வின் தந்தையார் ஷேக் அப்துல் காதிரை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது. அப்துல்லாஹ்வின் தாயார் குழந்தைகளின் இழப்பில் பித்து பிடித்தவர்போல் ஆகிவிட்டார். வாழ்க்கையே இருண்டது போல் ஆகிவிட்டது அவர்களுக்கு, அழுதழுது அவர் பலமிழந்து போனதுதான் மிச்சம். அக்கால கட்டத்தில் அப்துல்லாஹ் பிறக்கவில்லை. பிறகுதான் பிறந்தார்.

அத்தருணத்தில்தான் ஒரு அரபு நாட்டு மார்க்க அறிஞர் மலாக்கா வந்து சேர்ந்தார். அரபுநாட்டு ஹத்தாத் பழங்குடியைச் சார்ந்த அவரது பெயர் ஹாபில் அப்துல்லாஹ். அவர் மலாக்கா வந்தடைந்த பிறகு மார்க்க ஞானத்தை பெறுவதற்கு அவ்வூரிலுள்ளோர் அவரை நாடிச் சென்றனர்.

அந்த ஊரிலுள்ள ஆடவர், பெண்டிர், குழந்தைகள் உட்பட அனைவரும்  மார்க்க போதனை பெறுவதற்கு அவரை நாடிச் சென்றபோது ஷேக் அப்துல் காதிரின் மனைவி மாத்திரம் வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடந்தார். காரணம், தொடர்ச்சியாக குழந்தைகளை பறிகொடுத்த சோகம் அவரை மிகவும் வாட்டியது, ஏன்தான் தன் வாழ்வில் இப்படியொரு சோகம் என்று அவருக்கு புலப்படவில்லை. குழந்தைகளின் தொடர் இழப்பால் எற்பட்ட மீளாத்துயரில் இருந்து அவரால் அவ்வளவு சீக்கிரம் மீண்டு வர முடியவில்லை. திருமறையை ஓதுவதும், தொழுவதும், அழுவதுமாக ருடைய பொழுது கழிந்தது.

ஷேக் அப்துல் காதிரின் இல்லத்திற்கு  நேர் எதிர் வீட்டில்தான் மார்க்க அறிஞர் ஹாபில் அப்துல்லாஹ் பின் ஹத்தாத் வசித்து வந்தார். சப்தமாக அவரது மனைவி தேம்பி அழும் ஓசை ஒருநாள் அப்பெரியவரின்  காதில் விழுந்தது, அவர் துடிதுடித்துபோனார். அவர்களின் பிரச்சினையை அறிந்து அதற்கு தீர்வு காண  ஷேக் அப்துல் காதிரிடம் நேரில் சந்தித்து பேச விரும்பினார். ஷேக் அப்துல் காதிரின் வீட்டில் ஏற்பட்ட தொடரான துயரச் சம்பங்களை அண்டை வீட்டார் மூலம் அறிந்து அவர் மிகவும் வேதனையுற்றார். ஒருநாள் அவரை நேரில் அழைத்து,

“எதற்கும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அல்லாஹ் போதுமானவன். இறையருளால் சீக்கிரமே உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு அப்துல்லாஹ் என்ற என் பெயரையே வையுங்கள்” என்று ஆசிர்வதித்தார்.

ஷேக் அப்துல் காதிருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஓடோடிச் சென்று தன் மனைவியிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்தார்.

“நீ ஒன்றும் கவலைப்படாதே. நமக்கு நல்ல நேரம் வந்து விட்டது. நாம் பட்ட துயரங்களுக்கெல்லம் விடிவு காலம் பிறந்து விட்டது. நமக்கு ஆறுதலாக இறைவனே  இப்பெரியவரை நம்மிடம் அனுப்பி இருக்கிறான் என்று எண்ணுகிறேன். சீக்கிரமே நமக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கும். அவனை வளர்த்து ஆளாக்கி மிகச் சிறந்த மனிதனாக ஆக்குவேன்” என்று உளம் பூரித்தார்.

அன்றிலிருந்து அவர் மனைவி அழுகையையும் நிறுத்தி விட்டார். அந்த மகான் சொன்னது போலவே நல்வாக்கு பலித்து,  ஷேக் அப்துல் காதிருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  மகான் சொன்னது படியே அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள்

இந்த அப்துல்லாஹ்தான் மலேயா நாட்டு சரித்திரப் புரட்சிக்கு வித்திடப்போகிறார் என்ற ரகசியம் அப்போது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

Jalan Munshi Abdullah

முன்ஷி அப்துல்லாஹ்வின் நினைவாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை
மலேஷியா நாட்டின் ஒரு நெடுஞ்சாலைக்கு இவரது நினைவாக  “ஜாலான் முன்ஷி அப்துல்லாஹ்” என்று பெயர் சூட்டப்படுள்ளது. நம் தமிழகத்தில் சோபன் பாபுவுக்கு கூட சிலை வைப்பார்கள் அது வேறு விஷயம். அங்கு ஒரு மனிதருக்கு இத்துணை வரவேற்பும், கெளரவமும், முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது என்றால் அவர் எப்பேர்ப்பட்ட சாதனை நிகழ்த்தி உள்ளார் என்பதை நம்மால் எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது

அதுமட்டுமல்ல அப்துல்லாஹ்வின் பூர்வீக வீடு மலேஷியா அரசாங்கத்தால் அரசுடமை ஆக்கப்பட்டு பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அப்துல்லாஹ் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனைகள் என்னவென்று ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பாகத்தில் விலாவாரியாக அலசுவோம்.

அப்துல் கையூம்


கட்டுரை தொடரும் (இறைவன் நாடினால்..)
சொல்ல மறந்த வரலாறு (பாகம்-2)
சொல்ல மறந்த வரலாறு – (பாகம் – 3)

References:

Abdullah Abdul Kadir, Munshi. (1969). The Hikayat Abdullah: The autobiography of Abdullah Abdul Kadir, 1797-1854 (pp. 1, 5-26, 31-40, 48-56, 73-75, 103-111, 121, 309). Singapore: Oxford University Press.
Buckley, C. B. (1984). An anecdotal history of old times in Singapore: 1819-1867 (pp. 28-29, 321, 354, 557). Singapore: Oxford University Press.
Dunlop, P. K. G. (2000). Street names of Singapore (p. 216). Singapore: Who’s Who Publication
Shellabear, W. G (Trans). (1918). The autobiography of Munshi Abdullah. Singapore: Methodist Publishing House.
Sng, B. E. K. (1980). In His good time: The story of the church in Singapore, 1819-1978 (pp. 33-34, 54-55). Singapore: Graduates’ Christian Fellowship.
Turnbull, C. M . (1972). The Straits Settlements, 1826-67: Indian presidency to crown colony (p. 17). London: Athlone Press.
A history of Singapore (p. 300). (1996). Singapore: Oxford University Press.
Abdullah Abdul Kadir, Munshi. (1967). Voyage of Abdullah being an account of his experiences on a voyage from Singapore to Kelantan in A.D. 1838. Kuala Lumpur: Oxford University Press.
https://nagoori.wordpress.com/

No comments: